தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Saturday, April 26, 2014

நூல்கள் வெளியீட்டு விழா.


நிவேதிதா பதிப்பகமும்  அகிலா பதிப்பகமும் இணைந்து சிதம்பரத்தில் நடத்தும் புத்தகக் கண்காட்சி நளை தொடங்குகிறது. கண்காட்ட்சியின் ஒரு பகுதியாக 15 நூல்கள் வெளியிடும் நிகழ்வு 1.5.2014  வியாழன் மாலை 4.00 மணிக்கு நடைபெற உள்ளது. அதில்  ஓலைச்சுவடியிலிருந்து நான் தொகுத்த ரதி மன்மதன் கதைப்பாடல்கள் நூலும் வெளியிடப்பட உள்ளது. ஊருணிவாசகர் வட்டத்தின் முதல் வெளியீடு.



நூலுக்கு எழுதிய என்னுரை இங்கே பதிவிடப்படுகிறது.

என்னுரை

மருங்கூரில் மாசி மாதங்களில் மன்மதன் கோயிலில் திருவிழா நடைபெறும்போது மன்மதன் கதைப்பாடலைப் பாடும் வழக்கம் உண்டு. அதைப்பாடுபவர்களிடம் இந்தப் பாடல்களை எப்படிக் கற்றுக்கொண்டீர்கள் என்று கேட்டதற்கு ஓலைச்சுவடியிலிருந்து படித்தது என்பார்கள். அந்த ஓலைச்சுவடி கிடைத்தால் அச்சில் கொண்டுவரவேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. அந்த ஓலைச்சுவடி கார்குடல், நருமணம் போன்ற ஊர்களில் இருப்பதாக அறிந்து அங்கு சென்றேன். ஆனாலும் ஓலைச்சுவடி கிடைத்தபாடில்லை. கொடுமனூரில் ஒரு ஓலைச்சுவடி உள்ளது என அறிந்து அங்கு சென்று கேட்டபோது திரு. செயராமன் அவர்களிடம் உள்ளதாகத் தெரிவித்தனர். ஓலைச்சுவடியைக் கண்ணில் காட்டிய செயராமன் படியெடுக்கத் தரமுடியாது என மறுத்துவிட்டார். இது இப்படியே இருந்தால் காலத்தால் அழிந்துபோக்கும் யாருக்கும் பயன்படாது. எனவே அச்சில் வந்தால் எல்லோருக்கும் பயன்படும் எனறு கூறியபிறகும், அதெல்லாம் சரிதான். ஆனாலும் சாமி குற்றமாகிவிடும் எனவே தரமுடியாது என திட்டவட்டமாக மறுத்துவிட்டார். வேறு வழியின்றி சோகமாக வீடுதிரும்பினேன். பலமுறை முயன்றும் அவரிடமிருந்து ஓலைச்சுவடியைப் பெற முடியவில்லை. சில ஆண்டுகள் கழித்து அவரிடமிருந்து ஓலைச்சுவடியைப் பெற்றுக்கொள்ளும்படி தகவல் வந்தது. மகிழ்ச்சியோடு சென்று வாங்கிவந்து எழுதத்தொடங்கினேன். பள்ளி சென்று வந்த நேரம் போக காலை மாலை என இரு வேளைகளிலுமாக எழுதத்தொடங்கி மூன்று மாதங்கள் ஆனது முடிப்பதற்கு. இரண்டு சுவடிகள் கிடைத்தன. அதில் ஒன்றுதான் இப்போது உங்கள் கைகளில் தவழ்கிறது. இரு சுவடிகளில் இந்த சுவடி பதிப்பிக்க ஏற்றதாக இருந்தது. கதை முழுதாகவும் தொடர்ச்சியாகவும் அமைத்திருந்தது இந்த சுவடியில்தான். இன்னொரு சுவடியில் பத்துநாள் கதைகளும் நாள் வாரியாக பிரிக்கப்பட்டிருந்தாலும் தொடர்ச்சியாக இல்லை என்பதால் இச்சுவடியைப் பதிப்பிப்பது என்று முடிவு செய்தேன். இச்சுவடியில் ரகர றகர வேறுபாடுகள் சரிசெய்யப்பட்டுள்ளன. சில எழுத்துப்பிழைகள், ஒற்றுப்பிழைகள் சரிசெய்யப்பட்டுள்ளன. எழுத்துகள் தெளிவின்றி அமைந்திருந்த இடங்கள் …………….. என்று கோடிடப்பட்டுள்ளன. இயன்ற வரை பேச்சுவழக்குச் சொற்கள் சுவடியில் உள்ளபடியே அச்சிலும் கொடுக்கப்பட்டுள்ளன. அடிகளுக்கு எண்கள் பதிப்பாசிரியரால் வழங்கப் பட்டவை. சுவடி எழுதப்பட்ட காலத்தை சரியாக அறிய இயலவில்லை. சுவடியில் மெய்யெழுத்துகள் புள்ளிகொண்டு அமைந்துள்ளன. எனவே இது காலத்தால் பின்தங்கிய சுவடியாக இருக்கும். இதிலுள்ள செம்புலிங்க பூசி என்பாரின் பெயரைக்கொண்டுதான் இச்சுவடி நூறு ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டிருக்கலாம் எனக் கருதமுடிகிறது.
மன்மதன் கதைப்பாடல்கள் இதற்கு முன்பு அச்சில் வதிருக்கலாம். அனாலும் இந்தச் சுவடி இப்போதுதான் முதன்முதலாக வெளி வருகிறது. இச்சுவடிக்கென்று பல தனித்தன்மைகள் உள்ளன. விருத்தாசலம் வட்டார பண்பாடுகளும் ஊர்ப் பெயர்களும் இச்சுவடியில் மட்டுமே காணப்படுவனவாகும். அந்த வகையில் இச்சுவடி இவ்வட்டாரத் தனித்தன்மையோடு வெளிவருகிறது. இப்பகுதி மக்களின் பண்பாட்டு ஆவணம் ஒன்று அழிவிலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளது என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும். இப்போது இந்தச் சுவடியை நமக்கு அளித்த செயராமன் உயிரோடு இல்லை. இந்தச் சுவடியும் அவர்களின் வாரிசுகளிடம் இல்லை. எங்கோ தொலைத்துவிட்டனர். அதிலுள்ள பாடல்கள் இதோ உயிருடன் உங்கள் கைகளில்.

Friday, February 7, 2014

செம்மொழி தமிழாய்வு நிறுவனம்-நெய்வேலி தமிழ்ச்சங்கம் கருத்தரங்கம்

நெய்வேலி தழிழ்ச்சங்கம் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் இணைந்து நடத்தும் கருத்தரங்கம். செவ்வியல் இலக்கியங்களில் நாட்டுப்புற கலைகளின் தாக்கம்.
9.2.2014ஞாயிறு மாலை 6.00 மணிக்கு வஞ்சியர் காண்டம் நாடகம்.



Monday, January 13, 2014

அஞ்சல்வழி பொங்கல் வாழ்த்து



அஞ்சலில் பொங்கல் வாழ்த்து அனுப்பும் வழக்கம் குறைந்து வருகிறது என்கிற புலம்பல் அண்மைக்காலமாக நண்பர்களிடமிருந்து கேட்க நேர்ந்தது. இதற்கு நாம் என்ன செய்யலாம் என்று யோசித்தேன். சில பல ஆண்டுகளாக நானும் அஞ்சலில் வாழ்த்து அனுப்பவில்லை. முன்பெல்லாம் நானே கவிதை எழுதி அதை அச்சிட்டு வாழ்த்தாக்கி அனுப்புவேன். அந்த வழக்கத்தை புதுப்பித்தால் என்ன என்று தோன்றியது. கணினியில் microsoft office publisher பயன்படுத்தி நான் எடுத்த படங்களையும் சென்ற ஆண்டு எழுதிய கவிதையையும் வைத்துக்கொண்டு ஒரு வாழ்த்தைத் தயாரித்து இன்று அஞ்சல் நிலையம் சென்று இணையத்தில் தொடர்புகொள்ள முடியாத உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் அனுப்பினேன். அதில் இன்னொரு சுவையான தகவல் கிடைத்தது . சினிமா நூற்றாண்டு விழா நினைவு அஞ்சல்தலைகளை நம் அஞ்சல்துறை வெளியிட்டுள்ளது. கவிஞர் கண்ணதாசன், நடிகர் நாகேஷ் ஆகியோரின் படங்கள் இடம்பெற்றிருந்தன. எனக்கு வந்த சில பொங்கல் வாழ்த்துகளை இன்றும் பாதுகாத்து வைத்துள்ளேன். கவிஞர் அறிவுமதி, நடிகர் நெப்போலியன் அரங்கேற்றம் இதழ் ஆசிரியர் கிள்ளிவளவன் ஆகியோரின் வாழ்த்து குறிப்பிடத்தகுந்தவை. நாம் அனுப்பும் வாழ்த்துக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சிலர் நன்றி அட்டைகளை அனுப்புவதுண்டு. அப்படி நானும் அனுப்பினேன். எனக்கு வந்த சில நன்றி அட்டைகளையும் பாதுகாத்து வைத்துள்ளேன். எதிர்காலத்தில் இவையெல்லாம் கூட ஆவணங்களாகலாம். (பின்லாந்து நாட்டில் ஒரு உள்நாட்டுக்கடிதத்தை மிகப்பெரிய ஆவணமாக பெற்று பாதுகாக்கின்ற வழக்கம் உண்டாம்.) ஒருமுறை உழவர்களின் பிரச்சனைகளை மையப்படுத்தி ஒரு பொங்கல் வாழ்த்து அசிட்டு அனுப்பினேன். ஆனதவிகடன், பாக்யா போன்ற இதழ்களுக்கும் அதை அனுப்பினேன். அதன் ஆசிரியர்கள் பாலசுப்ரமணியன், பாகியராஜ் ஆகியோர் அனுப்பிய பதில் கடிதங்களும் என் கோப்பில் இன்றும் பத்திரமாக உள்ளன.

Thursday, January 2, 2014

தமிழ் எழுத்துரு -அரசுத்துறைகளில் தொடரும் குழப்பங்கள்




         அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள், இணையதளங்களில், ஐந்து வகை தமிழ் எழுத்துருக்களை மட்டுமே, பயன்படுத்த வேண்டும்' என, அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது, அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில், 30க்கும் மேற்பட்ட எழுத்துருக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில், 5 வகை எழுத்துக்களை மட்டும் பயன்படுத்த வேண்டும் என, தகவல் தொழில்நுட்பத் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ் பாரதி, தமிழ் கபிலர், தமிழ் கம்பர், தமிழ் வள்ளுவர், தமிழ் காவேரி ஆகியவை இந்த எழுத்துருக்கள் ஆகும். இவ் எழுத்துருக்களை,தமிழ் இணையக் கல்விக்கழக இணையதளத்தில் ல், 'டவுன்லோடு' செய்து பயன்படுத்தலாம். நிதித்துறை செயலர் உதயச்சந்திரன், இதுகுறித்த சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார்.  என்று தினமலர் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சென்ற ஆட்சியில் கீழ்க்கண்டவாறு உத்தரவு வெளியிடப்பட்டது

தமிழகத்தில் அரசுத் துறைகளில் கூட பல்வேறு எழுத்துருக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதனால், தமிழகத்திலும் யுனிகோடு எழுத்துருவை பயன்படுத்துவது பற்றி தமிழக அரசு ஆலோசித்து வந்தது. இதற்காக, மு.அனந்தகிருஷ்ணன் தலைமையிலான குழுவை அரசு அமைத்தது. பல்வேறு அம்சங்களை ஆராய்ந்த அந்த குழு, தமிழக அரசிடம் அறிக்கையை சமர்ப்பித்தது.
இந்தநிலையில், கோவையில் செம்மொழி மாநாடு தொடங்கிய நாளன்று, தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை முதன்மை செயலாளர் டேவிதார், ஒரு ஆணையை வெளியிட்டார். அந்த ஆணையில், "இனி தமிழக அரசு, டிஏஎம் (டேம்), டிஏபி (டேப்) மற்றும் பிற பிரத்தியேக 8-பிட் குறியீடுகளில் இருந்து 16 பிட் தமிழ் யுனிகோடுக்கு (ஒருங்குறி) மாறவேண்டும்; 16 பிட் தமிழ் யுனிகோட் மட்டுமே ஒரே அங்கீகரிக்கப்பட்ட எழுத்துக்குறியீடாக இருக்கும். எந்த மென்பொருள்களில் எல்லாம் தமிழ் யுனிகோடு வேலை செய்யவில்லையோ அல்லது முழுதாக தெரியவில்லையோ, அந்த பயன்பாடுகளில் டிஏசிஆ-16 குறியீட்டை மட்டும் ஒரு மாற்றுக் குறியீடாக பயன்படுத்திக் கொள்ளலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக, அனைத்து அலுவலகங்களுக்குத் தேவைப்படும் உதவிகளை அரசு செய்யும். தற்போது டிஜிட்டல் வடிவத்தில் உள்ள ஆவணங்களும் யுனிகோடு எழுத்துருவுக்கு மாற்ற அரசு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது  கல்வித்துறையில் சில படிவங்களை பள்ளிகளிலிருந்து பெறும்போது ’அவ்வையார் வானவில்’ எழுத்துருவைப் பயன்படுத்துமாறு குறிப்பிடுகின்றனர். அவ்வையார் வானவில் என்பது வழக்கொழிந்துபோன ஒரு வடிவம். அதை ஒருசிலருக்கு மட்டுமே பயன்படுத்தத்தெரிகிறது. தமிழில் தட்டச்சு செய்பவர்கள் கூட தட்டச்சு செய்யத்தயங்கும் ஒரு வடிவமாகவே உள்ளது.

அரசு துறைகளுக்குள்ளேயே  ஏன் இந்த குழப்பம். உலகம் முழுவதும் ஏற்றுக்கொண்ட ஒருங்குறி எழுத்துருவைப் பயன்படுத்துவதில் என்ன சிக்கல். இணையத்தில் பயன்படுத்துவதற்கும் ஏதுவாக ஒருங்குறி எழுத்துருக்களே உள்ளன. அப்படி இருக்கும்போது ஏன் இப்படி ஒவ்வொரு ஆட்சியிலும் ஒரு உத்தரவை வெளியிட்டு குழப்புகின்றனர்.

Tuesday, December 10, 2013

வியாபாரமாயணம் நாடகம்

முனைவர் மு.இராமசாமி அவர்களின் வியாபாரமாயணம் நாடகம் இன்று பர்த்தேன். எல்லாம் இன்று வியாபாரமாகிவிட்டன என்பதை கலை வடிவமாக்கியுள்ளார். விவசாயம் பொய்த்துவிட்டால் விவசாயிகள் வேறு தொழிலைப் பார்க்கலாம் என்று நம் பிரதமர் கூறினார். அந்த ஒற்றைச் சொல்லால் உறுவானதுதான் இந்த நாடகம். அப்படி விவசாயிகள் வேறு வேலைக்குச்செல்ல முடியுமா ? சென்றால் நாம் எதைச் சாப்பிடுவது? அதற்கு நம் அரசு கூறும் மாற்று வழி என்ன என்பதை எள்ளலோடு சொல்கிறது இந்த நாடகம். வாய்ப்பு கிடைத்தால் ஒரு முறை பாருங்கள்.

Monday, December 9, 2013

வியாபாரமாயணம் நவீன நாடகம்



பேராசிரியர் மு.இராமசாமி அவர்களின் இயக்கத்தில் நவீன நாடகம் ’வியாபாரமாயணம்’

10/12/2013 செவ்வாய் மாலை 6.00 மணிக்கு விருத்தாசலம் மக்கள் மன்றத்தில்  நடைபெற உள்ளது.

நடிப்பு : மு.இராமசாமி
                ஆனந்த்சாமி

இசை: நெல்லை மணிகண்டன்

அரங்க நிர்வாகம் : சுதர்சன்

நெறியாள்கை : ராஜிவ்கிருஷ்ணன்

எழுத்தாக்கம் : மு.இராமசாமி

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: எழுத்தாளர் இமையம், திருமுதுகுன்றம் இலக்கிய வட்டம் .

அனைவரும் வருக. கலை அமுதம் பருக.

Monday, November 11, 2013

நாட்டுப்புறவியல் கருத்தரங்கு

தென்னிந்திய மொழிகளின் நாட்டுப்புறவியல் கழகம்.
21 ஆவது தேசிய கருத்தரங்கு

நாள் ; 19,20 ஜனவரி 2014

இடம்: கர்நாடக நாட்டுப்புறவியல் பல்கலைக்கழகம் ( உலகின் முதல் நாட்டுப்புறவியல் பல்கலைக்கழகம்)
கொடகொடி(Gotagoti)
ஷிக்கஒன்  வட்டம்(Shiggaon )
 ஹவெரி மாவட்டம் (Haveri)
கர்நாடகா-581 197

கருத்தரங்க பொருண்மை

மரபுவழி அறிவு
கிராமப்புற மற்றும் பழங்குடி மேலாண்மை
கிராமப்புற மற்றும் பழங்குடி பண்பாட்டு  உற்பத்தியும் விநியோக முறையும்
நிலைத்த வளர்ச்சியும் நாட்டுப்புறவியலும்.

கட்டுரை கட்டணம் அனுப்ப கடைசி நாள்
ஜனவரி 1 ,2014

முகவரி
முனைவர் டாக்டர் நசீம்தீன்
பொருளாளர்
77/13 பேராசிரியர் குடியிருப்பு
அம்மக்குளம் 5 ஆம் தெரு
போடிநாயக்கனூர் 625513
பேசி: 919488580085
மின்னஞ்சல்: nazeemdeen@gmail.com