தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Friday, June 10, 2011

விளிம்புநிலை படைப்பாளி-ஜீ.முருகன்

------------------------------------


சிறுகதை, புதினம் , கவிதை, இதழியல், கணினிமென்பொருள் என ப் பலதளங்களில் இயங்கும் ஜீ. முருகன் 1967இல் திருவண்ணாமலை மாவட்டம் கொட்டாவூரில் பிறந்த வர். இவர் செங்கத்தில் பள்ளிக்கல்வியையும் திருக்கழுகுன்றத்தில் கல்லூரிக்கல்வியையும் பயின்றவர். இவரது பெற்றோர் கோவிந்தசாமி - கமலா . தொண்ணூறுகளில் எழுத்தொடங்கிய இவர் பல சிற்றிதழ்களில் இன்றும் தொடர்ந்து எழுதிவருகிறார். தனது இலக்கிய ஈடுபாடு குறித்து வனம் இதழில் கீழ்க்கண்டவாறுஎழுதியுள்ளார்.
“1986, அப்துல் ரகுமான், பாலகுமாரன், சுஜாதா போன்றவர்களின் வசிய எழுத்துக்களால் சிறைபிடிக்கப்பட்டிருந்த காலமது. திருக்கழுக்குன்றத்தில் டிப்ளமோ படிப்பின் மூன்றாவது வருஷத்தை நிறைவு செய்து கொண்டிருந்தேன். முன்பே ஜெயகாந்தன், கி.ராஜநாராயணன்,அசோகமித்திரன், லா.சா.ரா. என்று வாசித்திருக்கிறேன் என்றாலும் முதலில் சொன்ன மூவர்களைப் போல இவர்கள் அவ்வளவுக் கவர்ச்சியானவர்களாக எனக்குத் தோன்றவில்லை. அப்துல் ரகுமானைப் பின்பற்றி கவிதை எழுதவும் கட்டுரைகள் எழுதவும் முயன்று கொண்டிருந்தேன். படிப்பு முடித்து கோவைக்கு வேலைக்குச் சென்றபோது‘விஜயா பதிப்பகம்’ வாயிலாக இலக்கியநூல்கள் அறிமுகம் கிடைத்த்து. கோவை நகருக்கு அது ஒரு பெரிய பொக்கிஷம் என்றுதான் சொல்ல வேண்டும். அங்குதான் நிகழ், கனவு,கிரணம் போன்ற சிறுபத்திரிகைகளைப் பார்த்தேன். ‘நிகழ்’ விலாசம் நான் தங்கியிருந்த பகுதியிலேயே இருந்ததால் அவ்விலாசத்தைத் தேடிப்போனேன் கி.பழனிச்சாமி’ என்கிற மனிதரை அங்குதான் சந்தித்தேன். அப்போது அவர் முற்றாகப் பார்வையை இழந்திருந்தார். இரண்டு சந்திப்புகளுக்குப் பிறகுதான் ‘கோவை ஞானி’ என்பவர் அவர்தான் என்று எனக்குத் தெரிந்தது. கோவை ஞானி என்ற அந்தக் கதவுதான் பல கதவுகள் திறக்கக் காரணமாக இருந்தது. சுந்தர ராமசாமியின் பல்லக்குத் தூக்கிகள், பிரசாதம், நடுநிசி நாய்கள், பள்ளம், புளியமரத்தின் கதை போன்ற புத்தகங்களை அப்போதுதான் நான் வாசித்தேன்”.
ஒரு தரமான வாசகராக இலக்கிய உலகில் நுழைந்து சிறந்த படைப்பாளியக பரிணமித்திருக்கும் இவர் இரண்டு புதினங்கள், மூன்று சிறுகதைத் தொகுப்புகள், ஒரு கவிதைத் தொகுப்பு ஆகிய நூல்களை வெளியிட்டுளார்.
இவரது கதைகள் “மனித மனங்களின் இருள்வெளிகளை ஆழமாக ஊடுருவிச் செல்பவை. ரகசிய வேட்கைகளின் சூது மிகுந்த பாவனைகளையும், ஆண்-பெண் உறவுகள் குறித்த கலாச்சார புனைவுகளையும் கவித்துவ பாசாங்குகளையும் தொடர்ந்து கலைப்பவை . உறவுகளுக்குள் நிகழும் போராட்டங்கள், பாவனைகள், பிறழ்வுகள், பயங்கள், மீறல்கள் வீழ்ச்சிகளை கனவுகளற்ற உலர்ந்த மொழியில் வரைபவை. மனித நடத்தையின் விசித்திரங்கள் பண்பாட்டு அளவுகோல்களால் விளக்கக்கூடியதல்ல என்பதை இவரது நாவலின் பாத்திரங்கள் நிரூபணம் செய்கின்றன”. என்று இவரது படைப்புகள் குறித்து அவற்றை வெளியிட்டுள்ள பதிப்பாளர்கள் மதிப்பீடு செய்கின்றனர்.
“ஜீ.முருகனின் கதைகள் புதிய வடிவங்களுக்காக முயற்சிசெய்பவை எனச் சொல்லலாம். அவ்வாறு முயற்சி செய்யாத கதைகள் எளிய சித்தரிப்புகளாக நின்று விட்டிருக்கின்றன. ஜீ.முருகனின் முக்கியமான பலம் அவருக்கு மொழியாளுமையில் எந்தச் சிக்கலும் இல்லை என்பது. அவரது கதைகள் ஒரு யதார்த்த தளத்திலிருந்து எழுந்து சித்தரிப்பின் ஒரு அம்சத்துக்கு மட்டும் மேலதிகமான குறியீட்டு அழுத்தத்தை அளித்து ஒரு படிமத்தை உருவாக்க முயல்கின்றன. ‘கறுப்ப்புநாய்க்குட்டி’ ‘அதிர்ஷ்டமற்ற பயணி’ போன்ற கதைகளை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். ஜீ.முருகன் வழக்கமான கதைவடிவத்தை அடைவதற்கு முன்னாலேயே கதையை நிறுத்திவிடுதல், கதைக்குள் பிரக்ஞைபூர்வமாக தலையிட்டு பேசுதல் போன்றவற்றையே உத்திகளாக செய்திருக்கிறார்”. என்று ஜீ.முருகன் கதைகள் குறித்து ஜெயமோகன் குறிப்பிடுகிறார்.
ஜீ.முருகனின் தேர்ந்தெடுத்த கதைகளை உடுமலை.காம் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது இத்தொகுப்பிலுள்ள அனைத்துக் கதைகளும் வெவ்வேறு விதங்களில் புதிய சாத்தியங்களை நோக்கி எழுதிப் பார்க்கப்பட்ட கதைகள். அனுபவம், எதிர் அனுபவம், அனுபவத்தின் உள் அனுபவமான கனவுநிலை, கனவில் ஏற்படும் விழிப்பு, கூட்டுச் சமூகத்தின் ஆன்மிகம், தனிமனிதனின் ஆன்மிக வறட்சி இவைகளே ஜீ.முருகனின் சிறுகதைக்குள் நாம் உணரும் திரட்சி என்று இவரது கதைகள் பற்றி அந்த நிறுவனம் மதிப்பிடுகிறது.
ஜீ.முருகனை பின் நவீனத்துவ எழுத்தாளராக வகைப்படுத்தும் ந. முருகேசபாண்டியன் “பின்நவீனத்துவம் தமிழ்ப் புனை கதைப் பரப்பில் புதிய போக்கை அறிமுகப்படுத்தி இன்று பலரும் தொடர்ச்சியறு எழுத்து முறையில் கதை சொல்வதில் முனைந்துள்ளனர். தமிழவன், கோணங்கி, எஸ். ராமகிருஷ்ணன், எம். ஜி. சுரேஷ், ரமேஷ் -பிரேம், ஜனகப்ரியா, கரிகாலன், சோ. தர்மன், பா. வெங்கடேசன், ஜீ. முருகன், சாருநிவேதிதா, யுவன் சந்திரசேகர் போன்றோர் பின் நவீனத்துவக் கதைசொல்லல் மூலம் படைத்துள்ள நாவல்கள் குறிப்பிடத்தக்கன”. என்று, தனது கட்டுரையில் கூறுகிறார்.
ஜீ.முருகன் வனம் என்ற இலக்கிய இதழை 2005 இல் தொடங்கி ஏழு இதழ்கள் வெளியிட்டுள்ளார் . தவிர்க்க முடியாத காரணங்களால் ‘வனம்’ இதழ் அச்சில் வெளிவருவது தற்காலிகமாக நின்று போயுள்ளது. அனைத்து இதழ்களும் இணையத்தில் படிக்க்கிடைக்கின்றன. இவரது படைப்புகள் அனைத்தும் இணையத்தில் கிடைக்கின்றன. தற்சமயம் தினமணியில் (வேலூர் பதிப்பு ) உதவி ஆசிரியராகப் பணிபுரிகிறார். படைப்பாளியாக மட்டுமின்றி சிறந்த விமர்சகராகவும் திகழும் ஜீ.முருகன் ஜீவா என்ற தமிழ் எழுத்துருவை உருவாக்கியுள்ளார்.மனைவி அனிதா, மகன்கள் சிபி, ரிஷி ஆகியோருடன் தற்போது வேலூரில் வசித்துவருகிறார்.

இவரது படைப்புகள்:


மின்மினிகளின் கனவுக்காலம் (நாவல்) -1993
சாயும்காலம் (சிறுகதை) - 2000
கறுப்பு நாய்க்குட்டி (சிறுகதை) - 2002
சாம்பல் நிற தேவதை (சிறுகதை) - 2008
காட்டோவியம் (கவிதை) - 2009
மரம் (நாவல்) – 2009
வனம் இதழின் இணைய முகவரி : http://vanam.wordpress.com/
இணையத்தில் படைப்புகள்படிக்க: http://gmuruganwritings.wordpress.com
முகநூலில் பார்க்க : http://facebook.com/geemurugan
மின்னஞ்சலில் மடலிட : gmuruganjeeva@gmail.com
அலைபேசியில் பேசிட : 9442215709
நேரில் சந்திக்க : 14/66, நான்காம் தெரு, குரு தோப்பு, பகுதி – 1
சத்துவாச்சேரி, வேலூர் – 632 009.

1 comment:

  1. சமூகம் மக்களின் மனோதத்துவத்தில்தான் வாழ்ந்துகொண்டிருகின்றது. உண்மைகளைப்பற்றி சமூகத்தில் யாருக்கும் அக்கறை கிடையாது. மற்றவர்களுடன் கருத்து வேறுபாடின்றி சேர்ந்து ஒத்துப்போவது பற்றித்தான் சமூகம் கவலை கொள்கின்றது.
    ஒரு ஆசிரியர் மூன்றாம் வகுப்பு மாணவர்களிடம் யேசுவின் குடும்பத்தை சித்திரமாக ஒரு தாளில் வரையச் சொன்னார். எல்லாக் குழந்தைகளும் யோசப், மேரி, யேசு ஆகிய மூவரையும் தங்களுக்கு தெரிந்தவிதத்தில் வரைந்தனர். ஆனால் ஒரு மாணவன் இயேசுவின் குடும்பத்தினர் ஆகாயத்தில் விமானம் ஒன்றில் பறப்பதாக வரைந்திருந்தான். ஒரு விமானம். அதன் யன்னல்கள் வழியாக நான்கு பேர் தெரிந்தனர். ஒருவர் யோசப், ஒருவர் மேரி, ஒருவர் யேசு. யார் அந்த நான்காவது மனிதன்? என ஆசிரியர் கேட்டார். அதுதான் விமானத்தின் விமானி என்று மாணவன் பதிலளித்தான்.
    குழந்தைகளாலும் எழுத்தாளர்களாலும் மட்டுமே இப்படி எண்ண கற்பனை பண்ண முடியும். மற்றவர்களுக்கெல்லாம் வித்தியாசமாக புதிதாக எண்ண பயம், தயக்கம். ஆனால் குழந்தைகளுக்கும் படைப்பாளிகளுக்கும் எந்தவித தயக்கமோ பயமோ கிடையாது. அவர்களின் எண்ணங்களை செயல்களை யாராலும் எதனாலும் கட்டுப்படுத்த இயலாது. அதனால்தான் சாதாரண மக்கள் ஒரு கலைஞனையோ, படைப்பாளியையோ மரியாதைக்குரிய மனிதராக, ஒரு கனவானாகப் பார்க்க முடிவதில்லை. மரியாதைக்குரியவர்களாகவும், கனவான்களாகவும் இருப்பவர்களால் எதையும் சிருஷ்டிக்க முடியாது. கனவானாக மாறிய பின்பு சுதந்திரமாக வாழ முடியாது. ஒரு கலைஞன் கனவானாக மாறிவிட்டால் அவன் இறந்தவனுக்குச் சமமாகி விடுகின்றான்.
    மரியாதையையும், சுயகௌரவத்தையும் இழக்கத் தயாராக இருப்பவர்களே படைப்பாளிகளாக இருக்கமுடியும். படைப்பாளிகளை சாதாரணமக்கள் பைத்தியக்காரர்கள் என்றே கருதுகின்றார்கள். படைப்பாளிகள் மிகத்தாமதமாகவே அடையாளம் காணப்படுகின்றார்கள்.

    ReplyDelete