தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Saturday, May 9, 2009

நாம் ஏன் வாக்களிக்க வேண்டும்?

உலகின் மிகப் பெரிய மக்கள் நாயக நாடு இந்தியா என்பதில் நாட்டு மக்களுக்கு என்ன பெருமைகிடைத்திருக்கிறது? இந்த நாடு நமக்கு என்ன செய்திருக்கிறது? இவையெல்லாம் பாமர மக்கள் மனதில் எழக்கூடிய வினாக்கள். நாடு நமக்கென்ன செய்தது என்று கேட்காதே நாட்டுக்கு நாம் என்ன செய்தோம் என்று சிந்தித்துப் பார் என்று அவர்களிடம் எதிர்வினா எழுப்பி இனி தப்பிக்க முடியாது. நாடு விடுதலை பெற்று அரை நூற்றாண்டுகாலத்திற்கு மேலாகியும் நாட்டு மக்களின் அடிப்படைத் தேவைகளைக்கூட நம் ஆட்சியாளர்களால் நிறைவேற்ற முடியவில்லை. அனைவருக்கும் கல்வி என்பது கூட கனவுத் திட்டமாகவே இருந்து வருகிறது.உண்மையிலேயே அனைவருக்கும் கல்வியளிக்க வேண்டும் என்கிற எண்ணம் நம் அரசியல்வாதிகளுக்கு உள்ளதா என்பது சந்தேகம்தான், எல்லோரும் கல்வியறிவு பெற்று விழிப்படைந்து விட்டால் அவர்களை இப்படியெல்லாம் ஏமாற்ற முடியாதல்லவா?
ஒவ்வொரு தேர்தலின் போதும் அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கைகளின் மூலம் மக்களிடம் வாக்குறுதிகளை வழங்குகின்றன. அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப் பட்டனவா என்பதை மக்கள் எப்போதாவது ஆராய்ந்து பார்த்திருக்கிறார்களா? நான்காவது தூண்களான பத்திரிகைகளாவது இந்தப் பணிகளைச் செய்திருக்கின்றனவா? இப்படிப்பட்ட சூழலில் நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் நாம் ஏன் வாக்களிக்க வேண்டும்? இத்தனை முறை வாக்களித்து என்ன பலனைக் கண்டோம்? என்ற எண்ணங்கள் நம் மனதில் எழுவது இயல்புதான். அதனால் நாம் வாக்களிக்காமல் இருந்து விட்டால் எல்லாம் சரியாகி விடுமா? நாம் விரும்புகிற மாற்றம் தானாகக் கிடைத்து விடுமா? மாற்றத்தை விரும்பகிறவர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் அதற்கான வாய்ப்பாக நாம் ஏன் இந்தத் தேர்தலையே பயன்படுத்தக் கூடாது?
குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு வாக்களிப்பதற்கு அக்கட்சியின் தொண்டனுக்கு பல காரணங்கள் இருக்கலாம். எந்த கட்சியையும் சாராத பொது மக்கள் கட்சி அடிப்படையிலல்லாமல் பொது நல நோக்கோடு சிந்தித்து போட்டியிடுகின்ற வேட்பாளர்களில் கட்சிக்கு அப்பாற்பட்டு மக்கள் நலனுக்காக பாடுபடக் கூடியவரை அடையாளம் கண்டு அவருக்கு வாக்களிக்கலாம். கடந்த பாராளுமன்றத் தேர்தலில் வென்றவர்களில் நூற்று இருபது உறுப்பினர்கள் மீது குற்ற வழக்குகள் உள்தாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இத்தகைய உறுப்பினர்கள் எல்லா கட்சிகளிலும் இருக்கிறார்கள் என்பதுதான் வேதனை. இவர்களுக்கு வாக்களித்த வாக்காளர்கள் குற்றவாளிகள் என்றால் இவர்களுக்கு எதிராகத் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்யாமலே இருந்து விட்ட படித்த/ மேல்தட்டு மக்களும் குற்றவாளிகளே. ஏனென்றால் இத்தகைய மக்கள்தான் வாக்களிக்க வாக்குச் சாவடிகளுக்குச் செல்வதில்லை என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
போட்டியிடுகின்ற வேட்பாளர்களில் ஒருவருக்கும் வாக்களிக்க உங்களுக்கு விருப்பமில்லையென்றால் அதையாவது வாக்கச்சாவடிக்குச் சென்று பதிவு செய்யுங்கள். பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் வேண்டுகோள்களுக்கிணங்க இந்தத் தேர்தலில் முதன் முறையாக யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை எனப் பதிவு செய்கதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது.இப்படி குறிப்பிட்ட அளவு வாக்காளர்கள் பதிவு செய்தால் அரசியில் கட்சிகள் வேட்பாளரைத் தேர்வு செய்யும்போது கொஞ்சமாவது யோசிப்பார்கள். வாக்களிப்பதற்கு முன்பு நன்கு யோசித்து முடிவு செய்யுங்கள் நீங்கள் ஒரு முறை அளிக்கும் வாக்கு ஐந்து ஆண்டுகளுக்கு நம் நாட்டின் தலையெழுத்தைத் தீர்மனிங்கும் ஆற்றல்வாய்ந்தது என்பதை மறந்துவிடாதீர்கள். வழக்கமான தேர்தல்களிலிருந்து ஒரு மாறுபட்ட சூழல் இத்தேர்தலில் தமிழர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. வேற்றுமையில் ஒற்றுமை என்பதெல்லாம் வெற்று முழக்கங்களாகி வருகின்றன. இனம், சாதி, கட்சி, வட்டார நலன் போன்ற கூறுகள் தேர்தல் பிரச்சனைகளாவது தவிர்க்க இயலாதனவாகி வருகின்றன. அவற்றையும் மீறி நாம் நாம் வாக்களிப்பது சாத்தியமில்லை என்றாலும் சிறந்த வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் உங்கள் விரலிலுள்ள 'மை'க்கு ஒரு மறியாதையை ஏற்படுத்த முடியும். மாறாக தவறான ஒரு நபருக்கு வாக்களித்து கரும்புள்ளியைக் குத்திக்கொள்ளாதீர்கள். கொளுத்தும் வெயிலில் வாக்குச்சாவடிக்குச் சென்று வரிசையில் நின்று வாக்களிப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிடும் என்றெண்ணி வீட்டுக்குள் இருந்து விடாதீர்கள்.காலையிலேயே வாக்குச்சாவடிக்கு சென்றுவிடுவது புத்திசாலித்தனமானது என்று நினைத்துக்கொண்டு சென்றால் நம்மைவிட புத்திசாலிகள் அங்கு நமக்கு முன்பு காத்திருப்பார்கள். ஆனாலும் வெயிலுக்கு முன்பு வரிசையில் நின்றுவிட்டால் உச்சி வெயிலிலிருந்து தப்பிக்கலாம். காண்க: தமிழ் ஓசை களஞ்சியம்.

3 comments: