தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Thursday, March 31, 2011

இந்திய மக்கள் தொகை 121 கோடி

புதுடெல்லி : இந்திய மக்கள் தொகை 121 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் மக்கள் தொகை 18 கோடியே 10 லட்சம் அதிகரித்துள்ளது. தமிழகத்தின் மக்கள்தொகை 7 கோடி 21 லட்சத்து 38,958 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் 10 ஆண்டுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

கடந்த 1872&ம் ஆண்டு முதல் இதுவரை 14 கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டு உள்ளன. கடைசியாக, 2001&ம் ஆண்டு இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது, இந்திய மக்கள்தொகை 103 கோடியாக இருந்தது. இந்நிலையில், 2001&2011 ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பை 2 கட்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டது.

முதல் கட்ட கணக்கெடுப்பு, கடந்த ஆண்டு மே 1ம் தேதி தொடங்கியது. அப்போது, வீடுகள் போன்றவை கணக்கெடுக்கப்பட்டன. பின்னர், 2&ம் கட்ட கணக்கெடுப்பு கடந்த பிப்ரவரி 9ம் தேதி தொடங்கி, 28ம் தேதி முடிந்தது. இதில், 25 லட்சம் பேர் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த பணிக்காக ஸி2,200 கோடி செலவிடப்பட்டது.

கணக்கெடுப்பில் கிடைத்த முதல் புள்ளி விவரத்தை மத்திய உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளையும், இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு துறையின் பதிவாளர் ஜெனரல் சந்திரமவுலியும் டெல்லியில் நேற்று வெளியிட்டனர். அதன்படி, இந்திய மக்கள்தொகை இப்போது 121 கோடியாக உயர்ந்துள்ளது.

இது கடந்த முறையை விட 18 கோடியே 10 லட்சம் அதிகம். 62.37 கோடி ஆண்களும், 58.65 கோடி பெண்களும் உள்ளனர். கணக்கெடுப்பின்படி, ஆயிரம் ஆண்களுக்கு 914 பெண்கள் உள்ளனர். 2001ல் இருந்து கடந்த 10 ஆண்டுகளில் மக்கள்தொகை பெருக்கம் 17.69 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த முறை இது 21.15 சதவீதமாக இருந்தது.

நாட்டிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமாக தொடர்ந்து, உத்தர பிரதேசமே நீடிக்கிறது. இங்கு இப்போது 19 கோடியே 90 லட்சம் பேர் உள்ளனர். குறைந்த மக்கள் தொகை கொண்ட பகுதியாக லட்சத்தீவு (64,429) உள்ளது. இந்தியாவின் இப்போதைய மக்கள் தொகை அமெரிக்கா, இந்தோனேஷியா, பிரேசில், பாகிஸ்தான் மற்றும் வங்கதேச நாடுகளின் மொத்த மக்கள் தொகையை விட அதிகம். உத்தர பிரதேசம், மகாராஷ்டிராவின் மொத்த மக்கள் தொகை அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையை விட அதிகமாக உள்ளது. தமிழக மக்கள்தொகை 7 கோடி 21 லட்சத்து 38,958 ஆக உயர்ந்துள்ளது.

மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியாக டெல்லியின் வட கிழக்கு மாவட்டமும், நெருக்கம் குறைந்த பகுதியாக அருணாச்சல பிரதேசத்தில் உள்ள திபாங் பள்ளத்தாக்கும் உள்ளன. டெல்லி வட கிழக்கு மாவட்டத்தில் ஒரு சதுர கி.மீ.க்கு 37,346 பேரும், திபாங் பள்ளத்தாக்கில் ஒரு சதுர கி.மீ.க்கு ஒருவரும் வசிக்கின்றனர்.

சிறுவர்கள் குறைவு

கடந்த 2001 கணக்கெடுப்பின்போது, நாட்டில் 6 வயது வரையான சிறுவர்கள் 16 கோடியே 38 லட்சம் பேர் இருந்தனர். இப்போது இந்த எண்ணிக்கை 15 கோடியே 88 லட்சமாக குறைந்துள்ளது. 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த வயதில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் உள்ளனர். 5 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், ஒரு லட்சம் எண்ணிக்கையை இன்னும் தாண்டவில்லை. அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் 2 கோடியே 97 லட்சம் சிறுவர்களும், பீகாரில் 1 கோடியே 86 லட்சம் சிறுவர்களும் உள்ளனர்.


கல்வியறிவு அதிகரிப்பு

நடப்பு கணக்கெடுப்பின்படி நாட்டின் கல்வியறிவு சதவீதம் 74.04 சதவீதமாக உள்ளது. 2001ல் இது 64.83 சதவீதமாக இருந்தது. கடந்த 10 ஆண்டுகளில் 9.21 சதவீதம் அதிகமாகியுள்ளது. 2001ம் ஆண்டில் 53.67 சதவீதமாக இருந்த பெண்கள் கல்வியறிவு, இப்போது 65.46 சதவீதமாக உயர்ந்துள்ளது. 2001ல் 75.26 சதவீதமாக இருந்த ஆண்களின் கல்வியறிவு இப்போது 82.14 சதவீதமாக அதிகரித்துள்ளது.

கல்வியறிவில் கேரளாவே தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. அதன் கல்வியறிவு சதவீதம் 93.91. மாவட்ட அளவில் மிசோரம் மாநிலத்தில் உள்ள செர்ச்சிப் மாவட்டம் (98.76 சதவீதம்), ஐஸ்வால் மாவட்டம் (98.50 சதவீதம்) முதல் 2 இடங்களை பிடித்துள்ளன. கேரளாவை தொடர்ந்து லட்சத்தீவு 92.28 சதவீதத்துடன் 2வது இடம் வகிக்கிறது. கல்வியறிவு சதவீதத்தில் வழக்கம்போல் பீகார் கடைசி இடத்தில் (63.82 சதவீதம்) உள்ளது. புதுச்சேரி உட்பட 10 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் 85 சதவீத கல்வியறிவை எட்டியுள்ளன.
நன்றி : தினகரன்

Sunday, March 6, 2011

எனக்கு வந்த கடிதங்கள் - 2

அன்புயிர் புகழ் ! உன் அன்பு மடலும் படைப்புகளும் கிடைத்தன. அரசு ' தீட்டு ' படைப்பையும் இன்று கொடுத்தார். எழுது. எழுது. இது அச்சிற்கு... இது மற்றவர் பார்வைக்கு என்ற எண்ணம் இல்லாமல் எழுது. உனக்கென ஒரு மொழி அமையும் நேரமிது. அதன் செழுமை உணரும் வேகத்தில் எழுது. டாக்டர் கூட உனது
' கரும்பு ' கதையைப் படித்துவிட்டு அரசுவிடம் உன்னை விசாரித்திருக்கிறார். தொடர்ந்து எழுது. சிறுகதை வடிவமே சிறந்த வடிவம். முக்கியத்துவம் கொடு. கோணங்கி, தமிழ்ச்செல்வன், பூமணி, வண்ணதாசன், வண்ணநிலவன் இவர்களோடு கி.ரா. கிழவனையும் படி. வண்ணதாசன் வித்தியாசமான ஆள். மனிதன் - மிருகம், இயற்கை என்கிற வித்தியாசம் பார்க்கத் தெரியாத வித்தியாசமான ஆள். நுட்பமான பார்வை, மிருதுவான மனசு, நளினமான நடை. தேடிப் படி. எவனையும் ரசி. நீயாக மலர். உன்னைச் சூழ்ந்த மக்களில்... இயற்கையில் படைப்புகள் பறி. அவ்வப்போது மடலிடு. இப்படி இடைவெளி விடாதே. அன்பின் அம்மா, அப்பா,கரிகாலன் அனைவரையும் மிக மிக கேட்டதாகக் கூறு. இங்கே புத்தகக் கண்காட்சி நிகழ்கிறது. வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். என்ன பையன் நீ !அண்ணமலைப் பல்கலைக் கழகத்திலா ! எதையாவது சாதித்துவிட்டு அங்கு பேசலாமே புகழ். இப்போது வேண்டுமா ? யோசி, அப்புறம் உன் இஷ்டம். மேடத்திடமும் கேட்டுக்கொள்.
உடன் பதில் எழுது.
அன்புடன்
அறிவுமதி.
07.01.1993

குறிப்பு: கடிதத்தில் டாக்டர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது மருத்துவர் ராமதாசு அவர்களை. அப்போது தினப்புரட்சி நாளிதழில் ஞாயிறுதோறும் மக்கள் இலக்கியம் என்றொரு பக்கம் வெளியாகும் அதன் பொறுப்பாசிரியர் ப. திருநாவுக்கரசு (தாமரைச்செல்வி பதிப்பகம் ). அவரைத்தான் அரசு என அறிவுமதி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Thursday, March 3, 2011

எனக்கு வந்த கடிதங்கள் -1

தகவல் தொடர்புச் சாதனங்களின் வளர்ச்சியினால் கடிதம் எழுதும் வழக்கம் முற்றிலும் மறைந்துவிட்டது, பின்லாந்து நாட்டு ஆவணக்காப்பகங்களில் ஒரு உள்நாட்டுக் கடிதத்தைக் கூட ஆவணாமாகப் பாதுகாக்கின்றனராம். கடிதம் இலக்கியத்தின் ஒரு பகுதியாகியுள்ளது கடித இலக்கியம் என்று. எனக்கு வந்த கடிதங்களை இங்கே பதிவு செய்கிறேன். நாளை இதுவும் கூட ஆவணமாகலாம். முதலில் கவிஞர் அறிவுமதி எனக்கு எழுதிய கடிதங்களை ஒவ்வொன்றாக பதிவுசெய்கிறேன்.

12/06/1991
சென்னை

அன்புயிர் புகழ்,
அண்ணன் மதி பேசுகிறேன்.
உனது அன்பின் மடல்களுக்கு உடன் மடலிட முடியாமைக்கு... பொறுத்தருள்க.
என்னிடமுள்ள குறைபாடே இதுதான். என் தொட்டில் பூமிக்கருகிலேயே இத்தகைய நம்பிக்கை வெளிச்சங்கள்
அறிமுகமாக அறிமுகமாக மனசு தெம்படைகிறது.
உனது மொழி உணர்வுகளும் அரசியல் உணர்வுகளும் செழுமையடையவும் வைரம் பாயவும் வாழ்த்துகிறேன்.
சுற்றிலும் நம்பிக்கையாளர்களைத் துளிர்விடச்செய். அண்ணன் ராசு அவர்களை அடிக்கடி சந்தி.புது நெல்லு புது நாத்து முடிந்து திரைக்குத் தயாராக இருக்கிறது.
விரைவில் சிதம்பரம் வரலாம். நான் ஊருக்கு வருகிற போது தெரிவிக்கிறேன் சந்திப்போம்.
அன்புடன் அண்ணன்
அறிவுமதி

குறிப்பு : அண்ணன் ராசு என கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பது விருத்தாசலத்தில் வாழ்ந்த கொள்கையளரை.
திராவிட நாடு அடையும் வரைத் திருமணம் செய்துகொள்ளமாட்டோம் என்று பெரியாரிடம் குருதியால் ஒப்பமிட்டுக்கொடுத்தத்ற்காக் கடைசி வரை திருமணமே செய்தொகொள்ளாமல் மரணமடைந்தவர். சிந்தனைச்சிற்பி என எங்களால் அழைக்கப்பட்டவர்.