தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Monday, January 14, 2013

அந்த நான்கு நாட்கள்

 நாள்.1

வடக்குத் தெற்கென
இரு மருங்கிலும்
ஆறுகள் வறண்டோடும்
சிற்றூரொன்றில்
சாணிப்பிள்ளயாரை
கோலங்களின் மீதமர்த்தி
பனித்துளி மினுங்கும் பூசணிப்பூவை
அதன் தலையில் செருகும்
தலைவியிடம்

பேச்சுறுப்பில் ஆவி பறக்க
புன்னகை தந்து
முந்திய இரவில் கொய்த
கசப்புக்காய் மரத்தின்
இலைக்கொத்துகளைச் சுமந்து
கம்பளி முக்காடிட்டு
வயல் வெளிகளின் சனி மூலையைத்
தேடிச்செல்வான் தலைவன்.

 நாள்.2

விரல் மூட்டுகளால்
தட்டி எழுப்பப் பட்ட
செஞ்சூளைப் பானைகள்
மஞ்சளிலை உடுத்தி
கரும்புக்காவலர்கள் புடை சூழ
வாசலடுப்பில் அமர்ந்து
பொங்கி வழியும் சர்க்கரைச் சிரிப்பால்
சூரியனைச் சூடாக்கும்.


நாள்.3

கொம்பு முளைத்த தோழர்கள்
குளித்துத் திரும்புகையில் 
வால் நீர்த் துளிகள்
எழுதிய கவிதைகள்
வரவேற்கும் வீதிகள்

பச்சை வெள்ளை மஞ்சள்
இலை மலர்களாலான
மாலைகள் கிடத்திய திண்ணைகள்

வீட்டு தெய்வத்திற்கு 
ஊற்றிய சாணித்தொட்டி 
கஞ்சியில் ஆடை படரும்
உள் வாசல்

பசும்புற்கள் நிரம்பிய
கட்டுத்தறிகள்

எரியும் சூடத்தை
பெருமூச்சால் அணைக்க முயலும்
வாயில்லா ஜீவன்கள்.

நாள்.4

பால் பொங்கியதை
தெய்வத்தைக்குறிக்கும் சொல்லால்
வினவும் பணியாளர்கள் உலவும்
சாராயம் நாறும் சடு குடு தெருக்கள்

கத்திரிக்கொல்லையை
வெட்டப்பிறந்த
தம்பியின் பெருமை பேசும்
வளையல் கரங்கள்
முன்னிரவை வழியனுப்பி
விடியலை வரவேற்கும்


No comments:

Post a Comment