தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Monday, May 28, 2012

பல்லி பயம்




புதிதாகக் கட்டப்பட்ட
நம் வீட்டில்
நாம் குடியேறுவதற்குள்
வந்து நுழைந்து விடுகின்றன
பல்லிகள்

நாம் முதன்முதலாக
வீடிற்குள் அடி வைக்கும்போது
தம் இருப்பைச்சொல்லி
நம்மை வரவேற்கின்றன

அன்று முதல்
பல்லிகள்
நம்மை மேய்க்கத் தொடங்கிவிடுகின்றன

அவை
கிழித்த கோட்டைத் தாண்டுவதில்லை
நாம்

யாதொரு பணியையும்
தொடங்கும் முன்
அவற்றின் சம்மதம் வேண்டி
நிற்கிறோம்

நாம் வெளியில் புறப்படும்போது
விபத்தின்றி திரும்ப
ஆசீர்வதித்தனுப்புகின்றன

நமக்கென்று
சில உதவிகளையும் செய்கின்றன

கொசுக்களை உண்டு
நம்மைத்
தொற்று நோய்களிலிருந்து
காப்பாற்றுவதோடு
சிலந்திகளையும் தின்று
ஒட்டடையற்ற
வீடாகவும் பராமரிக்கின்றன

நாமோ
அவை கதவிடுக்குகளில்
இருப்பதைக் கண்டுகொள்ளாமல்
கதவைச் சாற்றி
வால்களைத் துண்டித்துவிடுகிறோம்

துண்டான வால்
துடிப்பதைப் பற்றியெல்லாம்
கவலைப் படுவதில்லை
பல்லிகள்

குட்டை வால்களை
விரைவிலேயே
வளரச் செய்துவிடுகிறார்
பல்லிகளின் கடவுள்

திருமணத்திற்குத் தயாராகிவிடும்
நம் பிள்ளைகளுக்குத்
துணை தேட
பல்லிகளிடம் ஒப்புதல்
கேட்கிறோம்

தன் துணையை
புணர்ச்சிக்கு அழைக்கிறது பல்லி
அழைப்பொலியைச்
சம்மதமாகக் கருதி வெளியேறுகிறோம் நாம்

பெரிதாகிவிட்ட
பல்லிக்குட்டிகளைப் பார்த்து
பயப்படுகின்றனர்
நம் பேரப்பிள்ளைகள்

ஒரு நாள்
கால் இடறி
நம் தலையில் விழுகிறதொரு பல்லி

மரண பயத்தில்
தலை தெரிக்க ஓடுகிறோம்
குளியலறை நோக்கி.

2 comments:

  1. அருமை அருமை

    அழகாகச் சொன்னீர்கள் நண்பரே..

    ReplyDelete
  2. இயல்பான சொற்கள் ஆனால் அழுத்தமான கவிதை
    ஒரு புதிய நடைப் பாங்கு புதுமையான உள்ளீடு
    வாழ்த்துக்கள்

    ReplyDelete