தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Wednesday, March 1, 2017

தேர்வுக்கால உணவுகள்தேர்வுக்கு நன்றாக படிப்பது எவ்வளவு முக்கியமோ அதைவிடவும் முக்கியமானது தேர்வுக்கால உணவுமுறை. சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையலாம். உடல் நலம் சிறப்பாக இருந்தால் மட்டுமே தேர்வுக்கு மாணவர்கள் முழுமையாக தயாராகமுடியும். நம் முழு கவனத்தையும் படிப்பில் செலுத்திட நமக்கு தகுத்தியான உடல் நிலை முக்கியம். நம் உடல் நிலையைத்தீர்மானிக்கும் காரணிகளில் முதன்மையானது நாம் உண்ணும் உணவு ஆகும். உணவு உயிரினும் மேலானது. உணவுக்கும் உயிருக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.அதனால்தான் நம் இலக்கியங்கள் “ உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” எனக்குறிப்பிடுகின்றன.
கோடை தொடங்கும்போதுதான் தமிழகத்தில் பொதுத்தேர்வுகளும் தொடங்குகின்றன. கோடைக்காலத்தின் தொடக்கத்தை இளவேனிற்காலம் என்றனர் நம் முன்னோர். பருவகாலங்களுக்கேற்ப உணவுமுறைகளை மாற்றிக்கொள்ளும் பண்பாடு தமிழர்களிடையே உண்டு. கோடையில் குளிர்ச்சி தரும் உணவுகளை உட்கொள்வது நம் மரபு.எனவே நம் மரபு வழியான உணவுப்பழக்கத்தை நாம் தொடர்ந்திருந்தால் இக்கட்டுரைக்கான தேவையே இல்லை. இன்று ஊர்கள் தோறும், தெருக்கள்தோறும் விரைவு உணவகங்கள் தோன்றி நம் உணவுப்பழக்கத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக மாணவர்களின் உணவுப்பழக்கம்  முற்றிலும் மாறி உள்ளது. வீட்டில் தயாரிக்கும் உணவுகளை விட கடைகளில் விற்கப்படும் கவர்ச்சியான உணவுகளையே மாணவர்கள் விரும்புகின்றனர். குளிர்ச்சி தரும் உணவுகளாக நம் மாணவர்கள் அறிந்திருப்பது குளிர்பானங்களும் ஐஸ்க்ரீம்வகைகளும்தான்.
கோடைக்கேற்ற உணவுகள்:
ஒரு நாளைக்கு இரண்டு முதல் நான்கு லிட்டர் வரை நீர் குடிப்பது கோடையில் அவசியம். இளநீர், மோர், நீராகாரம் போன்ற நீருணவுகளை அவசியம் குடிப்பது கோடைக்கு ஏற்றது. நம் ஊரில் விளையும் சுரைக்காய், பறங்கிக்காய் போன்ற நீர்ச்சத்துள்ள காய்களை உரியமுறையில் சமைத்து உண்ணலாம். உள்ளூரில் கிடைக்கும் எலுமிச்சை பழத்தை சாறு பிழிந்து நீரில்கலந்து குடிப்பது எக்காலத்த்க்கும் ஏற்றது அதிலும் கோடைக்கு மிகவும் ஏற்றது. தேர்வுக்காலத்தில் மலசிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்வது படிப்பில் கவனத்தைக்கூட்டும். எனவே எளிதில் எங்கும் கிடைக்கும் முருங்கைக் கீரையை தேவையான அளவு தினமும் உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது. குழந்தைகள் விரும்பி உண்ணும் வெவ்வேறு வகையில் பெற்றோர் சமைத்துக்கொடுப்பது அவசியம். ஒரே மாதிரி சமைக்காமல் ஒரு நாள் கீரையைத் துவட்டியும் இன்னொருநாள் பருப்போடு சேர்த்து சமைத்தும் மற்றொரு நாள் வாழைப்பூவோடு சேர்த்தோ தேங்காய் சேர்த்தோ சமைப்பது சலிப்பின்றி சாப்பிட ஏதுவாக இருக்கும்.தினம் ஒரு பழம் சாப்பிடுவது அவசியம். நம் மக்கள் பழம் என்றாலே ஆப்பிள் ,ஆரஞ்சு, மாதுளை போன்ற விலை மிகுந்த பழங்களை மட்டும்தான் நினைக்கின்றனர்.நகரத்தில் வசிக்கும் வசதியான மாணவர்கள் அதை உண்டால் நாம், நம் ஊரில் அதிலும் நம் தோட்டத்தில் கிடைக்கும் எளிய பழங்களை உண்பதே போதும். வாழைப்பழம், கொய்யா,நுணா,கோவை பொன்ற எளிய பழங்களே போதும். அதிலும் நுணாப்பழம் உண்பது இன்று கிராமத்து மாணவர்களிடம் கூட இழிவானதாகக் கருதப்படுகிறது. ஆனால் அதை சாறாக்கி நோனி ஜூஸ் என்று பாட்டிலில் அடைத்து விற்றால் அதை வாங்கி குடிப்பது நாகரிகமானது என்கிற மனப்போக்கை நம் ஊடகங்கள் நம்மிடம் ஏற்படுத்தி உள்ளன.
பெற்றோர்கள் கவனித்திற்கு
உடல் உழைப்பை விடவும் மூளை உழைப்பு கடினமானது.மாணவர்கள் தேர்வுக்கு கண் விழித்து படிப்பதனால் உடல் மிகுந்த  சோர்வடைவதோடு உடல் சூடும் அதிகரிக்கும்.எனவே தேர்வுக்கு படிக்கும் மாணவர்களுக்கு அவ்வப்போது தெம்பு அளிக்கும் வகையில் தேவையான சிற்றுண்டிகளை வீட்டில் தயாரித்துக்கொடுப்பது அவசியம். நீரில், ஆவியில் வேகவைத்த எளிதில் சீரணிக்கக்கூடிய உணவுகளைக் கொடுப்பதே நல்லது. இட்டலி, இடையாப்பம், புட்டு போன்ற சிற்றுண்டிகள் சிறந்தவை. இரவில் பாலும் பகலில் பானகமும் ஏற்ற குடிப்புகள். புடலங்காய் வெங்காயம் தக்காளி ஆகியவற்றை சிறு துண்டுகளாக வெட்டி மோரில் ஊரவைத்து தேவையான அளவு உப்பிட்டு காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடையே சாப்பிடக்கொடுக்கலாம். அதுபோல் வெள்ளரிக்காய், நெல்லிக்காய் போன்ற காய்களை கொடுப்புது உடலுக்கு புத்துணர்வு தரும். அவல் ,கடலை மிட்டாய் முளைகட்டிய பருப்புவகைகள் ஆகியவற்றை நொறுக்கு தீனிகளுக்கு பதிலாக உண்ணப் பழக்குவதும் பெற்றோர் கடமை. அளவுக்கு அதிகமாக உணவுகளை பாசம் என்ற பெயரில் திணிப்பதைத் தவிர்க்கவேண்டும். இரவில் அதிக நேரம் கண்விழித்து படிப்பதைத் தவிர்த்து போதிய அளவு ஓய்வு எடுக்க அனுமதிக்கவேண்டும். அவர்கள் விரும்பி உண்பார்கள் என்று சாக்லேட் போன்ற அதிக கொழுப்புடைய உணவுப்பொருள்களை தேர்வு நேரத்தில் தவிர்க்கவேண்டும். சளி பிடிக்காமல் வயிற்றுப்போக்கு ஏற்படாமல் இருக்கும்படி சுற்றுப்புறத்தையும் உணவு உண்ணும் பாத்திரங்களையும் சுகாதாரமாக வைத்துக்கொள்வது அவசியம். மாணவர்களிடம் இருசக்கர வாகனங்களைக் கொடுப்பதையும் தவிர்த்தால் அவர்களுக்கு விபத்து ஏற்படாமல் காக்கலாம். உணவில் ஆறு சுவைகளும் இடம்பெறும்படி சமைத்திட வேண்டும்.
தவிர்க்கவேண்டிய உணவுகள்

குளிர்பானங்களை அவசியம் தவிர்க்கவேண்டும். அதற்கு பதில் பழங்களை சாறுபிழிந்து கொடுக்கலாம். அதை விட பழங்களை அப்படியே உண்பதே சிறந்தது. அசைவ உணவுகள், மசலா நிறைந்த உணவுகளை கட்டாயம் தேர்வு நேரத்தில் தவிர்க்க வேண்டும். பள்ளிக்கு அருகிலோ தெருவிலோ திறந்த வெளியில் விற்கும் உணவுப்பொருள்களை வாங்கி உண்ணாமலிருப்பது அவசியம்.பீசா,நூடுல்ஸ், ஃப்ரைடுரைஸ் ஆகிய விரைவு உணவு வகைகளையும் தேர்வுக்காலத்தில் மட்டுமல்ல எப்போது தவிர்க்கவேண்டும்.  மிகுந்த காரம் , மிகை இனிப்பு ஆகிய சுவையுள்ள உணவுகளைத் தவிர்க்கவேண்டும்.  சிறப்பான உடல் நலத்துடன் தேர்வை எதிர்கொண்டு வேற்றிபெற வாழ்த்துகள்.

No comments:

Post a Comment