தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Friday, November 21, 2025

இரும்பு பெண்மணி மேனாள் இந்திய பிரதமர்இந்திராகாந்தி

 



(19.11.2025 இந்திராவின் பிறந்த நாளன்று புதுவை வானொலியில் நிகழ்த்திய உரைத்தொகுப்பு)

செல்வச் செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்து புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் கல்வி பயின்றவர் அன்னை இந்திராகாந்தி. அரசியல் குடும்பப் பின்னணியில் வளர்ந்ததால் சிறுவயதிலேயே விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைக்குச் சென்றுள்ளார். அவர் 1964 இல் முதல் இந்திய பெண் பிரதமராக பதவி ஏற்றார். அவர் பதவிக்காலத்தில் செய்த சாதனைகளை அவரது பிறந்த நாளான இன்று (அதாவது நவம்பர் 19 ஆம் நாளான இன்று) நினைவு கூர்வோம்.

நம் நாட்டில் 1962 ,1965 ஆண்டுகளில்  போரினால் ஏற்பட்ட இரு பெரும் பஞ்சங்கள் ஏற்பட்டது. அதை சமாளித்திட அமெரிக்காவிலிருந்து கோதுமையை இறக்குமதி செய்யவேண்டிய நிலை.

அப்போது 1966 ஆம் ஆண்டு டில்லியில் நடந்தகூட்டுச்சேரா அணிகளின் மாநாட்டில்,  வியட்நாம்விடுதலைப் போரில் அமெரிக்கா தலையிடாமல் விலகிக் கொள்ளவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

இது அன்றைய அமெரிக்கா அதிபர் ஜான்சனை ஆத்திரமூட்டியது. ‘இந்தியா கையேந்தி உணவு பெறும் நாடு, அமெரிக்கா உணவைத் தரும் நாடுஎன்பதை இந்தியா நினைவில் கொள்ளவேண்டும் என்று ஏளனமாகப் பேசினார்.

இது பிரதமர் இந்திராவை சிந்திக்கத் தூண்டியது. அதனால் உணவுப்பற்றாக்குறையை அறவே நீக்கிட முடிவு செய்தார். அதன் விளைவாக ஏற்பட்டதுதான் இந்தியாவின் பசுமைப் புரட்சி.

பசுமைப் புரட்சி

1967 ஆம் ஆண்டு பஞ்சாப், ஹரியானா, உத்திரபிரதேசம் ஆகிய மாநில விவசாயிகளுக்கு  மெக்ஸிகோ நாட்டிலிருந்து பெறப்பட்ட கோதுமை விதைகளைப் பயன்படுத்தி, விவசாயம் செய்திட ஊக்கப்படுத்தினார்.

அதன்பயனாக,  கோதுமை உற்பத்தி அதிகரித்தது. இதனால், உணவுப் பற்றாக்குறை அறவே ஒழிக்கப்பட்டது. அதுபோலவே நெல் உற்பத்தியும் அதிகரிக்கப்பட்டு பசுமைப் புரட்சி ஏற்பட்டது.

இந்தப் பசுமை புரட்சி தான், இந்தியாவின் மக்கள் தொகை 125 கோடி ஆன பின்பும், இன்றும் உணவுப் பற்றாக்குறையில்லாமல் பார்த்துக் கொள்கிறது.

2003 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் நாள் அன்றைய இந்திய பிரதமர் வாஜ்பாய்,.  பசுமைப் புரட்சியை நிறைவேற்றிய இந்திரா காந்திக்கு நான் என்றென்றும் நன்றி உள்ளவனாக இருப்பேன்என்று  இந்திரா காந்தியை பாராட்டியுள்ளார். பசுமைப் புரட்சியைத் தொடர்ந்து வெண்மைப் புரட்சிக்கும் வித்திட்டவர் இந்திரா.

 

 

வெண்மை புரட்சி

1970 ல் அன்னை இந்திரா காந்தியின் தலைமையிலான தேசிய பால் வள மேம்பாட்டு வாரியத்தினால் தொடங்கப்பட்டஊரக வளர்ச்சித் திட்டம், தேசிய அளவில் பால் உற்பத்தியைப் பெருக்கியது.

இந்தவெண்மைப் புரட்சியால் பால் உற்பத்தியிலும், பால் பொருட்கள் உற்பத்தியிலும் உலக அளவில் மாபெரும் உற்பத்தியாளர்கள் வரிசையில்  நம் நாடு இணைந்தது. இந்த மாபெரும்வெண்மைப் புரட்சியின்அடையாளச் சின்னமாக குஜராத்திலுள்ள அமுல் நிறுவனம் இன்றும் திகழ்ந்து வருகிறது.

இந்தியாவிலுள்ள வங்கிகள் நாட்டுடமை ஆக்கப்பட்டதும் இந்திரகாந்தியின்பதவிக் காலத்தில்தான்.

வங்கிகள் நாட்டுடைமை

1969 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 19 ஆம் தேதி, அன்றைய பிரதமராகவும், நிதியமைச்சராகவும் இருந்த இந்திரா காந்தி 14 பெரிய வங்கிக் கிளைகளை நாட்டுடமையாக்கினார். இது பின்னாளில் 27 ஆக உயர்ந்தது அதன் பயனாக சமூகத்தில் இதுவரை வங்கிச் சேவையை அனுபவிக்காத பலரும் பயனடைந்தனர்.  வங்கிகள் நாட்டுடமையாக்கப்பட்டதால், சேமிக்கும் வழக்கம் நாடு முழுவதும் பரவியது.

கச்சா எண்ணெய்

1973-ல் அரபு நாடுகளில் ஏற்பட்ட குழப்பங்களினால், கச்சா எண்ணெய் விலை எகிறியது. இந்தியப் பொருளாதாரம் கச்சா எண்ணெயை நம்பித்தான் உள்ளது. இதனால், அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் விலையேற்றம் மேலும் அதிகமாகியது. பணவீக்கம் 25 சதவீதத்தைத் தொட்டது. ‘பங்களாதேஷ்அகதிகளை பராமரித்திடும் செலவு, 93,000 பாகிஸ்தான் போர்க்கைதிகளைப் பேணிக்காத்திடும் செலவு ஆகியவை வேறு சேர்ந்து கொண்டதால் நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.

இந்திரா காந்தி இந்த நிலையை எவ்வாறு சமாளிக்கப் போகிறார் என்று வெளிநாடுகள் எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தன. ‘கச்சா எண்ணைபற்றாக்குறையை தீர்ப்பதற்காக, பெட்ரோல் நிலவாயு உற்பத்திக்கான புதிய கண்டுபிடிப்புகள் நடந்தேறின.

கடலுக்குள் துளை செய்து கச்சா எண்ணையை வெளியில் எடுக்கும் தொழில்நுட்பத்திற்கு ஆதரவு அளித்து, மும்பை ஆழ்கடலில்சாகர் சாம்ராட்எனும் நகரும் துளையிடும் மேடையைக் கொண்டு, எண்ணைய் உற்பத்தியை அதிகப்படுத்துவதில் பெரும் முயற்சிகளை எடுத்தார்.

ஒஎன்ஜிசி, ஆயில் இந்தியா போன்ற நிறுவனங்களை ஊக்கப்படுத்தி, புதிய எண்ணைக் கிணறுகளைத் தோண்டி, எண்ணைய் உற்பத்தியை அதிகரிக்கச் செய்தார்.

 

அணு ஆயுத பரிசோதனை

1974-ல் ராஜஸ்தானில் அணு ஆயுதப் பரிசோதனை செய்து வெற்றி கண்டார் அன்னை இந்திரா காந்தி

இந்தியா ஓர் அணு ஆயுத நாடு என்று பிரகடனம் செய்யப்பட்டது. இதனால் மற்ற அணு ஆயுத நாடுகளான சீனா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை இந்தியா மீது பொருளாதாரத் தடையை விதித்தன.

இனி அணு ஆற்றல் வளர்ச்சியில் ஆக்கப்பூர்வமான உதவிகளை இந்நாடுகளிலிருந்து இந்தியா பெற வேண்டுமெனில் அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் கையொப்பமிட வேண்டுமென்று இந்தியாவை வலியுறுத்தின.  ஐந்து அணு ஆயுத நாடுகளைத் தவிர ஏனைய நாடுகள் அணு ஆயுதம் தயாரிக்கக்கூடாது என்ற பாரபட்சமான ஒப்பந்தம் என்பதால் அதில் இந்திரா காந்தி கையெழுத்திட மறுத்தார். இதனால், அன்று முதற்கொண்டு, உலக அணு சக்தி வளர்ச்சியில் இந்தியா ஓர் ஒதுக்கப்பட்ட நாடாகவே இருந்து வந்த நிலை 2008 ஆம் ஆண்டு தான்  நீங்கியது.

மேலும், இந்தியா அணு ஆயுத நாடாக ஆகிவிட்டதால் பாகிஸ்தானும், சீனாவும் எல்லையோர பிரச்சனைகளை அறவே குறைத்துக் கொண்டன. எல்லையில் அமைதி நிலவியது.

இந்தியாவின் பாதுகாப்பு உறுதியானது. ‘இந்திய பாதுகாப்புஎன்றால் அனைவர் மனதிலும் தோன்றுவது அன்னை இந்திரா காந்தி தான்.

இதுவரை சீனாவின் அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருந்தசிக்கிம்என்ற நாடு, தன்னை இந்தியாவின் ஒரு மாநிலமாக இணைத்துக் கொண்டது.

அணு மின் சக்தி வளர்ச்சியில் எந்த ஒரு உதவியும் முன்னேற்றமடைந்த நாடுகளிலிருந்து கிடைக்காத நிலை உண்டாகியதை இந்திரா காந்தி ஒரு சவாலாகவே ஏற்றுக் கொண்டார்.

அமெரிக்காவும், கனடாவும் முறையே தாராப்பூர் (மகாராஷ்டிரா) மற்றும் கோட்டா (ராஜஸ்தான்) அணு மின்நிலையங்களுக்கு யுரேனியத்தைத் தடை செய்தன. ஆனால், இந்திரா காந்தி துவண்டுவிடவில்லை. அணுசக்தி விஞ்ஞானிகளுக்கு ஊக்கமும், ஆதரவும் நல்கி, நாம் நமக்காகவே, நம் நாட்டிலேயே கிடைத்திடும் இயற்கை யுரேனியத்தை பயன்படுத்திடும் PHWR அணுஉலைகளை தயாரித்திடச் செய்தார்.

இந்தியர்களால், இந்தியாவிலேயே அணு உலைகள் தயாரிப்பது என்பது அணுசக்தி உலகில் ஓர் ஒப்பற்ற புரட்சியாகும்.

இன்று வெளிநாடுகளுக்கு அணு உலைகளை ஏற்றுமதி செய்யுமளவிற்கு இந்தியா திறமை பெற்றுள்ளது. இன்று நாட்டிலுள்ள 22 அணு உலைகளில், 16 அணு உலைகள் இந்திய அணுசக்தி விஞ்ஞானிகளால் தயாரிக்கப்பட்டதேயாகும்.



அவசர நிலைக்காலம்

அவசர நிலையை அறிவித்தபோது நாடெங்கிலும் எதிர்ப்புகள் வலுத்தன ஆனாலும் அதில் சில நேர்மறை செயல்களும் நடைபெற்றன.

அரசு அலுவலகங்கள் ஒழுங்கான நேரத்தில் செயல்பட ஆரம்பித்தன.

தொடர்வண்டிகள்,  காலதாமதமின்றி சரியான நேரத்தில் செயல்பட ஆரம்பித்தன.

தொழிற்சாலைகளில் பணிகள் சரிவர நடந்தேறின.

நாட்டிலுள்ள ஏழை, எளிய மக்கள் அதிலும் குறிப்பாக பட்டியல் இன மக்கள் கொத்தடிமைகளாகத் திகழ்ந்தனர். இவர்கள் யாவரும்நெருக்கடி நிலைகாலத்தில் கொத்தடிமை நிலைகளிலிருந்து மீட்கப்பட்டனர்.

ஏழை, எளிய  மக்களை வாட்டியது மற்றொரு கொடுமைகந்து வட்டி. நெருக்கடி காலத்தில் இவர்களுக்கு இதிலிருந்து விடுதலை கிடைத்தது.

உணவுப் பொருட்களைப் பதுக்கல் செய்தவர்களும், கொள்ளை லாபம் அடிக்க முயன்றவர்களும் எச்சரிக்கப்பட்டனர்.

நெருக்கடி நிலைஅமுலுக்கு வந்த ஒரு வார காலத்தில் அரிசி, கோதுமை விலை சீரானது.

25 சதவீதமாக இருந்த பணவீக்கம், ‘நெருக்கடி நிலைபிரகடனப்படுத்தப்பட்ட ஒரு மாதத்தில் 2 சதவீதமாகக் குறைந்தது.

ஏழை, எளிய மக்களின் நன்மையை உத்தேசித்து, 20 அம்சத்திட்டத்தை அறிவித்து அதைத் தீவிரமாக செயல்படுத்திக் காட்டினார்.

 

இந்திராவின் 20 அம்சத் திட்டம் :

1.விலைவாசியைக் கட்டுப்படுத்துவது.

2.நில உச்சவரம்புச் சட்டத்தை செயல்படுத்தி உபரி நிலங்களை நிலமற்றோருக்கு வழங்க நடவடிக்கை எடுப்பது.

3.கிராமப்புற மக்களுக்கு வீடு கட்ட மனை வழங்குவது.

4.தொழிலாளர்களை அடிமைகளாகக் கருதும் எல்லா ஒப்பந்தங்களையும் சட்ட விரோதம் ஆக்குவது.

5.கிராமப்புற மக்களின் கடன் சுமைகள் அகற்றுவது.

6.விவசாயிகளின் குறைந்தபட்சக் கூலி உயர்த்துவது.

7. 50 லட்சம் ஹெக்டர் நிலத்தை பாசன வசதிக்கு உட்படுத்துவது.

8.மின் உற்பத்தியைப் பெருக்குவது.

9.கைத்தறி தொழிலாளர்களுக்கு அதிக பாதுகாப்பு அளிப்பது.

10.ஆலைகளில் உற்பத்தியாகும் வேட்டி, சேலைகள் கிராமப் பகுதியில் குறைந்த விலையில் கிடைக்கச் செய்வது.

11.நகர்புற நிலங்களை தேசிய உடைமை ஆக்குவது.

12.வரி கட்டாமல் ஏமாற்றுபவர்கள் மீது உடனுக்குடன் விசாரணை செய்து தண்டனை வழங்குவது.

13. கடத்தல்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்களது சொத்துக்களை பரிமுதல் செய்வது.

14.புதிய தொழில்கள் தொடங்கும் முயற்சிகளுக்கு, லைசைனஸ் பெறும் முறைகள் தளர்த்துவது.

15.தொழிற்சாலைகளில் தொழிலாளர்களுக்குப் பங்கு வழங்குவது.

16.லாரிகள், டிரக்குள் மூலம் சரக்குகள் அனுப்புவதற்கான தடைகளை அகற்றி  தேசிய அனுமதி வழங்குவது.

17.வருமான வரிக்கான குறைந்தபட்ச விதிவிலக்கு தொகையை அதிகமாக்குவது.

18.மேற்படிப்புக்காக வெளியூர் சென்று கல்வி பயிலும் மாணவர்களுக்கு  அனைத்து விடுதிகளிலும் தேவையான பொருட்கள் குறைந்த் விலையில் வழங்குவது.

19.பாடப்புத்தகங்கள், நோட்டுக்கள், பேனா, பென்சில் முதலியவை அனைத்து பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் நியாய விலைக்கு கிடைக்க ஏற்பாடு செய்வது.

 

20.படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க தொழிற்பயிற்சியாளர் சட்டத் திருத்தம்.

ஆகிய இருபது அம்சங்களைக் கொண்டிருந்தது.

விண்வெளி துறை வளர்ச்சி

1972 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலத்திலுள்ளஸ்ரீஹரிகோட்டாஎனும் இடத்தில் செயற்கைக் கோள்களை விண்வெளிக்கு செலுத்துவதற்கான ஏவுகணை தளம் நிறுவப்பட்டது.

இன்று விண்ணில் மிதக்கும் பல செயற்கைக் கோள்களும், ஏவுகணைகளும் இங்கிருந்து விண்ணில் செலுத்தப்பட்டதாகும். 1980 – 1984 வரை இருந்த இந்தரா காந்தியின் ஆட்சிக்காலம், மற்றும் ஒரு துறைக்கும் பொற்காலமாக இருந்ததென்றால் அது விண்வெளித்துறையாகும். இதற்கு முன் ஏவப்பட்டஆர்ய பட்டாபோன்ற விண் கலன்கள், வெளிநாடுகளிலுள்ள ஏவுதளங்களிலிருந்து விண்ணுக்கு செலுத்தப்பட்டன.

1980 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 28 ஆம் நாள், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா என்ற இந்திய ஏவுதளத்திலிருந்து எஸ்எல்வி-3 எனும் விண்வெளி ஓடம், ரோகிணி எனும் விண்வெளிக் கலத்தை, விண்வெளியில் மிதக்கவிட்டு, மாபெரும் சாதனையை செய்து காட்டினார்கள்.

இதற்கு முன், இத்தகைய சாதனையை செய்தது அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய நாடுகள், ஜப்பான், சீனா ஆகிய 5 நாடுகள் தான். இதன்மூலம் இந்தியா 6 வது நாடாக அக்குழுவில் சேர்ந்துள்ளது.

இந்தச் சாதனைக் குழுவிற்குத் தலைவராக இருந்தவர் முன்னாள் குடியரசுத் தலைவரும், பிரபல அறிவியலாளருமான டாக்டர் அப்துல் கலாம் அவர்களே. இதற்கெல்லாம் வித்திட்டவர் பிரபல அறிவியலாளர் விக்ரம் சாராபாய் என்றால், அவருக்கு உறுதுணையாக இருந்து ஊக்கம் கொடுத்தவர் அன்னை இந்திரா காந்தி. அவர் இல்லாவிட்டால் இத்தகைய சாதனைகளை இந்திய விஞ்ஞானிகள் செய்திருக்கவே முடியாதுஎன உறுதிபடக் கூறுகிறார் பிரபல விண்வெளி ஆராய்ச்சி அறிஞர் யஷ்பால் அவர்கள்.  இது மட்டுமல்லாது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும்  தயாரித்து செயல்படுத்திக் காட்டினர் நமது விஞ்ஞானிகள்.

அன்னை இந்திரா காந்தி தான் இந்தியாவின் கீழ்கண்ட பெருமைகளுக்குக் காரணமானவர்.

உலகிலேயே அதிகமான தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் விஞ்ஞானிகளைக் கொண்ட நாடுகளில் மூன்றாம் இடத்தை வகிப்பது இந்தியா.

உலகிலேயே ராணுவ பலத்தில் 5வது இடத்திலிருப்பது இந்தியா.

அணுசக்தித் துறையில், உலகிலேயே 6 வது இடத்திலிருப்பது இந்தியா.

விண்வெளித்துறையில், உலகிலேயே 7 வது இடத்தை வகிப்பது இந்தியா.

தொழில் முன்னேற்றத்தில் 10 வது இடம் வகிப்பது இந்தியா.

இந்திராகாந்தி காலத்தில் இரும்பு எஃகுத் தொழிற்சாலைகள்:

சேலம் உருக்காலை (தமிழ்நாடு)

ஹாஸ்பெட் உருக்காலை (கர்நாடகா)

விசாகப்பட்டிணம் உருக்காலை (ஆந்திரா)

தைத்தாரி உருக்காலை (ஒரிஸா)

 

இந்திரா காந்தி காலத்தில் உருவாக்கப்பட்ட உரத்தொழிற்சாலைகள்:

ஜுவாரி அக்ரோ கெமிக்கல்ஸ் லிமிடெட் (கோவா) – 1973

Natural Fertillizer and Chemical Ltd – 1974 – உத்திர பிரதேசம், நொய்டா

குஜராத் நர்மதா பள்ளத்தாக்கு உரத்தொழிற்சாலை – 1976 – குஜராத்

லிபர்டி பாஸ்பேட் லிமிடெட் – 1976 – மும்பை

பல சிறு உரத் தொழிற்சாலைகள் உருவாகின.

இந்தியாவை வானளவு உயர்த்திக் காட்டியவர் அன்னை இந்திரா காந்தி அவர்கள். இதெல்லாம் அவரால் சாதிக்கமுடிந்தது என்றால் அது அவரது தந்தையிடம் கற்றுக்கொண்ட பாடத்தினால் தான். பண்டித நேரு விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து, அவரது நவீன மயமாக்கல், விஞ்ஞான வளர்ச்சி ஆகியவற்றின் இந்தியாவிற்குரிய பயன் ஆகியவற்றில் பெரும்பகுதியை நிறைவேற்றினார் இந்திரா (The Worthy Daughter of the Worthy Father).

அவர் காலத்தில்தான் பொருளாதார சீர்திருத்ததிற்கான அடித்தளமிடப்பட்டது. பொதுத்துறை நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தாலும், தனியார் துறையின் வளர்ச்சிக்கும் கவனம் செலுத்திட தவறவில்லை.

                நாட்டின் விடுதலைப் போரில் தொடங்கி அமைச்சராகவும் பிரதமராகவும் நாட்டு வளர்ச்சிக்கு அரும்பாடு பட்டவர். பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையே துணிச்சலான முடிவுகளை எடுத்து பசுமை, வெண்மைப் புரட்சிகளுக்கு வித்திட்ட இரும்புப் பெண்மணியாகத் திகழ்ந்தவர்.  நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு சென்றவர்.

2000 ஆம் ஆண்டு பிபிசி நடத்திய வாக்கெடுப்பில் 1000 ஆண்டுகளில் சிறந்த பெண்மணி (The Lady of the Milleninium) என்று இந்திரா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியாவின் பெருமை வானளாவில் உயர்ந்தது.

அவரது சாதனைகளை அவர் பிறந்த நாளில் மட்டுமின்றி என்றென்றும் நினைவில் வைத்துப் போற்றுவோம்.

உரையைக் கேட்க கீழுள்ள இணைப்பைச் சொடுக்குக.

 https://drive.google.com/drive/u/2/home

Saturday, November 8, 2025

பசுமைப் பயணம் திறனாய்வு

 




எழுத்தாளர், கவிஞர் கட்டுரையாளர் என்று மட்டுமே என்னால் அறியப்பட்ட அன்பிற்கினிய நண்பர் இரத்தின.புகழேந்தி Rathina Pugazhendi மிகச்சிறந்த மிதியுந்து வீரர் என்பதை அவரது பசுமைப் பயணம் என்கிற நூல் வழியாகத்தான் அறிந்தேன்.


பிலோ இருதயநாத் என்றொரு மானுடவியலாளர் இருந்தார். தென்னகப் பழங்குடியினரை நேரில் சந்தித்து அவர்களை ஆவணப்படுத்தியப் பெருமை அவருக்கு உண்டு.. அதுவும் மலைகள் காடுகள் என பல கடினமானப் பாதைகள் அனைத்தையும் தனது மிதிவண்டியில் ஒற்றை ஆளாகப் பயணித்து தகவல்களை சேகரித்தவர். அரசோ அமைப்போ எதனுடைய உதவியுமின்றி தன்னுடைய சொந்தச் செலவில் உழைப்பில் தனிப்பட்ட ஆர்வத்தில் அந்தப் பணியைச் செய்தவர். அவரைப் பற்றி என்னுடைய பாதை தந்த பயணிகள் நூலில் எழுதி இருக்கிறேன். 


பலசமயம் சென்னைப் புறவழிச்சாலையில் செல்லும்போது தனித்துவமான ஆடை, தலைக்கவசம் அணிந்து பலர் மிதிவண்டிகளை ஓட்டிச்செல்வதைப் பார்த்திருக்கிறேன். அது ஒரு பந்தயம் போலத் தெரியாது. சக நண்பர்களுடன் ஒரு மகிழ்வான பயணம் போலத் தோன்றும். ஒரு வகையில் அது உண்மைதான் என்பதை புகழேந்தி அவர்களின் பசுமைப் பயணம் நூலை வாசிக்கையில் உணர்ந்தேன்.


புகழேந்தி இந்த நூலைத் தந்து பல நாட்களாகிவிட்டன. முயன்றால் ஒரு மணி நேரத்துக்குள் வாசித்துவிடலாம். அவரது ஒவ்வொரு மிதியுந்துப் பயணம் பற்றியும் நாட்குறிப்புகள் போல மிகச் சுருக்கமான கட்டுரைகள் ஆனால் ஒவ்வொரு கட்டுரையிலும் அவர் தரும் தகவல்கள், அனுபவங்கள் என்னை அவை பற்றி தேட வைத்துவிட்டன.


 குறிப்பாக அவரது மூன்றாவது கட்டுரையில் BRM மற்றும் SR என்று குறிப்பிடுகிறார். எப்படியாவது SR ஆக வேண்டும் என்று தன் ஆசையை சொல்லிவிட்டு அப்படி என்றால் என்ன என்று அறியும் ஆசையைத் தூண்டிவிட்டு அவர் தன் மிதிவண்டியில் ஏறி பறந்துவிட்டார்.


 நான் புத்தகத்தை மூடி வைத்துவிட்டு தேடத்தொடங்கினேன்.  

BREVETS DE RANDONNEUR MONDIAUX (BRM) என்பது முன்னரே தீர்மானிக்கப்பட்ட நேரக் கட்டுப்பாடுகளை வெற்றிகரமாகக் கடந்து, குறிப்பிட்ட கால வரம்புகளுக்குள் முடிக்கப்பட வேண்டிய நிலையான தூரங்களின் சவாரிகள் ஆகும். உலகளவில் BRMகள் Audax Club Parisien (ACP) என்கிற அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகின்றன. 


BRM-ன் விதி என்பது வரையறுக்கப்பட்ட தூரத்தை, வரையறுக்கப்பட்ட நேரத்துக்குள் தீர்மானிக்கப்பட்ட சாலை வழியாக சென்றடைவது. உதாரணமாக 200 கி.மீ தூரத்தை 13.5 மணி நேரத்துக்குள் சென்றடைவது. யாருடனும் போட்டி இல்லை. தனக்குத்தானே போட்டியாளர் என்று வேண்டுமானால் சொல்லலாம்.   


  சூப்பர் ரேண்டன்னூர் (SR) என்பது ஒரு காலண்டர் வருடத்திற்குள் தொடர்ச்சியான BRMகளை முடிக்கும் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு ACP வழங்கும் ஒரு பட்டமாகும். இந்தத் தொடரில் நான்கு சுருக்கமான தூரங்கள் உள்ளன: 200 கிமீ, 300 கிமீ, 400 கிமீ மற்றும் 600 கிமீ, முறையே 13.5, 20, 27 மற்றும் 40 மணிநேர வரையறுக்கப்பட்ட நேர அளவுகளுடன். சென்று முடிக்க வேண்டும். ஆனால் கால்ண்டர் வருடம் என்பது ஜனவரியில் தொடங்குவது இல்லை. 

நவம்பர் 1 தொடங்கி அடுத்த அக்டோபருக்குள் இந்த இலக்குகளை முடித்தால் ACP அமைப்பின் சான்றிதழ் மற்றும் பதக்கம் கிடைக்கும்.


 இதில் என்ன கொடுமை என்னவென்றால் ACP இணையதளத்தில் பதிவுக் கட்டணம், பயணச்செலவு, இடையில் மருத்துவ உதவி தேவைப்பட்டால் பங்கேற்பாளர் தன் சொந்த செலவில்தான் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்தியாவில் இந்தப் பயணங்களை AIR ( ALL INDIA RANDONNEUR) என்ற அமைப்பு கண்காணிக்கிறது. அவ்வளவுதான்.. பணமும் தரமாட்டார்கள். பொறுப்பேற்கவும் மாட்டார்கள்.


 இத்தாலியில் தொடங்கப்பட்ட இந்தப் பயண அமைப்புகள். தற்சமயம் பிரான்சில் உள்ள அமைப்பால் உலகம் முழுக்க உள்ள அமைப்புகளை அங்கீகரிக்கின்றது. நான் எப்படியும் SR ஆகிவிடுவேன் என்று புகழேந்தி சபதமெடுத்ததன் விளைவு நான் அங்கே எல்லாம் சென்று திரும்ப அடுத்த அத்தியாயத்துக்கு வரவேண்டி இருக்கிறது. 


அடுத்ததாக விருத்தாசலத்தைச் சுற்றி பல்வேறு வரலாற்றுத் தலங்களுக்குச் சென்று அவைப் பற்றியச் செய்திகளைப் பகிர்கிறார். 


முகாச பரூர் அருகிலுள்ள பொய்கை நல்லூரில் உள்ள கோரக்கர் சித்தர் ஜீவ சமாதி,


 பரூர் கச்சிராயர் வசித்த அர்ண்மனையின் சிதிலமடைந்த மிச்சங்கள், 


சுந்தர பாண்டியனின் கல்வெட்டு, வீரமாமுனிவர் தேம்பாவணி எழுதியதாகக் கருதப்படும் கோணான்குப்பம் பெரியநாயகியம்மன் ஆலயம் இப்படியாக அவரது மிதிவண்டிப்பயணம் பல ஆச்சர்யத் தகவல்களை சுருக்கமாகத் தருகின்றது. 


பின்னர் தான் பார்த்த சோலோ என்கிற ஆங்கிலக் குறும்படம் பற்றி எழுதி இருக்கிறார். மலையேறும் குழு எப்படி பாறை இடுக்கில் இருந்து ஒரு தேரையைக் காப்பாற்றி மலை உச்சிக்கு எடுத்துச்செல்கிறார்கள் என்னும் கதையாம். இனி அந்தப்படத்தைத் தேடிப்பிடித்துப் பார்க்க வேண்டும். 


எனக்கு வேறொரு ஆவணப்படம் நினைவுக்கு வந்தது 1232 KM என்றொரு படம். பீஹாரில் இருந்து தில்லிக்கு தினக்கூலிக்காகச் சென்று கொரானா காலத்தில் கைவிடப்பட்டு பசி பட்டினியுடன் சைக்கிளிலேயே தில்லியில் இருந்து தங்கள் சொந்த மாநிலமான பீகாருக்கு ஏழு நாட்கள் பயணித்து, பீஹாரின் எல்லையிலேயே நிறுத்தப்பட்டு கொடுமைகளை அனுபவித்தவர்களுடன் இயக்குனர் வினோத் காப்ரி பயணித்து படப்பதிவு செய்திருந்தார். அதுவே அந்த ஆவணப்படம். ஹாட்ஸ்டாரில் உள்ளது. 


தற்போது பீகார் தேர்தலையொட்டி திடீர் சாம்பார் திடீர் ரசம் போல திடீர் BIHAR LOVERS தமிழ்நாட்டில் தோன்றிவிட்டார்கள். முகநூலில் பீகார் தெருக்களில் பாலும் தெளிதேனும் பெருக்கெடுத்து ஓடுவதாக கூச்சமில்லாமல் எழுதுகிறார்கள். அவர்கள் அந்த ஆவணப்படத்தைப் பார்க்க வேண்டும். வெளியே சொல்லமாட்டார்கள். கையது கொண்டு மெய்யது போர்த்தி கம்மென இருப்பார்கள்.  


சிறுகதை எழுத்தாளர் இல்லையா தன் மகன் விரும்பிய மிதிவண்டியை தான் வாங்கிக் கொடுக்க இயலாமல் போனதையும் ஆனால் வேலையில் சேர்ந்தபின் மகன் இளவேனில் தன் ஊதியத்தில் இருந்து தான் விருப்பபட்ட மிதிவண்டியை வாங்கித் தந்த அனுபவத்தை நெகிழ்வுடன் பதிவு செய்துள்ளார். மிதிவண்டி பற்றிய அவரது கவிதையும் இடம்பெற்றுள்ளது.


 ஒவ்வொரு பயணமும் ஒவ்வொரு மகத்தான அனுபவம் தேதிவாரியாக புகைப்படங்களுடன் பதிவு செய்துள்ளார். நேர்த்தியான வடிவமைப்பு. பயணிகள் பற்றிய பயண இலக்கியங்கள் பற்றிய பல்லவிகுமாரின் அழகான முன்னுரை. 

இரத்தின புகழேந்தியுடன் அழகான மிதிவண்டிப் பயணங்களை நாமும் அனுபவித்தது போன்ற உணர்வு புத்தகத்தை வாசிக்கும்போது ஏற்படுகிறது. மனமார்ந்த வாழ்த்துக்கள் தோழர் புகழேந்தி. . .

நன்றி: எழுத்தாளர் நெய்வேலி பாரதிக்கு மார்.

Friday, October 17, 2025

காற்றில் கலந்த சொற்கள்

 


தகவல் தொடர்பு சாதனங்கள் இன்று பல வகைகளில் பல்கிப் பெருகி உள்ளன. இவற்றுக்கெல்லாம் தாயாக விளங்குவது வானொலி என்றால் அது மிகை இல்லை. 1920 களில் அறிமுகமான வானொலி இன்று கைபேசி செயலிகள் வாயிலாகவும் கேட்கக் கூடிய அளவிற்கு காலத்திற்கு ஏற்ப தன்னை உருமாற்றிக் கொண்டுள்ளது. தொலைக்காட்சி அறிமுகம் ஆவதற்கு முன்பு கிராமங்களில் வானொலி பெட்டிகள் தான் தகவல்களை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் மிகச் சிறந்த சாதனமாக இருந்திருக்கிறது. சிறுவயதில் விடுமுறை நாட்களில் எங்கள் வீட்டு மர்ஃபி ரேடியோவில் பாட்டு கேட்டபடி மாடுகளை மேய்ப்போம். உலகச் செய்திகள் முதல் ஒலிச்சித்திரங்கள் வரை மக்களிடம் கொண்டு சேர்த்த தகவல் சாதனம் வானொலி. பல்வேறு அறிஞர்களின் கருத்துறைகளையும் வானொலியில் கேட்டிருக்கிறோம். 

1970 கள் தொடர்ந்து அண்மைக் காலம் வரை எங்கள் அன்பு மிகு பேராசிரியர் முனைவர் ஆறு ராமநாதன் அவர்கள் வானொலியில் ஆற்றிய அறிவுசார் உரைகளை தொகுத்து சல்லி வேர்கள் என்ற தலைப்பில் நூலாக்கி இருக்கிறார். ஒரு சிறந்த கல்வியாளராக எதையும் நேர்த்தியோடு செய்யக்கூடிய இயல்புடையவர் பேராசிரியர். வானொலி உரைகள் என்றாலும் அவற்றை முறைப்படுத்தி தொகுத்து நூலாக்கி உள்ளார். அறிவு சார்ந்த ஆறு உரைகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன.

கலை, இலக்கியம், அரசியல் என்று மூன்று களங்களிலும் தனது உரைகளைத் திட்டமிட்டு நிகழ்த்தியுள்ளார். வானொலி உரைகள் பெரும்பாலும் கட்டுரைகளைப் போல் திட்டமிட்டு நிகழ்த்தப்பட வேண்டும். குறித்த நேரத்தில் செரிவான கருத்துக்களை நேயர்கள் நெஞ்சில் பதியும்படியாக கட்டமைக்கப்பட வேண்டும். போகிற போக்கில் மேடைப்பேச்சு போல் எதையாவது பேசி வைக்க முடியாது. எடுத்துக்கொண்ட தலைப்புக்கு ஏற்ற சரியான கருத்துக்களை தொகுத்து தயாரிக்கப்பட்ட உரையாக தான் அவை அமையும். அப்படித்தான் பேராசிரியரின் உரைகளும் ஆய்வு கட்டுரைகளாகவே அமைந்துள்ளன. தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு பக்தி இலக்கியங்கள் மிகுதியாக பங்களிப்பு செய்திருக்கின்றன. ஆனால் அந்த பக்தி இலக்கியங்கள் நாட்டுப்புற இலக்கிய வடிவங்களை எவ்வாறு கையாண்டிருக்கின்றன. குறிப்பாக தாலாட்டுப் பாடல்கள் கும்மி பாடல்கள் போன்ற நாட்டுப்புற பாடல் வடிவங்கள் பக்தி இலக்கியங்களில் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தி உள்ளன என்பதை தனக்கே உரிய பாணியில் ஆய்வு செய்து தனது உரையை வடிவமைத்திருக்கிறார் பேராசிரியர்.

தெருக்கூத்து குறித்த ஆய்வுகளுக்காக பழைய ஒருங்கிணைந்த தென்னார்க்காடு மாவட்டம் முழுவதுமாக பயணம் செய்து தகவல்களை திரட்டியவர். பேராசிரியரின் ஆய்வுக் கட்டுரை வாயிலாகத் தான் கடலூர் மாவட்டம் குரவன்குப்பம் நாடக ஆசிரியர் சடகோபன் அவர்களை நான் அடையாளம் கண்டேன். அவர் 200 ஆண்டுகாலம் பாதுகாத்து வைத்திருந்த சம்பூர்ண ராமாயணம் எனும் கையெழுத்து பிரதியை அண்மையில் வெளியிட்டேன். அந்த தெருக்கூத்து கலைஞர்களோடு பேராசிரியர் வானொலி நிலையத்திற்கு சென்று பதிவு செய்ததை ஒரு தனி கட்டுரையாக எழுதலாம். அந்த அளவுக்கு பல்வேறு அனுபவங்கள். அவற்றையெல்லாம் முன்னுரையில் கோடிட்டு காட்டி உள்ளார். தெருக்கூத்து, மேடை நாடகங்கள் ஆகிய இரண்டு கலைகள் பற்றியும் மண்வாசம் என்ற தலைப்பில் இரண்டு ஆய்வு உரைகள் இந்த நூலில் இணைக்கப்பட்டுள்ளன. 

இரவீந்திரநாத் தாகூரின் கல்விச் சிந்தனைகளை கல்வியியல் படித்தவர்கள் அறிவார்கள். அவரது தேசிய சிந்தனைகளை பேராசிரியரின் ஆய்வுரை குறிப்பிடுகிறது. அவரின் பல்வேறு சிந்தனைகள் இன்றைக்கும் பொருந்தக் கூடியதாக இருப்பதை சுட்டிக்காட்டும் பேராசிரியர் தாகூர் வாய்ச்சொல் வீரர் மட்டுமல்ல செயல்பாட்டிலும் தனது கொள்கைகளை எவ்வாறு கடைபிடித்தார் என்பதை எல்லாம் உரையில் இடம் பெறச் செய்துள்ளார். அவர் தேசியவாதி மட்டுமல்ல சர்வதேசவாதி என்பதையும் இந்த உரை நமக்கு உணர்த்துகிறது. 

இந்த ஆறு உரைகளில் மிக முக்கியமான உரைகளாக நான் கருதுவது விடுதலைக்கு வீர முழக்கம் என்னும் இரண்டு உரைகள். 

எண்ணற்ற தியாகிகள் விடுதலைக்காக பாடுபட்டு இருந்தாலும் இந்திய அளவில் குறிப்பிட்ட சிலரை மட்டும் நமக்கு வரலாறுகள் சுட்டிக் காட்டுகின்றன. நாடெங்கிலும் பல்லாயிரக்கணக்கான விடுதலைப் போராளிகளின் வரலாறு வெளியில் தெரியாமலே இருந்த நிலை தற்போது மாறி வருகிறது. வரலாற்றின் மீது அக்கறை கொண்ட பல்வேறு அறிஞர்கள் மாவட்ட வாரியாக விடுதலைப் போராளிகளின் வரலாறுகளை தொகுத்து வருகின்றனர். கடலூர் அஞ்சலையம்மாள் குறித்து ஊடகவியலாளர் ராஜா அவர்கள் ஒரு வரலாற்று புதினத்தை வெளியிட்டார். விடுதலைப் போரில் சீர்காழி என்ற நூலை ஜனதா இமயவரம்பன் அவர்கள் அண்மையில் மிகப் பிரம்மாண்டமாக சீர்காழியில் வெளியிட்டுள்ளார். மயிலாடுதுறை காளான் பதிப்பகம் இந்த நூலை வெளியிட்டுள்ளது. பேராசிரியரின் உரையில் அரியலூர், ஜெயங்கொண்டம், திருவாரூர் ஆகிய பகுதிகளில் வாழ்ந்த நாட்டுப்புற மக்கள் பாடிய ஆங்கிலேய எதிர்ப்பு பாடல்களைப் பதிவு செய்துள்ளார். மேலும் அந்தப் பகுதிகளில் விடுதலைக்கு போராடிய பல்வேறு போராளிகளின் விரிவான பட்டியலையும் அளித்துள்ளார். காந்தியின் ஒத்துழையாமை இயக்கம் சத்தியாகிரகம் போன்ற போராட்டங்களில் கலந்து கொண்ட அரியலூர், ஜெயங்கொண்டம், திருவாரூர் பகுதி விடுதலைப் போராளிகளின் பெயர் பட்டியல் மிக முக்கியமான வரலாற்று ஆவணமாகும். இந்தப் பகுதியில் விடுதலைக்கு போராடியவர்கள் யார் என்று தெரிந்தால் தான் அது குறித்து ஆய்வுகளைத் தொடர முடியும். அதற்கான திறவுகோலை இந்த வானொலி உரை நமக்கு வழங்குகிறது. 

காற்றில் கலந்த இந்த அறிவு சார் சொற்களை ஏடுகளில் பதித்து நம் கரங்களில் தவழச் செய்துள்ளார் பேராசிரியர். கலை இலக்கியம் அரசியல் என்ற மூன்று துறைகளிலும் ஆய்வு செய்பவர்களுக்கும் சராசரி வாசகர்களுக்கும் பயன்படும் வகையில் இந்த நூல் வந்துள்ளது. கல்வித்துறைக்கும் இலக்கியத் துறைக்கும் வளம் சேர்க்கும் ஒரு வரலாற்று ஆவணமாக இந்த நூல் திகழும் என்பது உறுதி. 

     

21.06.2025                                                                                                          

இரத்தின புகழேந்தி

தலைவர் 

கானல் வரி கலை இலக்கிய இயக்கம் 

                                              4, தங்கம் நகர்,

                                            அண்ணா சாலை,

                                பெரியார் நகர் தெற்கு,

                              விருத்தாசலம் -606001. 

                         

    பேசி:9944852295