அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள், இணையதளங்களில், ஐந்து வகை தமிழ் எழுத்துருக்களை மட்டுமே, பயன்படுத்த வேண்டும்' என, அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது, அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில், 30க்கும் மேற்பட்ட எழுத்துருக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில், 5 வகை எழுத்துக்களை மட்டும் பயன்படுத்த வேண்டும் என, தகவல் தொழில்நுட்பத் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ் பாரதி, தமிழ் கபிலர், தமிழ் கம்பர், தமிழ் வள்ளுவர், தமிழ் காவேரி ஆகியவை இந்த எழுத்துருக்கள் ஆகும். இவ் எழுத்துருக்களை,தமிழ் இணையக் கல்விக்கழக இணையதளத்தில் ல், 'டவுன்லோடு' செய்து பயன்படுத்தலாம். நிதித்துறை செயலர் உதயச்சந்திரன், இதுகுறித்த சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார். என்று தினமலர் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சென்ற ஆட்சியில் கீழ்க்கண்டவாறு உத்தரவு வெளியிடப்பட்டது
தமிழகத்தில் அரசுத் துறைகளில் கூட பல்வேறு எழுத்துருக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதனால், தமிழகத்திலும் யுனிகோடு எழுத்துருவை பயன்படுத்துவது பற்றி தமிழக அரசு ஆலோசித்து வந்தது. இதற்காக, மு.அனந்தகிருஷ்ணன் தலைமையிலான குழுவை அரசு அமைத்தது. பல்வேறு அம்சங்களை ஆராய்ந்த அந்த குழு, தமிழக அரசிடம் அறிக்கையை சமர்ப்பித்தது.
இந்தநிலையில், கோவையில் செம்மொழி மாநாடு தொடங்கிய நாளன்று, தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை முதன்மை செயலாளர் டேவிதார், ஒரு ஆணையை வெளியிட்டார். அந்த ஆணையில், "இனி தமிழக அரசு, டிஏஎம் (டேம்), டிஏபி (டேப்) மற்றும் பிற பிரத்தியேக 8-பிட் குறியீடுகளில் இருந்து 16 பிட் தமிழ் யுனிகோடுக்கு (ஒருங்குறி) மாறவேண்டும்; 16 பிட் தமிழ் யுனிகோட் மட்டுமே ஒரே அங்கீகரிக்கப்பட்ட எழுத்துக்குறியீடாக இருக்கும். எந்த மென்பொருள்களில் எல்லாம் தமிழ் யுனிகோடு வேலை செய்யவில்லையோ அல்லது முழுதாக தெரியவில்லையோ, அந்த பயன்பாடுகளில் டிஏசிஆ-16 குறியீட்டை மட்டும் ஒரு மாற்றுக் குறியீடாக பயன்படுத்திக் கொள்ளலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக, அனைத்து அலுவலகங்களுக்குத் தேவைப்படும் உதவிகளை அரசு செய்யும். தற்போது டிஜிட்டல் வடிவத்தில் உள்ள ஆவணங்களும் யுனிகோடு எழுத்துருவுக்கு மாற்ற அரசு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது கல்வித்துறையில் சில படிவங்களை பள்ளிகளிலிருந்து பெறும்போது ’அவ்வையார் வானவில்’ எழுத்துருவைப் பயன்படுத்துமாறு குறிப்பிடுகின்றனர். அவ்வையார் வானவில் என்பது வழக்கொழிந்துபோன ஒரு வடிவம். அதை ஒருசிலருக்கு மட்டுமே பயன்படுத்தத்தெரிகிறது. தமிழில் தட்டச்சு செய்பவர்கள் கூட தட்டச்சு செய்யத்தயங்கும் ஒரு வடிவமாகவே உள்ளது.
அரசு துறைகளுக்குள்ளேயே ஏன் இந்த குழப்பம். உலகம் முழுவதும் ஏற்றுக்கொண்ட ஒருங்குறி எழுத்துருவைப் பயன்படுத்துவதில் என்ன சிக்கல். இணையத்தில் பயன்படுத்துவதற்கும் ஏதுவாக ஒருங்குறி எழுத்துருக்களே உள்ளன. அப்படி இருக்கும்போது ஏன் இப்படி ஒவ்வொரு ஆட்சியிலும் ஒரு உத்தரவை வெளியிட்டு குழப்புகின்றனர்.
No comments:
Post a Comment