தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Thursday, July 13, 2017

ஓவியப்போராளி வீரசந்தானம்



ஓவியர் வீர சந்தானம் மறைந்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இரு மாதங்களுக்கு முன் அண்ணன் அறிவுமதி அவர்களின் இல்லத் திருமண விழாவில் பார்த்தேன். தமிழர் ஓவியம் கருத்தரங்கு நடந்ததைப்பற்றிக் கூறியதோடு அந்த ஆய்வுக்கோவையில் உங்களைப்பற்றிதான் கட்டுரை எழுதியுள்ளேன் நூல் அனுப்பி வைக்கிறேன் என்று கூறியபோது மிகவும் மகிழ்ந்தார் அவசியம் அனுப்புங்கள் நான் இணையத்தில் பதிவிடுகிறேன் என்றார். இன்னும் அனுப்பவில்லை. அந்த குற்ற உணர்வில் தவிக்கிறது மனசு இதோ அவரைப்பற்றிய கட்டுரை.


முன்னுரை:
ஓவியம் என்பது ஒரு கலைமட்டும் அல்ல அது ஒரு போராட்டவடிவமாகவும் திகழ்கிறது. ஓவியத்தின் மூலமும் போராடமுடியும் என்பதை நம் தமிழக ஓவியர்கள் பலர் நிரூபித்துள்ளனர். அப்படிப்பட்ட ஓவியர்களில் மிகவும் முக்கியமானவராக ஓவியர் வீரசந்தானம் அவர்களைக் குறிப்பிடலாம். தமிழ்ச் சமூகம் சந்தித்த பல இன்னல்களை தன் ஓவியத்தின் மூலம் மீட்டெடுக்க முயன்ற சமகால ஓவியர்தான் வீர சந்தானம். ஓவியத்தில் மட்டுமின்றி நடிப்பிலும் தன் திறமையை வெளிப்படுத்தியவர். அவரது ஓவியச் செயல்பாடுகளையும் போராட்டங்களையும் இக்கட்டுரை ஆய்வுசெய்கிறது.
வீரசந்தானம்:
நம் நாடு விடுதலைபெற்ற ஆண்டான 1947 இல் கும்பகோணம் அருகிலுள்ள திருநாகேஸ்வரம் என்னும் ஊரில் வீரமுத்து பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தவர் வீரசந்தானம். 1966 – 72 இல் ஓவியக் கல்லூரி படிப்பை முடித்து நடுவணரசின் நெசவாளர் சேவை மையத்தில் பதினாறு ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றியுள்ளார். இவரின் பணியைப்பாராட்டி குடியரசுத்தலைவர் சித்ரகலா விருது வழங்கியுள்ளார். சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட இவருக்கு இரு மகள்கள். இருவரும் அயல்நாடுகளில் உள்ளனர்.
இளமையில் வருமை:
தன் இளமைக் காலத்தில் தனக்கு உதவிய நல் உள்ளங்களை நினைவு கூறும்போது இவ்வாறு குறிப்பிடுகிறார் ஓவியர்,”நான் கோயில் சோற்றைத் தின்னு வளர்ந்தவன். எங்க ஊர் உப்பிலியப்பன் கோயில்ல இருந்து அஞ்சு மைல் தூரம் நடந்து போய், கும்பகோணம் ஓவியப் பள்ளியில் ஓவியம் கத்துக்கிட்டேன். என் கஷ்டத்தைப் புரிஞ்சுக்கிட்டு ரலே சைக்கிள் வாங்கிக் கொடுத்த கோயில் செயல் அலுவலர் மீசை சீனிவாசன், நான் பசியோடு வருவேன்னு, தன் காலை உணவுல எனக்கும் பங்குவெச்ச ஓவியப் பள்ளி முதல்வர் கிருஷ்ணராவ், சென்னையில் என்னை ஒரு வருஷம் தங்கவெச்சு, மதிய உணவும் போட்டு சிற்பம் செய்யக் கத்துக்கொடுத்த என் குருநாதர் தனபால் சார், எனக்குத் திருமணம் செய்துவைத்த ஓவியர் ஆதிமூலம்... இப்படி எத்தனையோ பேரால்தான் இந்த சந்தானம் உருவானான்.”
ஓவியப்போராளி:
இயல்பிலேயே போர்க்குணம் உடையவர் வீரசந்தானம். குறிப்பாக ஈழத்தமிழர்களுக்காக பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டவர். அவரே ஒரு நேர்காணலில்,” என் இனத்துக்காகப் போராடணும், என் மக்கள் துன்பப்படுறாங்க, அவங்களுக்காகப் போராடணும்னு விருப்ப ஓய்வு கொடுத்துட்டு வந்துட்டேன். இன்னைக்கு வரைக்கும் ஈழத்துக்கு ஆதரவா, தமிழ் இனத்துக்கு ஆதரவா எங்கே கூட்டம், போராட்டம் நடந்தாலும் நான்தான் முதல் ஆளா நின்னு குரல் கொடுத்திருக்கேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
அணு உலை எதிர்ப்பு:
கூடங்குளம் அணு உலைக்கு எதிராக தன் ஓவியங்களைப் பயன்படுத்தியுள்ளார்.  கலைஞன் தான் உலகின் முதல் கலகக்காரனாக இருந்திருக்க வேண்டும் என்ற கலகக்குரலோடு தனது தாடியையும் தூரிகையையும் நீவிவிட்டவாறு, முதல் அணு உலை எதிர்ப்பு வண்ணத்தை பதிவு செய்ய தொடங்கினார் ஓவியர் வீரசந்தானம். அருகிலிருந்தவரின் கைரேகைகளை தனது ஓவியத்திற்காக கவர்ந்து கொண்டார். அனைவரது வண்ணங்களிலும் எதிர்ப்பும் இரத்தமும் வாழ்வும் சாவும் ஏகாதிபத்தியமும் சுரண்டலும் வறட்சியும் மலர்ச்சியும் சுடுகாடுகளும் கல்லறைகளும் மற்றும் அணு உலைகளும் குழைத்து குழைத்து நிறைந்திருந்தன. என்று அணு உலை எதிர்ப்பு ஓவியங்களைப் பற்றி பத்திரிகைச் செய்தி ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஓவியக்கொள்கை:
வீரசந்தானம் அவர்களின் ஓவியங்கள் சில கொள்கைகளை முன்வைத்தே தீட்டப்படுகின்றன. அந்த நோக்கத்தை நிறைவேற்றும்பொருட்டு பல ஓவியக் கண்காட்சிகளை நிகழ்த்தியுள்ளார். அது பற்றி குறிப்பிடும்போது,”தனி ஆளாகவும் குழுவாகவும் நிறைய ஓவிய கண்காட்சிகளும் நடத்தியிருக்கிறேன். ஓவியம் தொடர்பாக சில வெளிநாடுகளுக்கு பயணம் செய்திருக்கிறேன். தொடர்ச்சியாக நம் மரபுசார்ந்த ஓவியங்களை வரைகிறேன். அதற்காக நாடு முழுவதும் சுற்றி நிறைய ஆராய்ச்சிகள் செய்திருக்கிறேன். இது நான் எடுத்துகொண்டிருக்கும் (மரபு சார்ந்த ஓவிய பாணி) ஒரு கலையை அழியாமல் பாதுகாக்க என்னாலான முயற்சி, பங்களிப்பு. இந்த ஆராய்ச்சி என் ஓவிய பாணியை பின்தொடர நினைக்கும் இளைஞர்களுக்கு நிச்சயம் பயன்படும். நான் ஒரு சமூகப் போராளி. தமிழ் கலாசாரத்தை பாதிக்கும் எந்த சக்தியாக இருந்தாலும் எதிர்த்து போராடிக் கொண்டு இருக்கிறேன்.” என்று குறிப்பிடுகிறார்.
’தானே’ துயர் துடைத்த ஓவியங்கள்:
விகடன் நிகழ்த்திய ’தானே’(புயல்) துயர் நீக்கும் திட்டத்தில் ஓவியங்களை வரைந்து தானமாகக் கொடுத்து அதன்மூலம் கிடைத்த தொகையை தானே துயர்துடைப்புப் பணிக்குப் பயன்படுத்தினர். அப்பணியில் முதல் கலைஞராக நம் ஓவியர் கலந்துகொண்டு ஓவியம் வரைந்து கொடுத்துள்ளார். தானே புயல் பதிப்புகளைப் பற்றிய விகடன் ஓவியக்கண்காட்சியில்,''எவ்வளவோ ஓவியக் கண்காட்சி களுக்குப் போய் இருக்கிறேன். ஆனால், இதுதான் சாதனை!'' என்று தொடங்கினார் ஓவியர் வீரசந்தானம். இப்படி ஒரு கண் காட்சியை விகடன் நடத்தலாமே... ஓவியர்கள் நாங்கள் ஒரே குடையின் கீழ் நின்று உதவுகிறோமே என்று இந்த எண்ணத்தை விதைத்தவரே வீரசந்தானம்தான். ''தேசிய அளவிலான கண்காட்சிகளில்கூட இவ்வளவு ஓவியங்கள் வைக்கப்பட்டது  இல்லை. ஒரு சமூகத்தில் மக்கள் வளமாக இருக்கும்போது, கலைஞர்களை அவர்கள் பாதுகாக்க வேண்டும்; அதேபோல, மக்கள் சோதனையை எதிர்கொள்ளும்போது அவர்களை அரவணைக்க கலைஞர்கள் முன்நிற்க வேண்டும். அந்த வகையில் தமிழக ஓவியர்கள் எங்கள் கடமையைச் செய்திருக்கிறோம். கலைத் துறையைச் சேர்ந்த ஏனையோரும் இதை முன்மாதிரியாகக்கொண்டு 'தானே’ துயர் துடைக்க முன்வர வேண்டும்!'' என்றார் வீரசந்தானம் கூறியதாக விகடன் குறிப்பிடுகிறது.
இசைக்கருவி ஓவியங்கள்:
நம் பழந்தமிழ் இசைக்கருவிகளை ஓவியங்களாகத் தீட்டியுள்ளார். மகர யாழ், சகோட யாழ், செங்கோட்டு யாழ் போன்ற யாழிசைக் கருவிகளின் கம்பீரமான அழகை இவரது ஓவியங்கள் பறைசாற்றுகின்றன. “யாழிசைக்கும் பாணர்கள் நமது பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் உலகம் முழுவதும் யாழ் கருவியை இசைத்துப் பரப்பிவந்தார்கள். யாழ்தேவிக்குக் கோயில் இருந்ததாகவும், பின்னாளில் அது காணக் கிடைக்காமல் போய்விட்டதாகவும் ஒரு செய்தி இருக்கிறது. எனவே அச்சில் இருந்த யாழ் ஓவியங்களை அருங்காட்சியகம், நூலகம் போன்றவற்றில் தேடிப் பார்த்து, படித்துத் தெரிந்து கொண்டு அவற்றை ஓவியங்களாக்கினேன். திருவாரூர் கோயிலில் இருக்கும் தோற்கருவியான பஞ்சமுக வாத்தியத்தையும் என் ஓவியத்தில் கொண்டுவந்திருக்கிறேன். தற்போது, பறையாட்டத்தின் பல கூறுகளை ஓவியங்களாக்க முயன்றுவருகிறேன். எந்தக் கலையாக இருந்தாலும் மானுட மேம்பாட்டுக்காகப் படைக்கப்பட வேண்டும் என்பதுதான் என் எண்ணம். அதை நோக்கித்தான் என்
பயணம்” என்கிறார் வீரசந்தானம்.
நடிகர் வீரசந்தானம்:
ஓவியராக மட்டுமின்றி நடிகராகவும் தன் கலைப் பணியைச் சிறப்பாகச் செய்தவர் வீரசந்தானம். பாலுமகேந்திராவின் சந்தியாராகம் படத்தில் கதை நாயகனாக நடித்துள்ளார். மீரா கதிரவனின் அவள் பெயர் தமிழரசி என்ற படத்திலும், கௌதமனின் மகிழ்ச்சி படத்திலும் ஓவியர் வீரசந்தானம் நடித்துள்ளார்.
முடிவுரை:

பணியாளராக, குடும்பத்தலைவராக, ஓவியராக, சமூகப்போராளியாக, நடிகராக என தான் வகித்த அனைத்து பொருப்புகளிலும் தலை சிறந்து விளங்கிய சமகால பன்முகக் கலைஞராகத்திகழ்கிறார் ஓவியர் வீர சந்தானம். இவரது ஓவியங்கள் சமூக மேம்பாட்டுக்காகவும், இயற்கைச் சீற்றங்களினால் மக்களுக்கு ஏற்படும் துயரங்களைக் களையவும், இழந்த பண்பட்டுக் கூறுகளை மீட்டெடுக்கவும், பழமையான இசைக்கருவிகளை எதிர்கால சந்ததியினருக்குத் தெரிவிக்கவும் பயன்படுகின்றன. கலைஞர்களின் பணி கலையைக் காப்பதோடு முடிந்துவிடுவதில்லை சமூக மேம்பாட்டுக்கான களப்பணிகளிலும் தம்மை ஈடுபடுத்திக்கொள்ளவேண்டும் என்னும் கொள்கையாளராக வாழும்  இவரைப் போன்ற கலைஞர்களால்தான் இம்மண்ணில் கலைகள் இன்னும் விளைந்துகொண்டிருக்கின்றன. 

No comments:

Post a Comment