ஒவ்வோர்
ஆண்டும் செப்டம்பர் 8 ஆம் நாளை உலக எழுத்தறிவுநாளாக கொண்டாடி வருகிறோம். இந்த நடைமுறை
எப்போதிலிருந்து கடைபிடிக்கப்படுகிறது? ஏன் செப்டம்பர் 8 ஆம் நாளைத் தேர்ந்தெடுத்தார்கள்?
என்கிற வினாக்கள் ஒவ்வொருவர் மனத்திலும் எழுவது இயல்பான ஒன்று.அதற்கான வரலாற்றுப் பின்னணியை
அறிந்துகொண்டால் மேற்கண்ட வினாக்களுக்கு எளிதில் விடை கிடைக்கும்.
வரலாற்றுப்பின்னணி:
1965 ஆம் ஆண்டு
செப்டம்பர் 8 ஆம் நாள் டெஹ்ரான் நகரில் கூடிய உலகளாவிய கல்வி அமைச்சர்கள் மநாட்டில்
கல்வி சார்ந்த பல்வேறு கருத்துகள் விவாதிக்கப்பட்டு பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அவற்றுள் முக்கியமானது, எழுத்தறிவின் அவசியத்தை அதுகுறித்த விழிப்புணர்வை உலகெங்கிலும்
உள்ள தனிமனிதர்களிடமும் சமூகத்திடமும் ஏற்படுத்தும் விதமாக உலக எழுத்தறிவு நாள் என்றொரு
நாளை யுனெஸ்கோ நிறுவனம் வழியாக அறிவிக்கச்செய்யலாம் என்கிற தீர்மானமாகும். அந்த தீர்மானத்தின்
அடிப்படையில் மாநாடு நடைபெற்ற செப்டம்பர்
8 ஆம் நாளையே உலக எழுத்தறிவு நாளாகக் கடைபிடிக்கலாம் என்று யுனெஸ்கோ அதே ஆண்டில் அறிவித்தது. அதன் அடிப்படையில்
1966 ஆம் ஆண்டிலிருந்து உலக எழுத்தறிவுநாளைக் கொண்டாடி வருகிறோம். இந்த விழிப்புணர்வு
ஏற்படுத்தப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இந்த நாளின் தேவை இன்றும் நமக்கு
அவசியமாகிறது. ஏனெனில் உலகெங்கிலும் பள்ளிக்கு செல்லாமல் 103 மில்லியன் குழந்தைகள்
உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வோர் ஆண்டும் ஒரு மையக்கருத்தின் அடிப்படையில்
எழுத்தறிவு நாளை உலகம் முழுவதும் கொண்டாட வழிகாட்டுகிறது யுனெஸ்கோ. இந்த ஆண்டின் மையக்கருத்து
டிஜிட்டல் உலகில் எழுத்தறிவு என்பதாகும்.
டிஜிடல் உலகில் எழுத்தறிவு:
டிஜிடல் மயமாகிப்போன இன்றைய வாழ்க்கைமுறைக்கேற்ப
எழுத்தறிவு என்பதன் பொருளும் மாறியுள்ளது. டிஜிடல் உலகில் எழுத்தறிவு என்ற மையக்கருத்தின்
அடிப்படையில் இந்த ஆண்டு எழுத்தறிவு நாள் உலகெங்கும் கொண்டாடப்பட இருக்கிறது. அதனை
ஒட்டி பல்வேறு போட்டிகளும் அறிவிக்கப்பட்டு அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கும்
நிறுவனங்களுக்கும் பரிசுகளும் விருதுகளும் வழங்கப்பட இருக்கின்றன.
இரண்டு விதமான
பரிசுகளை யுனெஸ்கோ அறிவித்துள்ளது.
1.The
UNESCO King Sejong Literacy Prize (2 awards) என்னும் இந்த பரிசு1989 ஆம் ஆண்டு முதல்
வழங்கப்படுகிறது தாய்மொழியை வளர்ப்பது அதன் வழியே கல்வியை அளிப்பது என்னும்
நோக்கத்திற்கு முக்கியத்துவம் தருகிறது. கொரிய
அரசின் உதவியோடு இப்பரிசு வழங்கப்படுகிறது.
2.The UNESCO Confucius Prize for Literacy (3 awards) என்னும் இப்பரிசு சீன அரசின் உதவியோடு
2005 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது. கிராமப்புறங்களில் வசிக்கும் வயது வந்தோர்,
பள்ளிகளைவிட்டு வெளியேறியவர்கள் ( அதிலும் குறிப்பாகப் பெண்கள்) ஆகியோரின் கல்வி
வளர்ச்சிக்கு பாடுபடுபவர்களுக்கு இப்பரிசு வழங்கப்படுகிறது.
முதல்வகையில் இருவருக்கும் இரண்டாம் வகையில் மூவருக்கும் என ஐவருக்கு
இப்பரிசு உலக எழுத்தறிவு நாளில் யுனெஸ்கோ நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. பதக்கம்,
பாராட்டுச்சான்றிதழ் மற்றும் 20000 அமெரிக்க டாலர் ஆகியவற்றை உள்ளடக்கியதாக
இப்பரிசு அமைந்துள்ளது. மே மாதத்தில் போட்டிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டதும்
அதற்கான பதிவுகள் வரவேற்கப்படும். ஜூன் மாதத்தில் பரிசீலினைகள் நடைபெறும். ஆகஸ்ட்
மாதத்தில் விருது பெறுபவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டு செப்டம்பர் 8 ஆம் நாள்
பரிசு வழங்கப்படும்.
எழுத்தறிவின் இன்றியமையாமை:
எந்த
மொழியிலும் மிக எளிய உரைநடைகளை எழுதவும் படிக்கவும் தெரியாமையே எழுத்தறிவின்மையாகும் என ஐநாவின் சாசனம்
எழுத்தறிவின்மையை வரையறுக்கிறது.
அனைவருக்கும்
கல்வி பற்றிய உலக அறிக்கை
யை 2006 ஆம் ஆண்டு யுனெஸ்கோ வெளியிட்டது. அந்த அறிக்கையின்படி தெற்கு
மற்றும் மேற்கு ஆசியாப் பகுதிகளிலேயே
மிகக் குறைந்த விகிதத்தினர்
(வயது வந்தோரில்) (58.6%) படிப்பறிவில்லாமல் உள்ளனர். அதற்கு அடுத்த படியாக
உள்ள பகுதிகள் ஆபிரிக்கா (59.7%), அரபு நாடுகள் (62.7%). எழுத்தறிவின்மைக்கும்
நாடுகளின் வறுமைக்கும் உள்ள நெருங்கிய தொடர்பையும்
அந்த
அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. எழுத்தறிவைப் பெறுவதற்கு வருமை தடையாக உள்ளது
என்பதை பல சிற்றூர்களில் இன்றும் காணமுடிகிறது.
எழுத்தறிவுக்கான உலகளாவிய இலக்குகள்:
2030
ஆம் ஆண்டுக்குள் எழுத்தறிவு வளர்ச்சியை உறுதிசெய்வதற்காக சில இலக்குகளை யுனெஸ்கோ தீர்மானித்துள்ளது.
அவற்றை அறிந்துகொள்வது அவசியம்.
·
உலகிலுள்ள
அனைத்து குழந்தைகளுக்கும் தரமான, சமச்சீரான
முற்றிலும் இலவசக் கல்வியை (தொடக்க நிலை முதல் இடைநிலை வரை) உரியவகையில் அளித்தல்.
·
அதற்கு
முன்பாக தொடக்கப் பள்ளிக்கு தயார் படுத்தும் பொருட்டு பள்ளிவயதுக்கு முன்பாக முன் தொடக்க
நிலைக் கல்வியை அதற்கு உரிய வயதுடைய அனைத்துக் குழந்தைகளுக்கும் வழங்குதல்
·
தொழிற்கல்வி,
தொழில்நுட்பக்கல்வி, உயர்கல்வி ஆகிய நிலைகளில் அனைவருக்கும் சம வய்ப்பு அளித்தல்
·
தொழில்
நுட்பத்திறனுடைய இளைஞர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல்
·
கல்வியில்
அனைத்து நிலைகளிலும் பாலின சமத்துவத்தை ஏற்படுத்துதல்
·
அனைத்து
இளைஞர்களும் எழுத்தறிவு பெறுவதை உறுதி செய்தல்
கல்வி
என்பது அறிவு வளர்ச்சி என்ற நிலையையும் தாண்டி அது உலக ஒற்றுமைக்கான ஓர் அடையாளமாகத்
திகழவேண்டும். கற்றோர் தான் பெற்ற அறிவை உலக வளர்ச்சிக்காகப் பயன்படுத்துவதோடு நிலையான
வாழ்கை முறை, மனித உரிமைகள், பாலின சமத்துவம், பண்பாட்டு அமைதி, வன்முறையில்லா வாழ்க்கை
ஆகிய கருத்தை உலக மக்களிடம் ஏற்படுத்தும் நோக்கில்
புதிய செயல் திட்டம் ஒன்றும் வகுக்கப்பட்டுள்ளது.
அதற்கான
மூன்று வழிமுறைகளை யுனெஸ்கோ முன்னிறுத்துகிறது.
1.வலுவான கற்றல் சூழ்நிலை: உலகிலுள்ள மாற்றுத்திறனாளிகள், பெண்குழந்தைகள் உட்பட அனைத்து தரப்பு குழந்தைகளுக்கும் கல்வி கற்பதற்கான
உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல்
2.நிதி உதவி: வளர்ந்து வரும் நாடுகளில் கல்வி பயில்வோர்
எண்ணிக்கையை அதிகரிக்க நிதி உதவி செய்வது.
3.ஆசிரியர்கள் மற்றும் பயிற்றுநர்கள்: வளரும் நாடுகளில் தரமான ஆசிரியர்களின் எண்ணிக்கையை
அதிகரித்தல்
எழுத்தறிவு நாள் உறுதி:
உலக
எழுத்தறிவு நாளில் கல்விசார்ந்த களங்களில் இயங்குபவர்கள் மனப்பூர்வமாக சில உறுதிகளை
நமக்கு நாமே ஏற்றுக்கொண்டு செயல்பட்டால் கற்றோர் நிறைந்த அமைதியான உலக்த்தை உருவாக்கி
போரில்லாத வன்முறையற்ற வாழ்க்கைக்கு அடித்தளமிடுவோம்.
No comments:
Post a Comment