பல மணி நேர உழைப்புச்சுரண்டலுக்கு எதிராக பல்வேறு
நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் போராடி 19 ஆம் நூற்றாண்டின்
தொடக்கத்தில் பெற்ற உரிமைதான் 8 மணி நேர வேலை முறை.
8 மணி நேர வேலை
8 மணிநேர ஓய்வு 8 மணி நேர உறக்கம் என ஒரு நாள் பொழுதை பகுத்துக்கொண்ட வரலற்றுப் பின்னணி
இந்த தொழிலாளர் நாளுக்கு உண்டு.
உடல் உழைப்பும் மூளை உழைப்பும்:
நாம் உழைப்பு என்பதை உடலுழைப்பு என்று மட்டும்
நினைத்துவிடக்கூடாது. மூளை உழைப்பும் உடலுழைப்புக்கு நிகரானதே. ஆனால் இந்த இரு வகை
உழைப்புகளும் சமமாக பார்க்கப்படுவதில்லை. உடல் உழைப்புக்கு குறைவான ஊதியமும் மூளை உழைப்புக்கு
அதிக ஊதியமும் வழங்குவது என்பது தொழில் துறையின் ஏற்றத்தாழ்வாகப் பார்க்கப்படுகிறது.
மறைமுக உழைப்புச் சுரண்டல்:
இப்போது அரசு மற்றும் தனியார் துறைகளில் 8 மணி
நேர வேலைமுறை என்பது நடைமுறையில் இருப்பினும் மறைமுக உழைப்புச்சுரண்டல் இன்றும் தொடர்ந்துகொண்டுதான்
இருக்கிறது. பொதுத்துறை நிறுவனங்களில் ஆள் குறைப்பு செய்து அங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்கு
வேலைப்பளுவை அதிகமாக்கி மன உளைச்சலுக்கு ஆளாக்குகின்றனர்.
வேறு சில தனியார் நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு
இலக்கு நிர்ணயம் செய்து பல மணிநேர உழைப்புச்சுரண்டலை மறைமுகமாக நிகழ்த்துகின்றனர்.
குறிப்பாக மென்பொருள்
நிறுவனங்கள் இளைஞர்களின் உழைப்பைத் திருடிக் கொழுக்கின்றன. ஒரு நாளைக்கு 10 மணிநேரம்
கட்டாயம் வேலைபார்த்தாகவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர். அதற்கேற்ற ஊதியமும்
அவர்களுக்கு வழங்கப்படுவதில்லை.
துப்புறவுத் தொழிலாளர் நிலை:
துப்புறவுத் தொழிலாளர்களின் நிலையோ இன்னும் பரிதாபம்.
அவர்களுக்கு முறையான பாதுகாப்புக் கருவிகள் வழங்கப்படுவதில்லை. சமுதாயத்தில் மற்ற தொழிலாளர்களுக்கு
இணையான மறியாதை கிடைப்பதில்லை. அவர்களை அலட்சியப்படுத்தும் மனப்போக்கே சமூகத்தில் காணப்படுகிறது.
வங்கிக்கு ஊதியம் பெற வரும் துப்புரவுத் தொழிலாளர்கள் மற்ற வாடிக்கையாளர்களைப்போல்
மறியாதையுடன் நடத்தப்படுவதில்லை. பொது மக்களும் அவர்க்ளைப்பார்க்கும் பார்வையே அவர்களை
அவமதிப்பதாக உள்ளது. இன்னும் மனிதக்கழிவுகளை மனிதர்களே அகற்றும் இழிநிலைகூட ஒழிக்கப்படவில்லை.
வேளாண் தொழிலாளர்கள்:
இந்தியா விவசாய நாடு என்றாலும் விவ்சாயத்தை ஒரு
தொழிலாக அங்கீகரிக்கவில்லை. அரசு சார்ந்த பண்ணைகளிலும்கூட நாடு முழுவதும் ஒரே மாதிர்யான
ஊதியம் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதில்லை. ஊதியத்தில் பால் பாகுபாடு இந்தத்துறையில்மட்டுமே
இன்றளவும் காணப்படுகிறது. ஆணுக்கு ஒரு ஊதியம் பெண்ணுக்கு ஒரு ஊதியம் வழங்கப்படுகிறது
இந்த அநீதி இன்னும் களையப்படவில்லை.பசுமைப்புரட்சி என்ற பெயரில் இயந்திர்மயமாக்கல்
நிகழ்வு வெகுவாக தொழிலாளர்களின் வருமானத்தை பாதித்துள்ளது.
நெசவுத் தொழிலாளர்கள்:
உழவும் நெசவும் இரு கண்களைப்போன்ற தொழில்கள் என்றாலும்
இவ்விரு தொழில்களுமே இன்று நலிவடைந்து வருகின்றன. நெசவாளர்களுக்கு கஞ்சித்தொட்டியும்
விவசாயிகளுக்கு எலிக்கரியும் பரிசளித்த பெருமைமிகு நாடு நம்முடையது. நெசவாளர்களின்
வாழ்க்கை நிலையும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. ஒரு வேட்டியோ புடவையோ நெய்யும் நெசவாளியின்
கூலியை விட குறைவான விலைக்கு விற்கவேண்டிய அவலமே கைத்தறி நெசவுக்கு உள்ளது.
கட்டடத் தொழிலாளர்கள்:
உலகின் எல்லா நாடுகளிலும் இன்று முன்னணியில் இருக்கும்
துறை கட்டுமானத்துறை எனலாம். அதனால் பல தொழிலாளர்கள் வாழ்கின்றனர் என்றாலும் இந்தத்
துறையிலும் ஆண்களுக்கும் பெண்களுக்கும், ஊதிய ஏற்றத்தாழ்வு மலிந்து கிடக்கிறது. மாநகரங்களில்
வானுயர்ந்த கட்டடங்களில் உயிரைப் பணயம் வைத்தே பணிசெய்கின்றனர். இதனால் அதிக அளவு தொழிலாளர்கள்
நாட்டுக்குள்ளும் நாட்டுக்கு வெளியிலும் இடம்பெயர்கின்றனர். இந்த இடப்பெயர்ச்சியால்
ஒவ்வொரு சமுதாயத்திலும் விரும்பத் தகாத பல பண்பாட்டுச் சீரழிவுகள் நடைபெறுகின்றன.தொழிலாளர்களின்
இடப்பெயர்ச்சி அக்குடும்பச் சிறுவர்களை அவர்களின் எதிர்காலத்தை வெகுவாக பாதிக்கிறது.
இல்லத்தரசிகளின் இன்னல்:
அலுவலகங்களிலும் தொழிலகங்களிலும் பணியாற்றும்
தொழிலாளர்கள் அடையும் துன்பங்கள் வெளி உலகம் அறிந்தவை. மேலும் அவர்களுக்கென்று சங்கங்கள்
உண்டு. அவர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் சக தொழிலாளர்கள் ஒன்றிணைது போராடும் வாய்ப்பாவது
உள்ளது. ஆனால் இல்லத்தரசிகளின் பிரச்சனைகள் தனி ரகம். அவர்களுக்கென்று 8 மணி நேர வேலைமுறை
கிடையாது. அதற்கென தனி ஊதியமும் வழங்குவதில்லை அவர்களின் உழைப்பு தொழிலாகக் கருதப்படுவதுகூட
இல்லை. இப்படியான உழைப்புச்சுரண்டல் வேறு எந்தத் துறையிலும் நிகழ்வதில்லை. இதில் என்ன
கொடுமை என்றால் இதைப்பற்றியெல்லாம் அவர்கள் சிந்திப்பதல்லை என்பதுதான்.
இந்த தொழிலாளர்
தினத்தில் இல்லத்தரசிகளின் பணிகளைப்போற்றுவோம். அவர்களுக்கு உரிய மறியாதையை அளித்து
மற்ற பணிகளுக்கு நிகரான பணியாக அங்கீகரிப்போம்.
நன்றி: தமிழ் முரசு மற்றும் நண்பர் நாகமணி
நன்றி: தமிழ் முரசு மற்றும் நண்பர் நாகமணி
No comments:
Post a Comment