கடலூர் கலைத்திருவிழா2018
***
இன்று கடலூரில் நடைபெற்ற மாபெரும் ஓவியப்போட்டி நிறைவு விழாவில் பங்கேற்றது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வு. ஓவியப்போட்டி என்பதை விட கலைத்திருவிழா என்றுதான் சொல்லவேண்டும். ஓவியக்கலைஞர் ஏ.ஆர். ( கலைப் புரட்சி என்பதன் ஆங்கிலச் சுருக்கம்) ஓவியப் பயிற்சிக் கூட நிறுவனர் ராஜசேகர்
அண்ணாமலைப் பல்கலைக் கழக வேளாண் துறை பேராசிரியர் சிவசக்திவேலன், குழந்தைகள் நல வல்லுநர் மருத்துவர் இளந்திரையன் ( இவர் குழந்தை மருத்துவர் நமசிவாயம் அவர்களின் உறவினர்) வருமான வரித்துறை அலுவலர் செங்குட்டுவன் என வேவ்வேறு துறை சார்ந்த நண்பர்கள் ஒன்றிணைந்து இதுபோன்ற ஒரு விழாவினை மூன்று ஆண்டுகளாக சிறப்பாக நிகழ்த்தி வருவது பிரமிக்க வைக்கிறது. 700 மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள் என 1000 பேர் ஒன்றுகூடிய ஒரு திருவிழாவாக நடைபெற்றது. மணற்சிறபம் அட்டைச் சிற்பம் நெகிழி சிற்பம் என ஒவ்வொரு சிற்பமும் காண்போரை சிந்திக்க வைத்தது. குழந்தைகளின் நிம்மதியை மின்னணு சாதனங்கள் எவ்வாறு குலைக்கின்றன என்பதை மணற்சிறபம் உணர்த்தியது. மடியில் உரங்கவேண்டிய குழந்தை மடிக்கணினியில் உரங்கும் அவலத்தை உரத்துச் சொன்னது அருளியின் மணற்சிற்பம். ஒற்றை மரக் கன்றை காப்பாற்ற மழை வராதா என ஏக்கத்தோடு வானத்தை நோக்கும் உயிர்வளி உருளையை முதுகில் சுமந்திருக்கும் மனிதனை அட்டைச் சிற்பமாக அடுத்த நூற்றாண்டுக்கே நம்மை அழைத்துச் செல்லும்படி அமைத்திருந்தார் ஆகாஷ். நெகிழி தண்ணீர் பாட்டில்களால் உருவான நெகிழி மரம் நெஞ்சை பதைக்க வைத்தது. தினேஷின் இந்த முயற்சி பார்ப்போர் மனதில் நிச்சயம் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்தும். அதற்கு பொருத்தமான கவிதைகளை ஆயுதமொழியன் சீனிவாசன் ஆகிய மாணவர்கள் எழுதி காட்சிப்படுத்தியதும் அருமை.
இந்த நிகழ்வில் கூடுதல் சிறப்பு மரபுவழி சுடுமண் சிற்பக்கலைஞர் யுனெஸ்கோ விருதுபெற்ற சிறப்புக்குறிய வில்லியனூர் முனுசாமி அவர்களின் சிற்பக் காட்சியும் பயிலரங்கும். குழந்தைகளோடு குழந்தையாக அவர்களுக்கு களிமண் சிற்பங்களுக்கான பயிற்சி வழங்கி வீட்டில் செய்து பார்க்க களிமண்ணையும் வழங்கினார். அவரின் வில்லியனூர் பட்டறைக்கு குடியரசு முன்னாள் தலைவர் மேதகு அப்துல்கலாம் அவர்களும் புதுவை துணை நிலை ஆளுநர் மேதகு கிரண்பேடி அவர்களும் சென்று அவரோடு உரையாடி உள்ளனர். சுடுமண் சிற்பங்களோடு அன்றாட பயன்பாட்டுக்கான சுடுமண் கைவினைப் பொருள்களையும் மக்களுக்கு வழங்கி வருவது கூடுதல் சிறப்பு.
போட்டிக்கு நடுவர்களாக ஓவியக்கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் வந்திருந்து பரிசுக்கு உரிய ஓவியங்களைத் தேர்வு செய்தனர். கலந்துகொண்ட எல்லாருக்கும் பரிசளித்திருக்க வேண்டும். ஆனால் அது இயலாது என்பதால் வேறு வழியின்றி ஒரு சில ஓவியங்களை மட்டுமே தேர்வுசெய்தோம் என நடுவர்களில் ஒருவர் கூறியது பார்வையாளர்களிடம் ஆரவாரத்தை ஏற்படுத்தியது.
இந்த ஏ.ஆர். ஓவியப் பயிற்சிப் பட்டறை ஒரு ஓவியக்கல்லூரியாக பரிணமிக்க வேண்டும் என்கிற என் அவாவை வெளிப்படுத்தி நண்பர்களிடமிருந்து விடைபெற்றேன்.
என் அழைப்பை ஏற்று என்னுடன் கடலூர் பயணத்தில் உறுதுணையாக வந்த நண்பர் தணிக்கையாளர் ராமச்சந்திரன் அவர்களோடு நிகழ்வின் சிறப்புகளைப் பேசிக்கொண்டே வந்தது பயணக் களைப்பைப் போக்கியது.
இந்த நாளை இனிய நாளாக்கிய நண்பர்களுக்கு நன்றி.
விடுமுறை நாளிலும் தங்கள் பள்ளி மாணவர்களைத் திரளாகப் பங்கேற்கச் செய்த திருவள்ளுவர் பள்ளி மற்றும் எம்.ஜி.ஆர்.நகர் பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டுகள்.
No comments:
Post a Comment