தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Saturday, May 30, 2015

நம்ப முடியாத கதை


                                                                        
           
            ஆதியும் பாரதியும் அக்கா தங்கச்சிங்க. பெரியவ ஒம்பதாவது சின்னவ ஆறாவது படிக்கிறாங்க. இவங்க ரெண்டுபேருக்காகத்தான் குடும்பம் நகரத்துக்கு வந்தது. அப்பாவுக்கு தன்னோட பொண்ணுங்கள இந்த நகரத்துலயே பெரிய பள்ளியில சேக்கணும்னு ஆச. அப்படியே செஞ்சாரு. ஆனா அடுத்த ஆண்டே அதவிட பெரிசா ஒரு பள்ளி உருவாச்சு. விடுவாரா? அந்த பள்ளிக்கு மாத்துனாரு பிள்ளைங்கள.
            புது பள்ளியில புத்தகத்துக்கு பதிலா ஒரு டேப் மட்டுந்தான். அதனாலயே இந்த பள்ளியில அதிக பேரு சேந்தாங்க. ஆதியும் பாரதியும் எந்த நேரமும் டேபும் கையுமாவே இருந்தாங்க. நல்லாவும் படிச்சாங்க. ஒவ்வொரு பாடமும் ஒரு அனிமேஷன் படமாவும் அந்த டேபுல இருக்கும். அதனால பிள்ளைங்க பாடங்கள ஆர்வமா கத்துகிட்டாங்க.
            அக்கா தங்கச்சி ரெண்டு பேருக்கும் இப்படிப்பட்ட பள்ளியில படிக்கிறதுல பெருமை. சின்னவளுக்கு செல்ஃபி எடுத்துக்குறதல ஆர்வம். அப்பா எங்க கூப்பிட்டுகிட்டு போனாலும் அங்க ஒரு செல்ஃபி எடுத்து அதைப்பற்றிய குறிப்புகளோட தன்னோட வலைப்பூவுல பதிவு செய்வா.
            அவளோட வலைப்பூவ தமிழ்மணத்துல இணைச்சிருக்கா. அதனால அவளோட வலைப்பூவை பல நாட்டவர் பார்வையிட்டுள்ளனர். அன்றாடம் அவளுக்கு அதுவே ஊக்கமா இருக்கும்.  எந்த நாட்டிலிருந்தெல்லாம் வருகை தந்துள்ளனர் என்று தினமும் பார்த்து மகிழ்ச்சியடைவாள்.
            ஒருநாள் குடும்பத்தோடு கோயிலுக்கு சென்றனர். பாரதிக்கு கோயிலுக்கு செல்லும் ஒவ்வொரு முறையும் ஒரு சிலை முன் செல்ஃபி எடுப்பது பழக்கமாகி விட்டது. இந்த முறை எடுப்பதற்கு ஒரு சிலையும் மிச்சமில்லை. கண்ணில் பட்டது  கோயில் யானை. விடுவாளா அப்பாவிடமிருந்து கைபேசியைப் பிடுங்கிக்கொண்டு ஓடினாள் யானையை நோக்கி. முதலில் கையிலிருந்த ஒரு ரூபாயை யானைக்கு நீட்டினாள். அது வாங்கிக்கொண்டதும் செல்ஃபிக்காக கைபேசியை நீட்டினாள். யானை அதையும் லபக்கென வாங்கிக்கொண்டது. அய்யைய்யோ என்று அவள் கத்திக்கொண்டு யானையிடமிருந்து கைபேசியை பிடுங்கிவிட கையை துதிக்கையை நோக்கி நீட்டுவதற்குள் கைபேசி மாயமானது. இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை உடனே ஓடிவந்தார் அப்பா. கையை துதிக்கைக்குள் விட்டுப் பார்த்தார். ம்ஹூம். யானைப்பாகனிடம் முறையிட அவனும் முயற்சித்துப் பார்த்தான் ஒன்றும் ஆகவில்லை. செய்வதறியாது விழித்தனர்.
 ”சார் ஒன்னும் கவலைப் படாதீங்க நாளைக்கு காலையில வாங்க யானை விட்ட போடும்போது ஒங்க போன் வந்துரும்”
பாகன் கூறிய தீர்வு இவர்களுக்கு நம்பும்படியாக இல்லை. விழித்தபடியே நின்றுகொண்டிருந்தனர்.
”நம்புங்க சார் போன வாரம் இதுமாதிரி ஒரு போன் வாய்க்குள்ள போயி மறுநாள் வெளியில வந்துது”, என்று கூறியதும் கொஞ்சம் நம்பிக்கையோடு சென்றனர். ஆனாலும் அப்பா மகளை ஒரு வார்த்தைகூட கடிந்துகொள்ளவில்லை. மகளுக்குத்தான் மொகம் சோந்து போச்சு. ”அப்பா என்ன மன்னிச்சுடுங்கப்பா. இனிமே இது மாதிரி செய்யமாட்டேன்”.
”நீ என்னடா செய்வ செல்லம். அப்படியே கிடைக்கலன்னாலும் வேற போன் வாங்கிக்கலாம்.”
”அப்போ நான் எடுத்த செல்ஃபி?”
 ”மெமரி கார்டு கூடவா தேராது?” என்று மகளுக்கு ஆதரவாக கேட்டார்.
ஆனாலும் பாரதிக்கு கைபேசி நினைவாகவே இருந்தது. இரவு கனவில் யானையும் கைபேசியும் அவள் எடுத்த செல்ஃபியும் கூடவே யானை விட்டைபோடும் காட்சியும் மாறி மாறி வந்தன.
            காலையில் முதல் வேலையாக அப்பாவை அழைத்துக்கொண்டு கோயிலுக்குப் போனாள். யானை இருக்கும் இடம் நோக்கி விரைந்தனர். அங்கு யானையைக் காணவில்லை. பதறினார்கள் இருவரும். அலுவலகத்தில் விசாரித்தனர். லாயத்திருக்கும் என்று கூறி செல்லும் வழி சொல்ல அங்கு சென்றனர். பாகன் யானைக்கு தென்னை மட்டைகளை தின்னக்கொடுத்தான். அப்பா யானைப்பாகனைப் பார்த்தார் அவனும் இவரைப்பார்த்தான்.
 ”என்ன சார்?” என்று கேட்டான் நேற்று நடந்த எதுவுமே அவனுக்கு நினைவில் இல்லை என்பதுபோலிருந்தது அவன் கேட்டது.
 ”நீங்கதானே காலையில் வரசொன்னீங்க”
“எதுக்கு வரசொன்னேன்?”
”போனை… யானை….” என்று தயங்கினார் அப்பா.
மகள் கண்களை அகலமாக்கிக் கொண்டு நடப்பதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தாலும் அவள் பார்வை யானையின் பின்னாலிருந்தது. திடீரென மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தாள்.
“அப்பா……….” என்று கையை யானையின் பின்னோக்கி நீட்டினாள்.
யனை விட்டை போடத்துவங்கி முடித்தது.  இவர்கள் எதிர் பார்த்ததுபோல் கைபேசி அதிலில்லை.
அப்பா யானைப் பாகனைப் பார்க்க அவருக்கு இப்போதுதான் எல்லாமே நினைவுக்கு வந்தது. ”சார் அந்த விட்டைக்குள்ளதான் இருக்கும்  பாருங்க” என்றார்.
அப்பாவுக்கு கை வைக்க தயக்கம்.
”நீங்க போன் வச்சிருக்கீங்களா?” யானைப்பகனைக் கேட்டார்.
”ஏன் கேக்குறீங்க?”
 ”குடுங்களேன் சொல்றன்” என்றவரிடம் நீட்டினான்.
வாங்கி அப்பா அவர் எண்களை டயல் செய்தார்.
என்ன ஆச்சரியம் விட்டைக்குள்ளிருந்து சிணுங்கியது கைபேசி.
மகள் துள்ளிக்குதித்தாள். யானைப் பாகன் விட்டைக்குள்ளிருந்த கைபேசியை எடுத்து சாணியைத் துடைத்துக்கொடுத்தான்.
அப்பாவுக்கும் மகளுக்கும் நம்பவே முடியல.

உங்களுக்கும்தானே?   

No comments:

Post a Comment