தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Friday, October 7, 2011

என் ஊர் - விருத்தாசலம்.









யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பாட்டுக்கு சொந்தக்காரர்கள்தான் நாம் என்றாலும், சொந்த ஊரைப்பற்றி நினைக்கும் போது என் ஊர் என்ற பற்றுதல் அடி மனத்திலிருந்து வெளிப்படத்தான் செய்கிறது.
தமிழகத்தின் வரலாற்று சிறப்புமிக்க தொன்மையான  ஊர்களில் விருத்தாசலமும் ஒன்றுமுதுகுன்றம் என்பது விருத்தசலத்தின் பழமையான பெயர். சங்க இலக்கியங்களிலும், கல்வெட்டுகளிலும்   இவ்வூர் முதுகுன்றம் என்றே குறிப்பிடப்படுகின்றது. விருத்தம் என்றால் பழமை, அசலம் என்றால் மலை அதனால் பழமலை என்ற பெயரும் உண்டு இங்குள்ள இறைவனின் பெயர் பழமலை நாதர் அவர் முதுகுன்றீசுவரராகி இன்று விருத்தகிரீஸ்வரராகிவிட்டார். இக்கோயில் மிகவும் பழமையானது. பதிமூன்றரை கோடி ஆண்டுகள் பழமைவாய்ந்த இரிடேசியஸ் வகை சுண்ணாம்புப் பாறைகள் மீது இக்கொயில் கட்டப்பட்டிருப்பதாக நிலவியல் வல்லுனர்கள் கூறுகின்றனர். நம் ஊரின் பெயர் தமிழில் இல்லையே என்பது இவூர் மக்களின் ஆதங்கம் அதனால் ஊர்ப் பெயரைத் தமிழில் மாற்றும் கோரிக்கை சட்டமன்றத்தில் குழந்தை தமிழரசன் உறுப்பினராக இருந்தபோது முன்மொழியப்பட்டு டெல்லி வரை சென்றது. ஆனால் அது நிறைவேறாமல் போனது. அதற்காக  திருமுதுகுன்றம் எழுத்தாளர்கள் கூட்டமைப்பை ஏற்படுத்தி போராடிப்பார்த்து விட்டோம். அரசுகள் அசைந்துகொடுக்கவில்லை.  
            1760 ஆங்கில் ஆட்சியாளர்கள் இக்கோயிலைச் சுற்றி அகழி அமைத்து கோட்டையாக்கினர். அதன் அடையாளமாகத்தான் இன்றும் கோயிலைச்சுற்றியுள்ள வீதிகள் தென்கோட்டை வீதி, வடக்குக்கோட்டை வீதி
என்று குறிப்பிடப்படுகின்றன. 1803 ஆம் ஆண்டு கார்ரோ என்ற ஆங்கில ஆட்சியர் அகழியைத் தூர்த்து மீண்டும் கோயிலாக்கினார் என்ற வரலாறு உண்டு. இக்கோயில் கல்வெட்டுகளை தமிழகத்தொல்லியல் துறை பதிப்பித்துள்ளது.விடுமுறை நாட்களில் நண்பர்களோடு இக்கோயிலில் அமர்ந்து பாடங்களைப் படித்திருக்கிறேன்.
            இங்குள்ள இன்னொரு முக்கியமான கோயில் கொளஞ்சியப்பர் கோயிலாகும். இந்த கோயில் நிலத்தில்தான் அரசு கல்லூரி அமைந்துள்ளது அதனால் கொளஞ்சியப்பர் கலைக் கல்லூரி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
            ஆறு இல்லாத ஊருக்கு அழகு பாழ் என்பார்கள். விருத்தாசலத்தின் அழகை மெருகூட்டுவது  மணிமுத்தாறு. புண்ணிய நதி என்று மக்களால் நம்பப்படுகிறது. இதனால்தான் காசிக்கு வீசம் ஜாஸ்தி விருத்தாசலம் என்பார்கள். கோயிலை ஒட்டிய ஆற்றின் பகுதியை புண்ணிய மடு என்பர். ஒன்பத்தாம் நூற்றாண்டில் சுந்தரர் பழமலை நாதர் மேல் திருப்பதிகம் பாடி பன்னிரண்டாயிரம் பொற்கசுகளைப் பெற்று அக்காசுகளை இப்புண்ணிய மடுவில் இட்டு திருவாரூர் கமலாலயக் குளத்தில் எடுத்ததாகக் கதைகள் உண்டு. மாசி மகத்தன்று மணிமுத்தாற்றில் முன்னோர் வழிபாட்டிற்காக சுற்றியுள்ள கிராமத்து மக்கள் மணிமுத்தாற்றில் கூடுவர். காணும் பொங்கலன்று உள்ளூர் மக்கள் திரளாகக் கூடி சிறுவர்கள் பட்டம் விடுவதையும், பெண்கள் கும்மி யடிப்பதையும் இளைஞர்கள் கபடி ஆடுவதையும் கண்டு களிப்பர். 70 களில் அரசியல் கூட்டங்கள்  மணிமுத்தாற்றில்தான் நடக்கும். எம்.ஜி.ஆர் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்தபோது கண்விழித்திருந்து நள்ளிரவில் நாங்கள் சொற்பொழிவைக் கேட்டதுவும் இந்த மணிமுத்தாற்றில் தான். இன்று மணல் குவாரிகளாலும் கழிவுநீராலும் சிதைந்து கிடக்கிறது மணிமுத்தாறு.
                 தமிழகத்தின் ஒரே பீங்கான் தொழில் நுட்பக்கல்லூரி விருத்தாசலத்தில் தான் அமைந்துள்ளது. அரசு பீங்கான் தொழிற்சாலை மூடப்பட்டாலும் பல தனியார் தொழிற்சாலைகள் வெற்றிகரமாக இயங்கி வருகின்றன. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு பீங்கான் பொருட்கள் இங்கிருந்து அனுப்பிவைக்கப் படுகின்றன.
            பல்லடம் மாணிக்கம் அவர்களின் தமிழ்நூல் காப்பகம் விருத்தாசலத்திற்கு பெருமை சேர்க்கிறது. ஆசிய அளவில் அமைந்துள்ள பெரிய தனி நபர் நூலகங்களில் இதுவும் ஒன்று. இங்குள்ள அரசு நூலகம் பல ஆண்டுகளாக வாடகைக் கட்டடத்தில் இயங்கி வருகிறது பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு இப்போதுதான் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளதுதமிழகத்தின் முக்கியமான் எழுத்தாளர்கள் பலர்  விருத்தாசலத்தில் வசிக்கின்றனர். பல முக்கிய இலக்கியக் கூட்டங்கள் இங்கு நடைபெற்றுள்ளன. திரைத்துறையிலும் இவ்வூர் படைப்பாளிகளின் பங்களிப்பு கணிசமானது.
            திராவிட நாடு பெறும் வரை திருமணம் செய்துகொள்ள மாட்டோம் என்று பெரியாரிடம் ரத்தத்தால் கையெழுத்திட்டு கொடுத்த வாக்குறுதியை சாகும் வரை காப்பாற்றிய கொள்கை மறவர் அண்ணன் ராஜு வாழ்ந்தது இவ்வூரில்தான்.
            கொள்வதும் மிகை கொளாது கொடுப்பதும் குறை படாது என்ற தமிழர்களின் வணிக அறத்தைக் காப்பாற்றும் இவூர் வணிகர்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து இங்கு வந்து குடியேறியவர்கள். சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள இன்றைய தலைமுறையினர் மிகுதியாக இந்த சிறு நகரத்தை நோக்கி வந்து குடியேறிய வண்ணம் உள்ளனர்.
             அண்மையில் இங்கு அமைக்கப்பட்ட புறவழிச்சாலையால் நகரத்தின் பரப்பளவு விரிவடைந்துள்ளது . அதனால் விளை நிலங்கள் வீட்டு மனைகளாகி வருகின்றன. மனைகளின் விலையும் சென்னையைதாண்டி விற்கிறது.குறிப்பாகக் கடலூர் சாலையில் அமைந்துள்ள பெரியார் நகர் கடந்த 10 ஆண்டுகளில் அபரிமிதமாக வளர்ந்துள்ளது . பெரியார் நகரில் பல புதுமைகள் உண்டு இங்குள்ள தெருக்களின் பெயர்களில் சங்ககாலப் புலவர்கள் வாழ்கின்றனர். சங்கப்பலகையும் இங்கு உண்டு. சங்க இலக்கிய்ப்பாடல்களை உரையோடு தினமும் மக்கள் பார்வைக்கு இப்பலகை வழியாகக் கொண்டு செல்கிறார் பழமலை என்ற முதியவர். நடைப்பயிற்சி மேற்கொள்பவர்கள் ஒன்று சேர்ந்து நடைப்பயிற்சி கழகத்தை ஏற்படுத்தியுள்ளனர். புதிதாகத் தோன்றிய புற நகர்கள்தான் உண்மையான சமத்துவத்தை நிலைநாட்டுகின்றன.
இங்கு நடைபெறும் கட்டுமானத் தொழில் சுற்றுவட்டார ஏழை எளிய மக்களுக்கு  வேலை வாய்ப்பினை வழங்குகிறது. காலை 8 மணியளவில் பாலக்கரையில் குவியும் கட்டடத் தொழிலாளர்களே இதற்கு சாட்சி.
            இங்குள்ள மண்டலஆராய்ச்சி நிலையம் முந்திரி, நிலக்கடலை, எள் ஆகிய பயிர்களில் பல புதிய ரகங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. உழவர்களுக்கு பயிற்சியையும் வேலை வாய்ப்பையும் வழங்கி வருகிறது.
            அரசியலிலும் இலக்கியத்திலும் பல திருப்பு முனைகள் நிகழ்ந்தது விருத்தாசலத்தில்தான் எல்லாவற்றுக்கும் மேலாக, கன்னியாகுமரியையும் காஷ்மீரையும் இணைக்கும் தொடர்வண்டிகள் விருத்தாசலம் வழியாகத்தான் செல்கின்றன

2 comments:

  1. என் ஊர், விருத்தாசலம்.............v nice

    ReplyDelete
  2. Nice info..but..
    இந்த ஊரில் மலை எங்கு உள்ளது? குன்றம் என்று அழைக்கப்படுவது நீங்கள் சொல்லும் இரிடேசியஸ் வகை சுண்ணாம்புப் பாறைகள் தாணா?
    thnks

    ReplyDelete