உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் மதுரை உலகத் தமிழ்
சங்கமும் இணைந்து முதலாவது உலகத்
தமிழிசை மாநாட்டினை மதுரையில் 2019 ஆம் ஆண்டு டிசம்பர்
திங்கள் 14 15 சனி ஞாயிறு ஆகிய
இரு நாட்களில் நடத்தின.
100 ஆண்டுகளுக்குப்
பிறகு உலக அளவில் நடைபெறும்
முதல் தமிழிசை மாநாடு என்பது
இந்த மாநாட்டின் சிறப்பு. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர்
பேராசிரியர் கோ.விசயராகவன், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தின் அயல்நாட்டு தமிழர் புலம்
துறையின் பேராசிரியர் கு.சிதம்பரம், உலகத்தமிழ்ச்சாங்கத்தின் இயக்குநர் முனைவர் ப.அன்புச்செழியன்
ஆகியோர் மாநாட்டுப்பணிகளை ஒருங்கிணைத்து சிறப்பாக நடத்தினார்கள்.
இந்த மாநாடு மூன்று இணை
அமர்வுகளாக நடத்தப்பட்டது ஒரு அரங்கத்தில் பன்னாட்டு
தமிழிசை கலைஞர்கள் இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தினார்கள்.
மதுரை இசைக் கல்லூரி குழுவினரின்
இசைக் கச்சேரியோடு தொடங்கியது இசை அரங்கம். குரு ஆத்மநாதன் அவர்களின்
தேமதுரத் தமிழோசை என்னும் நிகழ்ச்சியில்
சிலப்பதிகாரம் புறநானூறு வள்ளலார் பாடல்கள் என சங்க இலக்கியங்களை
இசை வழியாக மக்களிடம் கொண்டு
சேர்த்தார். உலகத் தமிழிசை ஆராய்ச்சி
மற்றும் வளர்ச்சி கழகம் அமெரிக்கா விலிருந்து
வந்திருந்த பாபு விநாயகம் அவர்களின்
இசை நிகழ்ச்சி, இலங்கை அவை காற்று
குழுவினர் நிஷாந்த ராகினி திருக்குமரன்
அவர்களின் தலைமையில் தமிழர் நாமும் நவரச
வாழ்வும் எனும் தமிழ் இசை
நடன நிகழ்ச்சி நடத்தினர். திரிகோணமலை
வில்லூன்றி குறவஞ்சி என்னும் இசை நாடகத்தை
மிகச் சிறப்பாக இலங்கை தியாகராஜர் கலைக்கோயில்
குழுவினர் நிகழ்த்தினார். குறத்தியாக நடனமாடிய சிறுமி அனைவரின் கவனத்தையும்
ஈர்த்தார். தஞ்சாவூர் நல்லசிவம் குழுவினரின் திருமுறை பண்ணிசை நிகழ்ச்சியும் திண்டிவனம்
வேட்டவராயன் குழுவினரின் வில்லிசை நிகழ்ச்சியும் நடைபெற்றன. சென்னை சாகித்ய நாட்டியாலயா
குழுவினர் பாரதியார் பாடல்களை தமிழிசையின் துணைகொண்டு நடனமாகக்
காட்சிப்படுத்தினார். மதுரை இசைக் கல்லூரி
முதல்வர் டேவிட் அவர்களின் இசை
நிகழ்ச்சி, அண்ணாமலைப் பல்கலைக்கழக இசைத்துறை பேராசிரியர் முனைவர் சித்ரா அவர்களின்
சிலப்பதிகார நடனம், சேலம் பிரபந்த
மாலா இசைக் குழுவினரின் திவ்ய
பிரபந்த இன்னிசை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
கோவை சங்கரா நாட்டியப்பள்ளி அரோரா
குழுவினர் நிகழ்த்திய வள்ளுவம் வாழ்க்கையானால் என்னும் இசை நிகழ்ச்சியும்
திருவண்ணாமலை சிவ தென்றல் நாடனாலயா
குழுவினரின் திருவாசக இசை நடனநிகழ்ச்சி நடைபெற்றது.
நிறைவாக
மதுரை தங்கவேல் குழுவினரின் பறையிசை ஆட்டம், பெண்களின்
தப்பாட்டம் என நிறைவு விழாவில்
தமிழரின் தொல்லிசைகள் இசைக்கப்பட்டன. நாட்டுப்புற நடன கலைஞர்களின் பொய்க்கால்
குதிரை ஆட்டம் கட்டைக்கால் ஆட்டம்
போன்ற நிகழ்ச்சிகள் தமிழ் இசைக்கருவிகள் முழங்க
நடந்தேறின.
இன்னொரு
அரங்கத்தில் பன்னாட்டு தமிழிசை ஆய்வாளர்கள் தங்கள்
ஆய்வுக் கட்டுரைகளை அளித்தார்கள். 25 அமர்வுகளில் ஆய்வுக்கட்டுரைகள் அளிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டன. உலகின் பல்வேறு நாடுகளில்
இருந்து ஆய்வாளர்கள் 500க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை
அனுப்பியிருந்தனர் அவற்றுள் மாநாட்டு அறிஞர் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட
250 கட்டுரைகள் தொகுக்கப்பட்டு1800 பக்கங்களில் நூல்களாக 3 தொகுதிகள் இந்த மாநாட்டில் வெளியிடப்பட்டன.
மேலும் மாநாட்டு நிகழ்வுகள். தொகுக்கப்பட்டு சிறப்பு மலர் ஒன்றும்
வெளியிடப்பட உள்ளது. மூன்றாவது
அரங்கில் தொல்லிசைக் கருவிகள் கண்காட்சி நடைபெற்றது. சென்னை கோடம்பாக்கத்தில் அமைந்துள்ள
கோசை நகரான் இசைக்கருவி காட்சிக்கூடத்தினர்
பழமையான பல இசைக்கருவிகளை காட்சிப்படுத்தி
இருந்தனர். தண்ணுமை, சிறுபறை, முழவு, முரசு, துடி,
தமருகம், உறுமி, துடும்பு, கொட்டு
தவில், மொடா
மத்தளம், சேமக்கலம், சங்கு, கொம்பு, நகரா,
பாங்கா, போன்ற பல்வேறு வகையான
பழங்கால இசைக்கருவிகளைக் காட்சிப்படுத்தி இருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அந்த அரங்கில் பார்வையாளர்கள்
பழமையான இசைக் கருவிகளை வாசித்து
மகிழ்ந்தனர்.
அமெரிக்கா,
இங்கிலாந்து மலேசியா சிங்கப்பூர் ,சீனா,
மொரிஷியஸ், ஹாங்காங் ஆகிய நாடுகளிலிருந்து தமிழ்
இசைக் கலைஞர்களும் இசை ஆய்வாளர்கள் என
ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். உள்ளாட்சித்
தேர்தல் அறிவித்ததால் அமைச்சர்கள்
கலந்து கொள்வதற்கு தேர்தல் ஆணையம் அனுமதிக்கவில்லை.
மாநாட்டின்
தொடக்க விழாவிலும் நிறைவு விழாவிலும் இசைத்துறை
வளர்ச்சிக்கு சிறப்பான பங்களிப்பு செய்தவர்களுக்கும், இந்த மாட்டுக்கு பல்வேறு
வகையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கும் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன.
குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் விருதுகளை வழங்கினார்.
இந்த மாநாடு தொடர்ந்து நடைபெறுவதற்காக
உலகத் தமிழ் இசை ஆராய்ச்சி
சங்கம் என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.
இந்த சங்கத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த
பிரதிநிதிகள் இடம்பெற்றனர்.
மேலும்
சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழ் இசையை இளைய சமுதாயத்திற்கு
கொண்டு சேர்ப்பதற்காக அனைத்துப் பள்ளிகளிலும் இசை ஒரு பாடமாக்கப்பட
வேண்டும். அதனை பயிற்றுவிப்பதற்கு முறையாக
ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.
இசை சார்ந்த நூல்களை தமிழிலிருந்து
ஆங்கிலத்திற்கும் ஆங்கிலத்திலிருந்து தமிழிலும் மொழியாக்கம் செய்யப்பட வேண்டும்.
இரண்டு
ஆண்டுகளுக்கு ஒருமுறை உள்நாட்டிலோ அல்லது
வெளிநாடுகளிலோ உலகத் தமிழிசை மாநாடுகள்
நடத்தப்பட வேண்டும்.
தமிழ் இசை சார்ந்த முயற்சிகளை
ஆவணப்படுத்துவதற்கு இசை ஆவண காப்பகம்
ஒன்றை உருவாக்க வேண்டும்.
பழங்குடி
மக்களின் இசை பாதுகாப்பதற்கு நடவடிக்கை
எடுக்க வேண்டும்.
இசைக் கருவிகளை உருவாக்கும் தொழிலாளர்கள் வாழ்வு மேம்படுவதற்கு ஒரு
நல வாரியத்தை ஏற்படுத்த வேண்டும்.
இசைத்துறையில்
சிறந்து விளங்குபவர்களுக்கு இசை அறிஞர்களின் பெயரில்
விருதுகள் வழங்கப்பட வேண்டும்
என்று தீர்மானிக்கப்பட்டது.
இரண்டாவது
உலக தமிழிசை மாநாட்டினை புதுச்சேரியில்
நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
நன்றி: இந்து தமிழ்திசை
No comments:
Post a Comment