தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Saturday, April 25, 2009

எழுத்தாளர் சபாநாயகத்தின் இலக்கியப் பணி.1950 இல் மாணவப் பருவத்திலேயே எழுதத் தொடங்கி இன்றும் ஓர் இளைஞரைப் போல் உற்சாகம் சிறிதும் குறையாமல் இலக்கியப் பணியாற்றி வருபவர் எழுத்தாளர் சபாநாயகம். அன்றாட பணிகளைக் கூட கால அட்டவணைப் படிதான் இன்றும் செய்து வருகிறார். உழைப்பு,காலம் தவறாமை, புதியன கற்பதில் ஆர்வம் எனப் பல பண்புகள் இவரிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டம் புத்தூர் எனும் சிற்றூரில் 1935 ஆம் ஆண்டு வேலாயும் மதுராம்பாள் இணையருக்கு மகனாகப் பிறந்த இவர் இதுவரை புதினம், சிறுகதை, குறுநாவல், திறனாய்வு நூல், தொகுப்பு நூல், வாழ்க்கை வரலாறு, சிறுவர்களுக்கான நூல்கள் என முப்பத்து மூன்று நூல்கள் எழுதியுள்ளார். சபா, அவைமுதல்வன் ஆகிய புனைப் பெயர்களில் கவிதைகளும் எழுதியுள்ளார். கணக்கு ஆசிரியராகத் தம் பணியைத் தொடங்கிய இவர் மேல் நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியராகவும் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் முது நிலை விரிவுரையாளராகவும் பணியை நிறைவு செய்தவர்.பணியாற்றிய காலத்தில் மாணவர்களைக் கவர்ந்து பணியில் புகழ்பெற்று விளங்கியவர்.எந்த ஊருக்கு பணிமாறுதல் செய்யப்பட்டாலும் அந்த ஊரில் உரிய வசதிகள் இல்லை என்றாலும் அங்கேயே குடும்பத்தோடு சென்று தங்கி பணியாற்றியவர் இந்த கொள்கையிலிருந்து கடைசிவரை மாறவில்லை. இவரது மகனையும் மகளையும் இவர் பணியாற்றிய பள்ளியிலேயே படிக்கவைத்திருக்கிறார்.பள்ளிக்கு செல்லும் போது ஒரு கல்லூரி பேராசிரியரைப் போல் கோட்டு டை அணிந்து மிடுக்காகச் செல்வது இவரது வழக்கம் அந்தப் பழக்கத்தை அவர் பணி நிறைவு பெறும் வரைக் கைவிட்டதில்லை. சிறுவயதிலேயே இவரின் தந்தை நன்னூல், பன்னூல் திரட்டு, தேவாரம், திருவாசககம், பெரியபுராணம் போன்ற இலக்கண இலக்கிய நூல்களிலுள்ள கருத்துகளை இவருக்குக் கூறியது இவரின் இலக்கிய ஆர்வத்தைத் தூண்டியிருக்கிறது.மேலும் இவர் தந்தை நீதிக்கட்சி ஆதரவாளர் என்பதால் ஜஸ்டீஸ் பத்திரிகை இவர்கள் வீட்டிற்கு வருமாம் அதில் உள்ள குழந்தை பக்கத்தைத் தவறாமல் படிப்பதுண்டு அதனைத்தொடர்ந்து பெண்ணாடத்திலுள்ள இவரது பெரியம்மா வீட்டில் தங்கி படித்தபோது அங்கு ஆனந்தவிகடனோடு வரும் பாலர் மலர் போன்ற இதழ்களைப் படித்தும் அங்குள்ள மெய்கண்டார் நூலகத்தில் இலக்கிய நூல்களைப் படித்தும் தம் இலக்கிய தாகத்தைத் தணித்துக்கொண்டார். கடந்தைத் தமிழ்ச்சங்கப் பொறுப்பாளர் சிவ.பழமலை என்பவர் அவர்தம் திருமணப் பரிசாகக் கிடைத்த மு.வ. நூல்களை இவருக்குப் படிக்கத் தந்துள்ளார் அது இவரது வாசிப்புத் தளத்தில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியது. பெண்ணாடம் பள்ளி தமிழாசிரியர் வித்துவான் சாம்பசிவம் மாணவர்களுக்காகக் கலைப்பயிர் என்ற கையெழுத்து இதழைநடத்தினார் அதில் எழுதிய 'எங்கள் வாத்தியார்' என்ற சிறுகதைதான் இவரின் முதல் படைப்பு.விளையும் பயிர் முளையிலே தெரியும் என்ற பழமொழிக்கிணங்க இவர் எதிர்காலத்தில் சிறந்த எழுத்தாளராக வருவார் என ஆசிரியர் வாழ்த்தி அப்போதே குறிப்பு எழுதியுள்ளார். ஆசிரியரின் அறிவுறுத்தலால் அக்கதையை ஆனந்த போதினி இதழுக்கு அனுப்ப அது அச்சிலும் வெளிவந்தது அக்கதையை விரிவாக்கிப் புதினமாக ஒரு நதி ஓடிக்கொண்டிருக்கிறது என்ற தலைப்பில் 1993 ஆம் ஆண்டு வெளியிட்டார். அதற்கு கோவை கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளை வழங்கிய சிறந்தத் தமிழ்ப் புதினத்திற்கான பரிசு ரூபாய் பத்தாயிரம் கிடைத்தது. இந்தப் புதினம் தமிழகத் தொடக்கப்பள்ளி வரலாற்றில் இந்த நூற்றாண்டின் முற்பகல் நிகழ்வுகளைப் பற்றிய அரியதொரு பதிவாகும். இந்தப் பணி உருசிய இலக்கிய மேதை டால்ஸ்டாயின் பணிக்கு நிகரானது என கவிஞர் பழமலய் கூறுவது மிகையில்லை. இவரை இவரது ஆசிரியர்கள் ஊக்குவித்தது போல இவரும் இவரது மாணவர்களை ஊக்குவித்து சிறந்த படைப்பாளிகளாக உருவாக்கியிருக்கிறார் அதற்கு சாட்சியாக கவிஞர் பழமலய், கல்பனாதாசன் ஆகியோரைக் குறிப்பிடலாம் ஆம் இருவரும் இவரின் மாணவர்கள். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்தபோது திராவிடர் கழகத்தலைவர் வீரமணி இவரின் வகுப்புத் தோழர். ஜெயகாந்தன், மறைந்த வல்லிக்கண்ணன், தி.க.சி. போன்ற எழுத்தாளர்களோடு நல்ல தொடர்பு இவருக்கு உண்டு. ஏ.வி.எம்.அறக்கட்டளையின் தங்கப்பதக்கம், தமிழக அரசால் வழங்கப்படும் சிறந்த நூலுக்கான பரிசு, திருப்பூர் தமிழ்ச்சங்க விருது ஆகியவை இவர் பெற்ற பரிசுகளில் குறிப்பிடத் தகுந்தவையாகும். கணையாழி களஞ்சியம், தீபம் இதழ்த் தொகுப்பு, ஞானரதம் இதழ்த் தொகுப்பு ஆகியவை வருங்காலத் தலைமுறைக்கு இவர் அளித்த இலக்கியக் கொடைகளாகும்.பழய, புதிய இலக்கிய இதழ்களனைத்தையும் முறையாகச் சேகரித்துப் பாதுகாத்து வைத்துள்ளார். ஓவியம் வரைவதிலும் ஒளிப்படக்கலையிலும் வல்லவர். அறிஞர் அண்ணா, நெடுஞ்செழியன், தேவநேயப் பாவாணர், ஜெயகாந்தன், கி.வா.ஜகநாதன் ஆகியோர் பேசும் கூட்டங்களுக்குச் சென்று அங்கேயே அவர்களைப் பார்த்து படம் வரைந்து அவர்களிடம் அதில் கையப்பம் பெற்று வைத்துள்ளார்.படச்சுருளைப் பயன்படுத்திப் படமெடுத்த காலத்தில் இவர் வீட்டிலேயே இருட்டரை அமைத்து இவரே படத்தைப் பெரிதாக்குவார். தொழில் நுட்ப வளர்ச்சிக்கேற்பத் தன்னை அணியமாக்கிக் கொள்வது இவரது சிறப்பு. இன்றும் இலக்கமுறை ஒளிப்படக் கருவியால் படங்கள் எடுத்து வருகிறார். இணையத்திலும் எழுதி வருகிறார். திண்ணை, தமிழ் மணம் ஆகிய வலைப் பக்கங்களில் இவர் படைப்புகளைக் காணலாம் .http://ninaivu.blogspot.com என்பது இவரது வலைப்பூ முகவரி. காணக:தமிழ் ஓசை களஞ்சியம்

No comments:

Post a Comment