தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Saturday, June 13, 2009

பேராசிரியர் ஆறு.இராமநாதனின் ஆய்வுப்பணிகள்



படைப்பு என்பது புனைவு மட்டும்தானா என்கிற வினாவுக்கு இல்லை என்றுதான் விடையளிக்க வேண்டியுள்ளது. இக்கருத்தில் இலக்கியப் புலமும் கல்விப்புலமும் எதிரெதிராய்த்தான் நிற்கின்றன.புனைவிலக்கியவாதிகள் கல்விப்புலம் சார்ந்த ஆய்வுகளை படைப்பாக ஏற்றுக்கொள்ளாதது ஒரு வகை இலக்கிய அவலம் என்றுதான் கூறவேண்டும். ஒரு சில பேராசிரியர்கள் படைப்பிலக்கிய வாதிகளாகவும் திகழ்கின்றனர், அவர்கள் புனைவிலக்கியத்திலும் ஆய்வுகளிலும் தங்கள் திறமைகளை ஒருசேர வெளிப்படுத்தி வந்துள்ளனர். அத்தகைய பேராசிரியர்களில் ஒருவராகத் திகழ்பவர் முனைவர் ஆறு.இராமநாதன். எழுபதுகளில் வெளி வந்த குமுறல் என்ற சிறுகதைத் தொகுதி அவரின் புனைவிலக்கிய படைப்பிற்கு சான்றாகும். சிற்றூர் மக்களின் வாழ்நிலைகளை உள்ளங்கை நெல்லிக்கனி போல் எடுத்தியம்பும் பல கதைகள் அதில் இடம்பெற்றுள்ளன. அவற்றுள் சில கதைகள் அப்போதே பரிசு பெற்றவையாகும். அண்மையில் இவர் எழுதிய நொண்டிப் பிள்ளையார் என்ற சிறுகதை அண்ணல் நினைவுப் பரிசினைப் பெற்றது.இது பேராசிரியர் நன்னன் அவர்கள் நிறுவிய அறக்கட்டளையால் வழங்கப்படும் பரிசாகும். பிற மொழி கலவாமல், சமூக சீர்திருத்தக் கருத்துக்களைக் கருவாகக் கொண்ட படைப்புகளுக்குத்தான் மேற்படி பரிசு வழங்கப்படும் என்பது பலருக்குத் தெரிந்திருக்கலாம். பேராசிரியர் புதுக்கவிதைகள் எழுதும் ஆற்றல் படைத்தவர் என்பது அவரது படைப்பிலக்கியத் திறமைக்குக் கூடுதல் வலுச்சேர்க்கும் செய்தியாகும். நடவு, வையம் போன்ற இலக்கிய இதழ்களில் இன்றும் கவிதை எழுதி வருகிறார். கவிதைகளிலும் பகுத்தறிவு, பெண்ணியம் போன்ற சிந்தனைகளை முன்னிறுத்துகிறார். புனைவிலக்கியத் தளத்தைவிட ஆய்வுலகில் அவரது படைப்பாக்கப் பங்களிப்பு மிகவும் பிரமிக்கத் தக்கதாகும். தமிழில் புதிர்கள் என்ற ஆய்வு நூல் இரண்டு பதிப்புகள் வெளி வந்துள்ளன. அதில் புதிர்களின் வகைகள், சமுதாயத்தில் புதிர்களின் பங்கு, புதிர்களில் வெளிப்படும் பண்பாட்டுக்கூறுகள் பற்றியெல்லாம் சான்றாதாரங்களுடன் அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்து எளிய வாசகர்களும் படிக்கும்படியான தெளிந்த நடையில் படைத்துள்ளார். நாட்டுப்புறவியல் என்ற நூலும் இரண்டு பதிப்புகள் கண்டுள்ளது. அந்நூல் ஆய்வு உலகம் கண்டிராத பல புதிய கதவுகளைப் பேராசிரியர் நமக்கு திறந்து காட்டுகிறார். தெருக்கூத்துக் கலைபற்றிய முதன்முதலான ஆய்வு இவருடையது. நாட்டுப்புறப் பாடல்களைப் பொருள்கொள்ளும் முறை, மனிதர்களுக்கு வழங்கப்படும் காரணப்பெயர்கள் எனப் பல புதிய தளங்களில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். நாட்டுப்புறப் பாடல்கள் காட்டும் தமிழர் வாழ்வியல் என்பது இவரது முனைவர் பட்ட ஆய்வு. அதனையும் நூலாக வெளியிட்டுள்ளார். அதற்காக எழுபதுகளில் ஒருங்கிணைந்த தென்னார்க்காடு மாவட்டம் முழுக்கக் களப்பணி மேற்கொண்டார். அப்போது திரட்டிய பாடல்களைக்கொண்டு ஆய்வு நிகழ்த்தியதோடு நில்லாமல் அப்பாடல்கள் எதிர்காலத்தில் ஆய்வு நிகழ்த்துவோருக்குப் பயன்பட வேண்டும் என்ற நோக்கத்தில் நாட்டுப்புறப் பாடல் களஞ்சியமாகத் தொகுத்து வெளியிட்டுள்ளார். பத்துத் தொகுதிகளில் முதல் ஐந்து தொகுதிகள் பேராசிரியர் தொகுத்தவை அடுத்த ஐந்து தொகுதிகளுக்கு இவர்தான் முதன்மைப் பதிப்பாசிரியர். இவர் வெளியிட்ட நூல்களில் மிகவும் குறிப்பிடத்தகுந்தது வரலாற்று நிலவியல் ஆய்வுமுறை என்பதாகும். ஒரு கதை வாய்மொழியாக ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு பரவும்போது நிலவியல் கூறுகள் அக்கதையில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்துகின்றன என்பதை தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஆய்வு செய்துள்ளார். பல பேராசிரியர்களால் இன்றும் வியந்து போற்றத்தக்க ஆய்வு அது. நாட்டுப்புற கலைகள்-நிகழ்த்து கலைகள் என்ற நூலில் நாட்டுப்புற நிகழ்த்து கலைகள் பலவற்றையும் ஆவணப்படுத்தியுள்ளார். இந்நூலுக்கு 2001 ஆம் ஆண்டுக்கான காசியூர் ரங்கம்மாள் இலக்கிய விருது வழங்கப்பட்டுள்ளது. நாட்டுப்புறவியல் என்பது எளிமையான ஒரு துறை, அதில் ஆய்வு செய்வது மிகவும் எளிது என்ற எண்ணம் பரவலாக உள்ளது.ஆனால் பேராசிரியரிடம் ஆய்வு செய்யும் ஒருவர் அந்தக் கருத்தோடு உடன்பட மாட்டார். ஏனெனில் நாட்டுப்புறவியல் ஆய்வு என்பது பல்துறை கலப்பாய்வாகத் திகழ வேண்டும் என்ற கருத்துடையவர் பேராசிரியர். நாட்டுப்புறவியலுக்கென்று சில கோட்பாடுகள் உள்ளன, அக்கோட்பாடுகளை ஆய்வு மாணவர்கள் முறையாகப் பயில வேண்டும் என்பதற்காக நாட்டுப்புறவியல் கோட்பாட்டுப் பார்வைகள் என்ற நூலைப் படைத்துள்ளார். களப்பணியின் போது பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் ஏறாளம் உண்டு. ஆய்வுக்காகத் தான் மேற்கொண்ட களப்பணிகளில் ஏற்பட்ட பட்டறிவி னடிப்படையில் நாட்டுப்புறவியல் கள ஆய்வு நெறிமுறைகள் என்ற நூலையும் வெளியிட்டுள்ளார். 1982 இல் இவர் வெளியிட்ட காதலர் விடுகதைகள் என்ற நூல் தமிழ் வாய்மொழி இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் ஒரு படைப்பாகும். படிப்போருக்கு சுவையேற்படுத்தும் ஒரு மாறுபட்ட படைப்பு அது. பேராசிரியர் தன் நண்பர்களோடு இணைந்து பதிப்பித்த நாட்டுப்புறக் கதைக்களஞ்சியம் பதினைந்து தொகுதிகள் வெளியிடப்பட்டுள்ளன. அது வெகு மக்கள் இலக்கிய வகைமையைப் பறைசாற்றும் ஓர் அரிய முயற்சியாகும். எழுதப் படிக்கத் தெரியாத நம் முன்னோரிடம் புதைந்து கிடக்கும் படைப்பாற்றல்களை அத் தொகுப்பிலுள்ள பல கதைகளில் காணலாம். இன்றைய படைப்பிலக்கிய முயற்சிகளுக்கெல்லாம் தாயாக நம் முன்னோர்களின் படைப்பாற்றல் அமைந்திருப்பதை அக்கதைகள் நமக்கு உணர்த்துகின்றன. சிற்றூர் மக்களின் வழிபாட்டு முறைகளை ஆய்வு செய்து, அது மேல்தட்டு மக்களின் நிறுவன வழிபாட்டு முறையிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது என்பதையெல்லாம் ஆய்வு செய்துள்ளார். சிறு தெய்வக்கோயில்கள் பெருந்தெய்வக் கோயில்களாகக் காலப்போக்கில் மாற்றப்பட்டுள்ளன என்ற கருத்து ஆய்வுலகில் உண்டு ஆனால் அதற்கான ஆதாரப்பூர்வமான எடுத்துக்காட்டுகள் நம்மிடம் இல்லை. அக்குறையைப் போக்கியவர் என்ற பெருமை பேராசிரியருக்கு உண்டு. கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பிலுள் தீப்பாஞ்சாயி என்ற சிறு தெய்வம் எவ்வாறு தீப்பாய்ந்த நாச்சியம்மன் திருக்கோயிலானது என்பதைத் தக்க சான்றுகளுடன் வெளிப்படுத்தும் கட்டுரை இவரது ஆய்வுப் பயணத்தில் ஒரு மைல் கல்லாகும். இவருடைய ஆய்வுகள் அனைத்தும் தனித் தன்மையுடையவை. இராமநாதன் பாணி ஆய்வுகள் என்று குறிப்பிடுமளவிற்கு முன் மாதிரியானவை. இவரது ஆய்வுகள் பலவற்றை மேல்நாட்டு அறிஞர்கள் பாராட்டியுள்ளனர். தன் மாணவர்களின் கட்டுரை என்றாலும் உரிய முறையில் மேற்கோள் காட்டுவதோடு அவர்களின் பெயரையும் குறிப்பிடும் ஆய்வு நேர்மையுடைய பண்பாளர். இதுவரை வெளிவந்த இவரது ஆய்வுகளில் குறிப்பிடத் தக்கனவற்றை மேம்படுத்தி மேலும் பல புதிய கட்டுரைகளை இணைத்து தமிழர் கலை இலக்கிய மரபுகள் என்ற நூல் 672 பக்கங்களில் மிகச்சிறப்பாக மெய்யப்பன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. சிறந்த நாட்டுப்புறவியல் நூலூக்கான தமிழக அரசின் பரிசு பெற்றுள்ள இந்நூல் தமிழர்களின் அசலான பண்பாட்டு மரபுகளை அறிந்துகொள்ள விரும்புகின்றவர்களுக்கு ஆகச்சிறந்த ஆவணமாகத் திகழும். சிதம்பரம் வட்டம் வீராணம் ஏரிக்கருகில் உள்ள மஞ்சக்கொல்லை என்ற சிற்றூரில் ஆறுமுகம் சீதாலட்சுமி இணையருக்கு மகனாகப்பிறந்த இவர் பள்ளிப் படிப்பை சொந்த ஊரிலும் கல்லூரிப்படிப்பை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும், முனைவர் பட்டத்தை உலகத்தமிழாராய்ச்சி நிறூவனத்திலும் பெற்றவர்.தற்போது தமிழ்ப் பல்கலைக்கழக நாட்டுப்புறவியல் துறையில் பேராசிரியராகவும், தமிழ்ப்பல்கலைக்கழக அஞ்சல்வழிக் கல்வி நிறுவன இயக்குநராகவும் பணியாற்றி வருகிறார்.

6 comments:

  1. உங்களின் தமிழ்ப்பணிக்கு என் பாராட்டுகள். ஆறு.இராமநாதன் அவர்கள் பற்றிய உங்கள் பார்வை, கருத்துகள் சிறப்பாக உள்ளது.

    ReplyDelete
  2. ஒரு வேண்டுகோள். பின்னூட்டம் போடுவதற்கு word verification option ஐ நீக்கினால் நன்றாகயிருக்கும்.

    ReplyDelete
  3. அருமை. பேராசிரியர் ஆறு.இராமநாதன் அவர்களைப்பற்றிய அழகிய அரிய கட்டுரையை அளித்துள்ளீர்கள். தங்கள் தமிழ்ப்பணி தொடரவாழ்த்துகள்.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. பேராசிரியரின் ஆய்வுகள், புத்தகங்கள், கட்டுரைகள் மற்றும்பல உபயோகமான செய்திகளை தொகுத்தளிக்க வேண்டும் என்ற நோக்கில் http://aruramanathan.blogspot.com/ உருவாக்கப்பட்டுள்ளது. இது பற்றிய உங்களது கருத்து மற்றும் பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன.

    ReplyDelete