பள்ளி
கல்லூரி மாணவர்களைடையே அண்மைக்காலமாக பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கல்வியின் அவசியத்தை
உணராமல் நடந்துகொள்ளும் அலட்சியப் போக்கு பல மாணவர்களிடையே காணப்படுகிறது. மன ரீதியான
பல மாற்றங்கள் மாணவ சமூகத்தில் ஏற்பட்டுள்ளது கவலையளிக்கிறது. அண்மையில் பல ஊர்களில்
நீலத்திமிங்கல விளையாட்டுக்காக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டவர்கள், உயிரைவிட்டவர்கள்
சென்னையில் தொடர்வண்டியில் பட்டாக்கத்தியுடன் விபரீத விளையாட்டு என கேள்விப்படும் செய்திகள்
எல்லாம் நம் கவலையை மேலும் அதிகரிக்கச்செய்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக அனிதாவின்
மரணம் அரசியல் காரணங்களைத்தாண்டி கல்வியாளர்களை மிகுந்த துயரத்துக்குள்ளாக்கியுள்ளது.
நம் கல்வியும் சமூகமும் தற்கால மாணவ சமூகத்திற்கு
கற்றுத்தந்ததுதான் என்ன? என்கிற மிகப்பெரிய கேள்வியை நமக்கு நாமே கேட்டுக்கொள்ளவேண்டிய
அவல நிலை ஏற்பட்டுள்ளது. மாணவர்களின் இத்தகைய போக்கு சமூக ஆர்வலர்களையும் கல்வியாளர்களையும்
கவலை கொள்ளச் செய்துள்ளது .
டிஜிட்டல் உலகம் நம் இளைஞர்களுக்கு அளித்த பரிசு
இதுதானா? சென்ற நூற்றாண்டின் இறுதியில் இளைஞர்கள் எப்படி இருந்தார்கள் என்பதை நினைவுபடுத்துவது
இன்றைய இளைஞர்களுக்கு தேவைப்படலாம். இணையமோ கணினியோ கைபேசியோ கேபிள்தொலைக்காட்சிகளோ
இல்லாத காலம் அது. இளைஞர்கள் பெற்றோர்களோடும், உறவுகளோடும் நண்பர்களோடும் நேருக்குநேர்
அளவளாவிய காலம் அது. தனக்கு ஒரு பிரச்சனை என்றால் மேற்கண்ட அனைவரிடமும் பகிர்ந்துகொண்டனர்.
பள்ளி கல்லூரியிலிருந்து வீடு திரும்பியவர்கள் பெற்றோர்களுக்கு அவர்களின் பணிகளில்
உதவி செய்வார்கள். அந்தி சாயும் நேரத்தில் நண்பர்களோடு வீதிகளில் பாரம்பரிய விளையாட்டுகளை
விளையாடிக் மகிழ்ந்து வீடு திரும்புவர். அந்த விளையாட்டுகள் அனைத்தும் அவர்கள் சமூகவயமாவதற்கு
ஆயத்தப்படுத்தின.
விடுமுறை நாட்களில் உறவினர் வீடுகளுக்கு செல்வதன்
மூலம் அந்த ஊர் பண்பாடு பழக்கவழக்கங்களைக் கற்றுக்கொண்டனர். எப்போதாவது நண்பர்களோடோ
பெற்றோர்களோடோ திரையறங்குகளுக்கு சென்று சினிமா பார்த்தனர். இவை ஒவ்வொன்றும் மாணவர்களுக்கு
ஒவ்வொரு பாடத்தை மறைமுகமாகக் கற்றுத்தந்தன. கூடி வாழும் மனப்பக்குவத்தை சமூகக் கடமைகளை
அவர்கள் அவற்றின் வாயிலாக அறிந்து செயல்பட்டனர். அப்படி என்றால் அக்கால மாணவர்களிடையே
எந்த சிக்கல்களும் இல்லை என்று கூறிவிட இயலாது. ஒன்றிரண்டு என்று பிரச்சனைகள் இருந்திருக்கலாம்.
இப்படி நாம் கவலை கொள்ளுமளவுக்கு இல்லை என்பது உறுதி.
ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் ஆகிய மூவரும்
இணைந்து செயல்படுவதன் மூலமே தற்கால மாணவ சமூகத்தை பயனுள்ள சக்தியாக வளர்த்தெடுக்க முடியும்.
அக்கால ஆசிரியர்களைப்போல் தற்கால ஆசிரியர்கள் செயல்பட இயாலதபடி சில கட்டுப்பாடுகள்
முட்டுக்கட்டைகளாக உள்ளன.
ஆசிரியர்கள் பங்கு:
மாணவர்களை நல்வழிப்படுத்துவதில் ஆசிரியர்களுக்கு
பெரும்பங்கு உள்ளது. பாடத்தைத் தாண்டி தன்னிடம் பயிலும் மாணவர்களை நல்வழிப்படுத்த ஆசிரியர்
தானே முன்மாதிரியாக நடந்துகொள்வது மிகவும் அவசியம். ஒவ்வொரு மாணவனின் குடும்பச்சூழலை
அவர்களோடு உரையாடி அறிந்துகொண்டு அவர்களின் தேவைகளை நம்மால் இயன்ற அளவு நிறைவுசெய்வதோடு
நல்ல நண்பராக அவனோடு பழகினால் நமக்கு ஒரு பிரச்சனை என்றால் நம் ஆசிரியரிடம் கூறலாம்
என்னும் மன நிலையை ஏற்படுத்தி விடவேண்டும். அதன்மூலம் அந்த மாணவன் நம்மை பின்பற்றத்தொடங்குவான்.
பெற்றோர் பங்கு
தன் குழந்தையின் மீது தனது விருப்பத்தைத்திணிப்பதைப்
பெற்றோர்கள் தவிர்க்கவேண்டும். தன் குழந்தைகளைப்பற்றி முதலில் நன்கு புரிந்த்குகொண்டு
அவர்களிடம் நட்ப்போடு பழகி அவர்களின் நன்மதிப்பைப் பெற்றோர்கள் பெறுவது அவசியம். பிறகு
தாத்தா பாட்டி அத்தை மாமா சித்தி சித்தப்பா பெரியப்பா பெரியம்மா போன்ற உறவுகளின் முக்கியத்துவத்தை
உணர்த்தி அவர்களோடு நெருங்கிப் பழகி அவர்களின் நல்ல பழக்கவழக்கங்களைப் பின்பற்ற வழிவகை
செய்திடல் அவசியம். அளவோடு செல்லம் கொடுப்பது அவசியம். தேவைப்படும் நேரத்தில் கண்டிக்கவேண்டும்
ஒரே பிள்ளையாக இருக்கிறதே ஏதாவது செய்துகொள்ளுமோ என்ற அச்சத்தைக் கைவிடவேண்டும். நட்பும்
கண்டிப்பும் இரு கண்களைப்போன்றது என்பதை அவர்களுக்கு நம் செயல்பாடுகள் மூலம் உணர்த்தவேண்டும்.
தன் மகன் படிக்கும் பள்ளி கல்லூரிக்கு ஆவாப்போது சென்று பார்த்து வருவதோடு ஆசிரியர்களை
சந்தித்து தன் மகன்/மகளைப் பற்றி உரையாடவேண்டும். நல்ல நூலகள், திரைப்படங்களைப்பற்றி
தங்களின் குழந்தைகளோடு உரையாடி அவர்களின் ரசனையை மேம்படடுத்தவேண்டும். மரபுவழி விளையாட்டுகளை
விளையாடப்பழக்கவேண்டும் அந்த விளையாட்டுகள் அவர்களுக்கு விட்டுக்கொடுத்தல் கூடிவாழ்தல்
தலைமைப்பண்பு ஆகியவற்றை மறைமுகமாகக் கற்றுத்தரும் வல்லமை உடையவை.
மாணவர்பங்கு
பெற்றோர், நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரிடம் மனம்விட்டு
பழக வேண்டும். நம் முன்னோர்களிடம் கற்றுக்கொள்ள நிறைய உள்ளன என்பதை ஒருபோதும் மறக்கக்
கூடாது. எப்போது கணினி,கைபேசி,தொலைக்காட்சி போன்ற ஊடகங்களின் பிடியிலேயே சிக்கிக்கிடக்காமல்
நண்பர்களோடு விளையாடப்பழகுதல் நலம். பெரியோர்களை மதித்து நடந்துகொள்வதை ஆசிரியர் பெற்றோர்களிடம்
கற்றுக்கொள்ளவேண்டும். நீங்கள் அன்றாடம் சந்திக்கும் மனிதர்களிடம் உள்ள நற்பண்புகளை
பின்பற்றிட முயலவேண்டும்
மூவரும் ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலம் மட்டுமே
சிறந்த நற்பண்புகள் நிறைந்த இளைஞர் சமூகத்தை உறுவாக்கமுடியும்.
நன்றி: தமிழ்முரசு கல்விமலர்
நன்றி: தமிழ்முரசு கல்விமலர்
No comments:
Post a Comment