தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Thursday, November 17, 2011

தினமணி ஆசிரியருக்கு ஒரு மடல்


17.11.2011 இன்று வெளியான தினமணி தலையங்கத்தில் (கீழே உள்ளது)ஆசிரியர்களைப்பற்றி கூறியுள்ள கருத்திற்கு மறுப்பு தெரிவித்து தினமணி ஆசிரியருக்கு எழுதிய மடலை இங்கே பதிகிறேன். 


தலையங்கம்: இதுவல்லவா சட்டம்!

First Published : 17 Nov 2011 04:09:32 AM IST

Last Updated : 17 Nov 2011 11:48:18 AM IST
ஓரே மாதிரியான பாடத்திட்டத்தின் மூலம் சமச்சீர் கல்வி என்று சொல்வதைவிடவும் உண்மையான சமச்சீர் கல்விக்கு அடித்தளம் அமைத்திருக்கிறது தமிழக அரசு வெளியிட்டுள்ள குழந்தைகள் கல்வி கற்றல் உரிமைச் சட்டம் 2009 தொடர்பான அறிவிப்பாணை. ஏற்கெனவே பல மாநிலங்களில் கற்றல் உரிமைச் சட்டம் அமலுக்கு வந்துவிட்டது என்றாலும், தற்போதுதான் தமிழகத்தில் நடைமுறைக்கு வருகின்றது. இதைச் செய்திருக்கும் தமிழக முதல்வருக்கு பெற்றோரும் மாணவர்களும் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளனர்.
தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 விழுக்காடு ஒதுக்கீட்டை கட்டாயமாக்கியிருக்கும் உத்தரவுதான் உண்மையிலேயே சமச்சீர் கல்வியாக இருக்க முடியும். இந்த அறிவிப்பின் மூலம் தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகள் வெறும் வியாபார நிறுவனங்களாக மட்டும் செயல்படுவது தடுக்கப்பட்டிருக்கிறது. இது மக்களின் நன்மைக்காக எனும்போது இந்த நடவடிக்கை மேலும் மகிழ்ச்சியைத் தருகிறது.
தமிழ்நாட்டில் உயர்நிலைப் பள்ளி மற்றும் மேனிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் சரிபாதி மாணவர்கள் அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில்தான் படிக்கின்றனர். தமிழ்நாட்டில் சுமார் 50 லட்சம் மாணவர்கள் மேனிலைப் பள்ளிகளில் படிக்கின்றார்கள் என்றால், இவர்களில் நான்கில் ஒரு பகுதி மாணவர்கள் (12.5 லட்சம் பேர்) மெட்ரிகுலேஷன் பள்ளிகளில், அதாவது தனியார் பள்ளிகளில் படிக்கின்றனர். இதில் 25 விழுக்காடு எனும்போது, சுமார் 3 லட்சம் ஏழை மாணவர்கள் அரசின் இந்த அறிவிக்கையால் பயன்பெறுவார்கள் என்பது உறுதி.
இந்த அறிவிப்பாணையில், ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வருவாய் உள்ள பெற்றோரின் குழந்தைகள் இந்த 25 விழுக்காடு கட்டாய ஒதுக்கீட்டில் சேர்க்கப்பட வேண்டும் என்று அரசு தெரிவித்திருக்கிறது. இந்த ஒரு ஷரத்து தொடர்பாக மிகத் தெளிவான, விரிவான விளக்கங்கள் சேர்த்து ஒரு துணை அறிவிப்பாணை வெளியிடப்பட வேண்டியது மிகமிக அவசியம். இதைத் தமிழக அரசு செய்யும் என்று நாம் எதிர்பார்க்கிறோம்.
ரூ.2 லட்சம் ஆண்டு வருவாய் என்று கணக்கிடும்போது, மாதம் ரூ.16,500 சம்பளம் வாங்குபவரின் குழந்தைகள் இதற்குத் தகுதியுடையவர்களாகிறார்கள். இந்த வருமான வரம்பு சற்று அதிகமானது. ஆகையால் இத்திட்டத்தின் கீழ் ஏழைகள் போட்டிபோடுவது ஒருபுறம் இருக்க, கொஞ்சம் வசதியுள்ளவர்களும், அதிகாரத்தைப் பயன்படுத்தி குழந்தைகளைச் சேர்க்கும் செல்வாக்கு பெற்ற அரசு ஊழியர்களும்கூட இந்த வருமான வரம்புக்குள் வந்துவிடுவார்கள்.
இந்த வருமான வரம்பைக் குறைத்தால், அதற்காக லஞ்சம் கொடுத்து வருவாய்ச் சான்று பெறும் மோசடிகள்தான் நடக்கும் என்பதால், வரம்பைக் குறைக்காமல் யாருக்கு முன்னுரிமை என்பதைப் பட்டியலிடுவதன் மூலம் உண்மையான ஏழைகள் பயன்பெற வழிகாண முடியும். ஏனென்றால், இந்த மாணவர்களின் கட்டணங்களை அரசே ஏற்கப் போகிறது என்பதால், இந்த முறைப்படுத்துதல் அவசியமாகிறது.
ஒரு பள்ளிக்கு வந்துசேரும் விண்ணபங்களைப் பின்வரும் காரணிகள் அடிப்படையில் பிரித்து 25 விழுக்காடு ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கையை நடத்த அரசு முன்வர வேண்டும். குறைந்த சம்பளம் உள்ளவர் குழந்தைக்கு முன்னுரிமை, ஒரு பெற்றோரின் முதல் குழந்தைக்கு முன்னுரிமை, பள்ளிக்கு நடந்துவரும் தூரத்தில் வசித்தால் அந்த மாணவர்களுக்கு முன்னுரிமை என வகைப்படுத்தி, மாணவர் சேர்க்கைக்கு வழிவகுக்க வேண்டியது மிக அவசியம்.
75 விழுக்காடு ஒதுக்கீட்டில் இடம்பெறும் வசதி, செல்வாக்கு இரண்டுமே உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகள் மற்றும் அரசு ஊழியர் குழந்தைகளுக்கு கடைசிபட்சமாகத்தான் மாணவர் சேர்க்கையில் இடம் தரப்பட வேண்டும். அவர்கள் தவிர்க்கப்பட்டால்கூடத் தவறில்லை. அரசுப் பள்ளி ஆசிரியர்களும், அரசு ஊழியர்களின் குழந்தைகளும் அரசுப் பள்ளிகளில் படித்தாக வேண்டும் என்று நிபந்தனை விதித்தால்தான் அந்தப் பள்ளிகள் தரமாகச் செயல்படும் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
25% ஒதுக்கீட்டின்கீழ் வரும் மாணவர்களைத் தனியாக ஒதுக்கி, இரண்டாம்தரமாக நடத்தக்கூடாது என்று மிகவும் கண்டிப்புடன் அரசு சொல்லியிருப்பது, இந்தப் பள்ளிகள் எத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ளும் என்பதை அனுபவத்தால் அரசு உணர்ந்திருக்கிறது என்பதையே காட்டுகிறது.
இந்த அறிவிக்கையை அமல்படுத்தும் முன்பாக, தங்கள் லாபத்தில் துண்டு விழுவதைச் சுட்டிக்காட்டி, மாணவர் எண்ணிக்கையை அதிகரித்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தனியார் பள்ளிகள் நிச்சயமாக முன்வைக்கும். போதுமான வகுப்பறைகள், ஆசிரியர் எண்ணிக்கை இருக்குமானால் அரசு அத்தகைய பள்ளிகளுக்கு கூடுதல் மாணவர்களைச் சேர்த்துக்கொள்ள அனுமதிப்பதில் தவறில்லை.
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பள்ளி நிர்வாகக் குழு அமைக்கும் திட்டத்தை அரசு இந்த அறிவிப்பாணையில் தெரிவித்துள்ளது. இதேபோன்ற பள்ளி நிர்வாகக் குழு ஏன் தனியார் பள்ளிகளிலும் இருக்கக்கூடாது? பள்ளித் தாளாளர் மற்றும் நிர்வாகிகள் பொறுப்புகளை நிர்வகித்தாலும், இந்த 25 விழுக்காடு இடங்களில் சேரும் ஏழைப் பெற்றோர் தங்கள் கருத்துகளை பள்ளி நிர்வாகத்திடம் எடுத்துச் சொல்லும் வாய்ப்பாக இந்த பள்ளி நிர்வாகக் குழு அமையுமே!
தனியார் கல்விக்கூடங்களில் 25 விழுக்காடு இடத்தை உறுதிப்படுத்தியுள்ள தமிழக அரசு, அடுத்ததாக அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் 25 விழுக்காட்டினருக்கு இலவச மருத்துவம் அளிக்க வேண்டிய சட்டத்தையும் ஏன் அமல்படுத்தக் கூடாது?
தனியார் மருத்துவமனைகள் சேவை அளிக்கின்றன என்ற நம்பிக்கையில் நிறைய சலுகைகள் அளிக்கப்படுகின்றன. பொதுமக்களுக்குத் தனியார் மருத்துவமனைகளில் இலவச மருத்துவம் அளிப்பது கடினம் என்ற நிலையில் குறைந்தபட்சம், பள்ளி மாணவர்களுக்கு இலவச மருத்துவத்தைத் தனியார் மருத்துவமனைகள் அளிக்க வழி செய்ய முடியாதா என்ன?
மறுப்பு மடல்
அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்,
இதுவல்லவா சட்டம் என்ற தலையங்கம் படித்தேன். பல சிறந்த யோசனைகளைத் தமிழக அரசுக்குத் தாங்கள் கூறியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.தனியார் பள்ளிகளில் ஏழைகளுக்கு இடம் ஒதுக்குவது குறித்துச் சில பயனுள்ள கருத்துக்களைக் கூறும்போது தேவையில்லாமல் ஆசிரியர்களை வம்புக்கு இழுத்துள்ளீர்கள்.உங்களுக்கு மட்டுமில்லை இந்த சமூகத்திற்கே வாத்தி என்றாலே இளக்காரம்தான். "ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி அதற்கும் இளைத்தவன் பள்ளிக்கூட வாத்தி" என்ற பழமொழி இன்றும் உண்மைதான் என்பதைத் தங்களைப்போன்ற பத்திரிகை ஆசிரியர்களும் நிரூபிப்பதுதான் வேதனை. அரசுப்பள்ளி ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் படிக்க வைக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தால் தான் அரசு பள்ளிகள் தரமாகச் செயல் படும் என்ற பாமரத் தனமான கருத்தைத் தங்களிடமிருந்து எதிர்பார்க்க வில்லை. அரசு மருத்துவர்கள் தங்களின் குழந்தைகளுக்கு உடல் நலமில்லையென்றால் அரசு மருத்துவ மனையில் சேர்த்தால்தான் அவை தரமாக செயல்படும். அமைச்சர்கள் அரசுப் பேருந்தில் பயணம் செய்தால் தான் அவை தரமாக செயல்படும் என்பதைப்போல்தான் உங்கள் கருத்து இருக்கிறது. அரசு நடத்த வேண்டிய கல்வி நிறுவனங்களைத் தனியாரும், தனியார் நடத்திய மதுபானக் கடைகளை அரசும் நடத்திக் கொண்டிருப்பதை விமர்சனம் செய்ய முடியாத நீங்கள் பாவம் ஏன் அப்பாவி ஆசிரியர்களை வறுத்தெடுக்கிறீர்கள். தனியார் பள்ளிகளைப்போல் நுழைவுத்தேர்வு வைத்து தேர்வு பெறும் மாணவர்களைப் பள்ளியில் சேர்த்தால் அரசு பள்ளிகளும் 100 விழுக்காடு தேர்ச்சியைத் தரலாம் என்பது எல்லாருக்கும் தெரிந்த உண்மை. அரசு பள்ளிகளின் நிலைக்கு ஆசிரியர்களை மட்டும் குறை சொல்ல வேண்டாம் என்பதை மட்டும் கனிவோடு கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்,
இரத்தின.புகழேந்தி.
18, தங்கம் நகர்,
பூதாமூர்,
விருத்தாசலம் - 606001.
பேசி : 9944852295


4 comments:

 1. சிந்திக்கவேண்டி ஒன்று தான் முனைவரே..

  ReplyDelete
 2. திரு.புகழேந்தி அண்ணா,

  இதே கருத்து பல காலாமாக பரவலாக பேசப்பட்டே வருகிறது. நீங்கள் முன்வைத்திருக்கும்
  // தனியார் பள்ளிகளைப்போல் நுழைவுத்தேர்வு வைத்து தேர்வு பெறும் மாணவர்களைப் பள்ளியில் சேர்த்தால் அரசு பள்ளிகளும் 100 விழுக்காடு தேர்ச்சியைத் தரலாம் என்பது எல்லாருக்கும் தெரிந்த உண்மை.//

  என்னும் கருத்து உண்மையில் எல்லோருக்கும் தெரிந்திருக்கும் என்பது சற்று மிகையான கருத்தே. அதே நேரம், ஆசிரியத்துறையில் பணியாற்றி வரும் நீங்கள், ஆசிரிய சங்கத்து தலைமையுடன் கலந்தாலோசித்து நம் மாநில கல்வி அமைச்சிற்கு இத்தகவலை கொண்டு செல்லலாமே.

  யாரோ ஒருவரின் சிறுபொறி (நல்ல கருத்து) தானே சமூகத்திற்கு பெரிய மாற்றங்களையும், ஏற்றங்களையும் கொண்டு வந்திருக்கிறது. கல்வித்துறையில் பங்காற்றும் நீங்கள் இது போன்றதொரு நல்ல கருத்தை முன்மொழிய முயற்சிக்கலாமே.

  அந்த ஆவணங்களையும் வலைப்பதிவுகளில் வலையேற்றலாம். பலரது கவனத்திற்கும் கொண்டு செல்லலாம். காலங்கடந்தாவது நல்ல மாற்றங்கள் நிகழலாம்.

  எனதண்ணனாகிய நீங்களும் அரசு பள்ளியில் படித்தவராக தான் இருக்கக்கூடும் என்று நம்புகிறேன். அரசு பள்ளிகளின் இன்றையநிலை தாங்கள் அறியாததல்ல.

  தோழமையுடன்,
  சத்ரியன் (கோபால் கண்ணன், திருப்பத்தூர், வேலூர் மாவட்டம்.)

  ReplyDelete