தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Wednesday, December 16, 2015

புதிய கல்விக்கொள்கை எப்படி இருக்கவேண்டும்?


                                           
     
      மத்திய அரசு புதிய கல்விக்கொள்கையை உருவாக்க நினைத்திருப்பது வரவேற்கத்தகுந்த ஒன்றுகாலத்திற்கேற்ப, கல்விக்கொள்கைகள் மாற்றப்படவேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். இந்த நிலையில், மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை எப்படி இருந்தால் சமூகத்திற்குப் பயன்படும் என்று சிந்திப்பது ஒவ்வொரு கல்வியாளரின் கடமை.
கல்வி என்பது அறிவைப்பெறுவது என்ற நிலையில் மட்டுமே இன்றைய கல்வி முறை உள்ளது. மாணவர்களின் ஆளுமைப் பண்பை மேம்படுத்துவதும், சுய சிந்தனையை வளர்ப்பதுமே கல்வியின் முக்கிய நோக்கங்களாக இருக்கவேண்டும் என்பது கல்வியாளர்களின் கருத்து. இந்த கருத்துக்கு வலுச் சேர்ப்பதாக இன்றைய கல்வி முறை இல்லை என்பது முக்கியமான குறை.
இந்த குறையைப் போக்குவதாக புதிய கல்விக்கொள்கை அமைய வேண்டும்.
ஆனால் அதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை என்பதுதான் நிதர்சனமான உணமை.
     புதிய கல்விக்கொள்கையை உருவாக்குவதற்கு முன் நாடெங்கும் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளதும் வரவேற்க க்கூடியதுதான். ஆனால் அக்கூட்டங்கள் நடத்தப்பட்ட விதம்தான் போற்றத்தக்கதாக இல்லை. கருத்துக் கேட்பு என்ற பெயரில் நடந்ததெல்லாம் கருத்துத்திணிப்புதான். பள்ளிக்கல்வி, உயர்கல்வி ஆகிய இரு துறைகளிலும் விவாதிக்க வேண்டிய வினாக்களை அவர்களே வடிவமைத்து உள்ளனர். பள்ளிக்கல்விக்கு 13 தலைப்புகள், உயர்கல்விக்கு 20 தலைப்புகள் . ஒவ்வொரு தலைப்பிலும் பல வினாக்கள். அந்த வினக்களுக்கும் ஆம், இல்லை என்றுதான் நீங்கள் பதிலளிக்கலாம். உதாரணமாக ஒரு வினைவைப் பார்ப்போம். பள்ளிக்கல்வித்துறையில் விவாதிக்க வேண்டிய முதல் கருப்பொருள் தொடக்கக் கல்வியில் மாணவர்களின் கற்றல் வெளிப்பாட்டை உறுதி செய்தல் என்பதாகும் அதில் கேட்கப்பட்டுள்ள இரண்டாவது வினா ஆசிரியர்கள் ஒழுங்காக பள்ளிக்கு வருகிறார்களா? என்பது தான்.
நாடு விடுதலை பெற்று இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இப்படி ஒரு சந்தேகம் நம் ஆட்சியாளர்களுக்கு வந்திருக்கிறது. மாணவர்களின் நலனில் ஆட்சியாளர்களுக்குத்தான் எவ்வளவு அக்கரை. இவர்கள் விவாதத்திற்கு விட்டுள்ள பல வினாக்கள் இந்த ரகம்தான். இது ஒவ்வொரு அரசும் இத்தனை காலம் நிகழ்த்திய வழக்கமான ஒரு நிகழ்வேயாகும்.  
உண்மையில் கருத்துக்கேட்புக்கூட்டங்கள் ஒவ்வொரு பள்ளி, கல்லூரியிலும் நிகழ்த்தப்பட்டிருக்க வேண்டும். கல்விக்கொள்கை குறித்து கருத்து கூறும் தகுதியும், உரிமையும் மற்றவர்களைக் காட்டிலும்  நேரடிப் பயனாளர்கள் என்ற வகையில் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்குமே அதிகமாக உள்ளது.
     கல்வி என்பது குடிமக்களின் அடிப்படை உரிமை என்பதை எந்த அரசும் நினைவில் கொள்வதில்லை. அதன் விளைவாக இன்று சாராய வியாபாரிகளிடமும், கந்துவட்டிக்காரர்களிடமும்,அரசியல் தாதாக்களிடமும் கல்வித்தாய் சிக்கி சீரழிந்துகொண்டிருக்கிறாள். கல்விக்கான விலையை அவர்களே தீர்மானிக்கிறார்கள். இதையெல்லாம் தட்டிக்கேட்க வேண்டிய ஆட்சியாளர்கள் அவர்களுக்கு சேவகம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
கல்வி தனியார்மயமாவதை முற்றிலும தடுக்க இயலவில்லை என்றாலும் சற்று குறைப்பதற்கான நடவடிக்கைகளாவது எடுக்கலாமல்லவா. புதிய கல்விக்கொள்கையில் இது பற்றிய எந்த விவாதத்திற்கும் வழி ஏற்பட்டுவிடாமல் கவனமாக பார்த்துக்கொண்டுள்ளனர்.
ஒருவர் எழுதிய பாடத்தைப் படித்து மனப்பாடம் செய்து அதிலிருந்து கேட்கப்படும் வினாவுக்கு விடை எழுதும் இந்த அரதப் பழசான கல்விமுறை குறித்து எந்த வினாவும் எழுப்பப் படவில்லை. இப்படி நாம் குறை கூறிக்கொண்டே சென்றால் பட்டியல் நீளும் என்பதால் இத்தோடு நிறுத்திக்கொண்டு, புதிய கல்விக்கொள்கை கவனம் செலுத்தவேண்டிய சில முக்கியமான பகுதிகளை இவ்வாறு பட்டியலிடலாம்.
கல்வி தனியார் மயமாவது படிப் படியாகக் குறைக்கப் பட வேண்டும்
அது வரை கல்விக்கட்டணங்களை இதற்கு மேல் உயர்த்தக்கூடாது
ஒவ்வொரு குழந்தைக்கும் தொடக்கக் கல்வி அவர்கள் வாழுமிடங்களுக்கு அருகமைப் பள்ளியில்தான் கட்டாயம் வழங்கப் படவேண்டும்.
கட்டாய இலவசக்கல்வி தொடரவேண்டும்
கல்வி உரிமைச்சட்டம் இன்னும் மேம்படுத்தப் படவேண்டும்
அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் உள் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப் படவேண்டும்.
பள்ளிக் கல்வியில் ஆசிரியர் மாணவர் விகிதம் 1:20 என்பதைக் கட்டாயமாக்க வேண்டும்.
கல்வி நிறுவனங்களுக்கும் சமுதாயத்திற்கும் உள்ள இடைவெளி நீக்கப்படவேண்டும்
கல்வி முறை மாணவர்களின் சுய சிந்தனையை வளர்ப்பதாக மாற்றப் படவேண்டும்.
பள்ளிக் கல்வியில் தாய் மொழியே பயிற்று மொழியாக்கப்படவேண்டும்.
மாணவர்களிடம் ஆராய்ச்சி மனப்பான்மைகள் வளர்க்கப்படவேண்டும்
ஆராய்ச்சிகள் சமுதாயத்திற்கு பயன்படுவதாக அமைய வேண்டும்.
உண்மையிலேயே தரமான ஆசிரியர்களை உருவாக வேண்டுமெனில் தனியார் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது.
அனைத்து பள்ளிகளிலும் ஆய்வகம், விளையாட்டுமைதானம், கணினி, கழிவறைகள் ஆகியன அமைந்திருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
பள்ளிகளில் ஒரு நளைக்கு ஒரு பாடவேளை விளையாட்டு கட்டாயமாக்கப் படவேண்டும். குழந்தைகள் விளையாட்டின் மூலம் பல நற் பண்புகளைக் கற்றுக்கொள்வார்கள்.
மாணவர்களிடம் உள்ள தேர்வு அச்சம் நீங்கும் வகையில் தேர்வு முறைகளில் விரும்பத்தகுந்த மாற்றங்கள் செய்யப்படவேண்டும்.

நன்றி: குங்குமச்சிமிழ்

    

No comments:

Post a Comment