ஏறிவந்த ஏணியை எட்டி உதைக்கின்ற மனிதர்கள் நிறைந்த இந்த உலகத்தில்தான் அதனை நன்றியோடு நினத்துப் போற்றுகிறவர்களும் இருக்கிறார்கள். நம் நாட்டின் எதிர்காலத்தை உறுவாக்குகின்ற வகுப்பரையில் சின்னஞ்சிறு சுட்டிகளாய்ப் பயின்ற அந்த பட்டாம்பூச்சி நாட்கள் ஒவ்வொரு மனித மனத்திலும் என்றும் நீங்காத நினைவுகளாய் பதிந்திருக்கும். மலறும் நினைவுகளாய் நாம் அவ்வப்போது நம்மோடு பயின்ற தோழர்களையும் நமக்குப் பாடம் கற்பித்த ஆசிரியர்களையும் நினைத்துப் பார்த்துக்கொள்வதுண்டு. வயது ஆக ஆக நம் பள்ளிப் பருவத்திற்கு நாம் திரும்பிவிட மாட்டோமா என்கிற ஏக்கம் அதிகரிப்பது தவிர்க்க இயலாதது. நம்மோடு படித்த நம் தோழர்களை மீண்டும் அதே பள்ளியில் சந்தித்தால் மனதுக்கு எவ்வளவு இதமாக இருக்கும். பள்ளிக்கூடம் படம் வெளிவந்த பிறகு இத்தகைய சந்திப்புகள் அதிகரித்து வருவதைக் காணமுடிகிறது. அப்படிச் சந்திப்பவர்கள் அந்த பள்ளிக்கோ பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கோ அங்கு பணியாற்றிய ஆசிரியர்களுக்கோ ஆக்கப்பூர்வமாக ஏதேனும் செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் ஒன்று சேர்ந்து தங்களால் இயன்ற நற்பணியைச் செய்வதுண்டு. நெய்வேலி குளூனி பள்ளியில் பயின்ற இரண்டாவது அணி மாணவர்கள் குளூனி சங்கமம் என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து ஒன்று சேர்ந்தனர். எழுபதுகளில் இரண்டாம் வகுப்பு படித்த மாணவர்கள் இப்போது மருத்துவர்களாகவும் பொறியாளர்களாகவும் ஆசிரியர்களாகவும் தொழில்நுட்ப வல்லுநர்களாகவும் பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் எல்லோரும் குடும்பத்தோடு அந்த விழாவில் பங்கேற்க உற்சாகம் கரை புரண்டு ஓடியது என்றாலும் அவர்களுக்கு மிகவும் பிடித்த பாட்டும் இசையும் கற்றுத்தந்த ஸ்டெல்லா மிஸ் விழாவுக்கு வராதது ஒரு குறையாக இருந்தது. பள்ளியில் விசாரித்தபோது அவர்கள் பெங்களூரிலிருப்பது தெரிய வந்தது. பெங்களூரிலிந்து விழாவுக்கு வந்திருந்த ஆனந்திடம் ஸ்டெல்லா மிஸ் முகவரியைக் கொடுத்து அவர்களை எப்படியாவது தேடிக் கண்டு பிடிக்கச் சொன்னார்கள். அவர் அங்கு சென்ற போது அந்த ஆசிரியை எழுபது வயதைக் கடந்து கவனித்துக்கொள்ள யாருமற்று ஒரு சின்னஞ்சிறு அறையில் தானே சமைத்துக்கொண்டு பேச்சுத்துணைக்குக் கூட மனிதர்களில்லாமல் இரண்டு கிளிகளோடு பேசிக்கொண்டு இன்னலுறுவதைக் காண நேர்ந்தது. உடனே ஸ்டெல்லா மிஸ்ஸின் நிலையை நண்பர்களுக்குக் கூறி நெய்வேலியில் அவருக்கு ஒரு வீடு பார்த்து அங்கு தங்கவைத்து நெய்வேலி நண்பர்கள் அவரை கவனித்துக்கொள்வது என்று ஏற்பாடு செய்து இன்று ஸ்டெல்லா மிஸ்க்கு உதவியாக ஒரு மாணவப் பட்டாளமே அணிதிரண்டு உதவி வருகின்றனர்.

இயக்குநர் செல்வன்

ஆசிரியை ஸ்டெல்லா
இந்த உணர்ச்சி பூர்வமான உண்மைச்சம்பவத்தை மிக அழகான ஆவணப் படமாக்கியிருக்கிறார் நெய்வேலி செல்வன். தங்கள் ஆசிரியரின் பண்பு நலன்களை மாணவர்கள் கூறும் போது நமக்கு மெய்சிலிர்க்கிறது. இப்படிப்பட்ட ஆசிரியரிடம் படிக்க நமக்கு வாய்ப்பு கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் மனதுக்குள் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை. முப்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு தம்மிடம் பயின்ற மாணவர்களின் நிழற்படத்தைப் பார்த்து அவர்களின் பெயர்களை மிகச்சரியாக தலைப்பெழுத்தோடு கிடு கிடுவென ஸ்டெல்லா மிஸ் கூறுவதைக் கேட்கும்போது அந்த மாணவர்களிடம் அவர் கொண்டிருந்த அனபையும் ஈடுபாட்டையும் அறிந்துகொள்ள முடிகிறது. தன்னிடம் படித்த மாணவர் மருத்துவராகி தனக்கே மருத்துவம் செய்கின்ற வாய்ப்பு எத்தனை ஆசிரியர்களுக்குக் கிட்டும், அப்படிக் கிட்டினால் அது அந்த ஆசிரியருக்கு எவ்வளவு மகிழ்ச்சியைத் தரும். அந்த மகிழ்ச்சியைத் தன்னுடைய மாணவர் மருத்துவர் செந்திலின் வாயிலாக ஸ்டெல்லா மிஸ் பெறுவதை நாம் படத்தில் காணலாம். இந்த நிகழ்ச்சிகளையெல்லாம் கதை கூறுவது போல சலிப்பை ஏற்படுத்தா வண்ணம் தன் இனிமையான குரலால் விளக்குகிறார் கமலா சுதன். செந்தில், அமலா,சத்தியதேவன், அனிதாதேவராசன், பாரதி, பாபு, செல்வன் ஆகிய மாணவர்கள் இன்று நெய்வேலியில் அந்த ஆசிரியையை கவனித்துக்கொள்கின்றனர். ஏறத்தாழ ஓராண்டுகாலம் இப்பணியோடு படத்திற்கான ஒளிப்பதிவுப் பணியையும் செய்துள்ளனர் செல்வன்,பிரசன்னா, அரவிந்த், பாரதிக்குமார் ஆகியோர். படம் முடியும்போது ஒலிக்கும் பாரதிக்குமாரின் கவிதை காட்சிகளுக்கேற்ப அமைந்து அழகூட்டுகிறது. தங்களுக்குக் கற்பித்த ஆசிரியைக்கு காலத்தால் அழியாத ஒரு கலைப்படைப்பை உருவாக்கி பெருமைப்படுத்திய இந்த மாணவர்கள் அவரை வாழ்வின் கடைசி காலத்தில் பேணிக்காப்பாற்றி வருவதன்மூலம் இப்படைப்பை மேலும் அழகுபடுத்துகிறார்கள். ஆசிரியர்களை கிள்ளுக்கீரையாக எண்ணி எள்ளி நகையாடும் இன்றைய மாணவ சமுதாயத்தினருக்கு இந்தப் படத்தை அவசியம் திரையிட்டுக் காண்பிக்க வேண்டும். என்ன உங்களுக்கும் ஸ்டெல்லா மிஸ்ஸைப் பார்க்க வேண்டும் போல் இருக்கிறதா? இயக்குநர் செல்வனை 9442470721 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்.
காண்க: தமிழ் ஓசை களஞ்சியம்.