தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Tuesday, May 25, 2010

முதல் விமானப் பயணம்





சிறு வயதில் எங்கள் சிற்றூரின் மீது அவ்வப்போது விமானங்கள் பறந்து செல்வதுண்டு. அதைப்பார்ப்பதற்காக வீடுகளைவிட்டு சிறுவர் கூட்டம் வெளியில் வந்து ஆரவாரிக்கும். ஏரோப்பிளான் ஒக்.....ழி என்று கத்திக்கொண்டு கண்களை விட்டு மறையும் வரை துள்ளிக் குதிப்போம். பெரியவனான பிறகு சென்னை செல்லும் போதெல்லாம் விமான நிலையத்தில் நிற்கும் விமானங்களைப் பேருந்திலிருந்தபடி வேடிக்கைப் பார்த்துக்கொண்டு செல்வேன். வானத்தில் பறக்கும் போது பார்த்ததை விட தரையில் பார்ப்பது துல்லியமாகத் தெரிவதால் வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும். ஒருமுறை பிர்லா கோளரங்கம் சென்றபோது அங்கிருந்த விமான மாதிரியை தொட்டுப்பார்த்து சுற்றிப்பார்த்து மகிழந்தோம். விமானப்பயணம் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள வேண்டும் என்பது பல நாள் ஆசை. விமானத்தில் பயணம் செய்த யாரையும் சந்திக்கிற வாய்ப்பு கிடைக்கவே இல்லை. எங்கள் அக்காள் மகன் சிங்கத்தமிழன் மருத்துவம் படிப்பதற்காக ரசியா சென்று வந்தபோது முதலில் கேட்டது விமானப்பயணம் எப்படி இருந்தது? என்றுதான். அதன்பிறகு சபாநாயகம் சார் சற்று விரிவாக தன் விமானப் பயணம் பற்றி கூறியிருக்கிறார்.
விமானத்தை விளையாட்டாக வேடிக்கைபார்த்த நான் அதே விமானத்தில் சற்று நேரத்தில் பறக்கப் போகிறேன் என நினக்கும் போது கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. அனைத்து சோதனைகளும் முடிந்து பயணிகள் அமருமிடத்தில் உட்கார்ந்துகொண்டு அறிவிப்புகளைக் கேட்டபடி அமர்ந்திருந்தேன் துபாய் செல்லும் விமானத்திறகான அறிவிப்பு வந்தபோது பயணிகள் வரிசையில் நிற்கத் தொடங்கினர். படிப்பறிவில்லாத ஒரு நடுத்தரவயது பெண் வரிசையில் நின்றாள் வீட்டு வேலைக்கு செல்பவளாக இருக்குமோ! சற்று நேரத்தில் நாங்கள் செல்லவேண்டிய விமானத்திற்கான அறிவிப்பு மின்னணுத்திரையில் ஒளிர்ந்தது அறிவிப்பாளரும் அறிவிக்கத்தொடங்கினார். நெஞ்சு படபடக்க வரிசையில் சென்று நிறகத்தொடங்கினேன். எனது கடவுச்சீட்டையும் போடிங் பாசையும் ஒப்பிட்டுப் பார்த்து சீட்டைத் துண்டித்து எனக்கான பகுதியைக் கொடுக்க பெற்றுக்கொண்டு விமானத்தின் வாயிலை நெருங்கினேன் நம் நாட்டு அரசியல் தலைவர்களின் விமானப் பயணத்தை தொலைக்காட்சியில் பார்ப்போமே அது போல் படியேறி செல்லவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன் அந்தசிரமமில்லாமல் நேரடியாக வாயிலுக்கே வந்தாயிற்று. வாயிலின் இருபுறமும் இரண்டு பணிப்பெண்கள் ஒருவர் வரவேற்க மற்றொருவர் நமது சீட்டை வாங்கி நம் இருக்கைக்கு எப்படி செல்வது என வழிகாட்டினார். சன்னலோரத்து இருக்கையாக இருந்தால் நல்லது என நினைத்துக் கொண்டிருந்த எனக்கு அப்படியே அமைந்து. கொஞ்ச நேரத்தில் ஒருவர் வந்து இருக்கையை மாற்றிக் கொள்வோமா என்று கேட்டார் எப்படி விட முடியும் நாசுக்காக மறுத்துவிட்டேன் அவரும் அசடு வழிய சென்றுவிட்டார் அவரிடமிருந்து மெல்லிய மது வாடை வீசியது. குடித்து விட்டு கூடவா விமானத்திற்குள் வருவார்கள். போதை தலைக்கேற எங்கள் ஊர் நகரப்பேருந்தில் ஏறிய ஒருவரை நடத்துனர் கீழே இறக்கிவிட்ட காட்சி அப்போது கண்முன் வந்து போனது. என் இருக்கை விமானச்சிறகின் அருகில் இருந்தது. சிறகின் நீளத்தை பார்த்த போது இவ்வளவு நீளமா என்ற வியப்பு. ஒரு பேருந்தின் நீளத்தைவிட அதிகம். கேப்டன் பெயரைக்கூறி பெயரைக்கூறி அனைவரையும் வரவேற்ற பணிப்பெண் சற்றுநேரத்தில் விமானம் பறக்கவிருப்பதைக் கூறி அனைவரையும் இடுப்புப் பட்டியை அணிந்துகொள்ளும்படி கேட்டுக்கொண்டார் செல்போன்,லேப்டாப்,சி.டி.பிளேயர் வைத்திருப்பவர்கள் அவற்றை அணைத்து வைக்கும்படியும் கேட்டுக் கொண்டார்.உள்ளை ஒளிர்ந்த விளக்குகள் அணைந்தன.விமானம் ஓடுதளத்தில் மெல்ல உருளத் தொடங்கியது. எனக்கு இதயம் திக்..திக்.. என்றது. விமானத்தின் சிறகு மேலும் கீழும் ஆடியது என் இதயம் மேலும் படபடத்தது. மேலே செல்லும்போதே சிறகு உடைந்து விடுவது போல ஆட்டம் காட்டியது. டேக் ஆஃப் என்ற குரல் வந்தவுடன் விர்ரென்று மேல்நோக்கி விளம்பியது அடி வயிற்றில் சிலீரென்றது. காது அடைப்பது போலிருந்தது மேலே செல்லச் செல்ல பயம் அதிகமானது. ஒரு நிலைக்கு வந்தபோது 31000 அடி உயரத்தில் பரந்து கொண்டிருப்பதாக என் இருக்கைக்கு முன்னிருந்த திரையில் தோன்றிய எழுத்துகள் என்னை மேலும் நடுங்கவைத்தது. விளக்குகள் மீண்டும் ஒளிர்ந்தன. பணிப்பெண்கள் சுருசுருப்பாயினர். ஒரு பணிப்பெண் ஒரு பொட்டலத்தைக் கையில் திணித்தார். அதில் என்ன இருக்கிறது என்று அறிந்துகொள்வதற்காக படித்துப்பார்த்தேன் Towlet என்று ஒரு புறமும் விமான நிறுவனத்தின் பெயர் மற்றொரு புறமும் எழுதப்பட்டிருந்தது. அழுத்திப்பார்க்க பஞ்சு போலிருந்து. என்னவாக இருக்கும் சாக்லேட்டாக இருக்குமோ. மெல்ல பக்கத்திலிருப்பவரைத் திரும்பிப்பார்த்தேன் அவரும் என்னைப்பார்த்தார் அவருக்கும் முதல் பயணமாகத் தானிருக்க வேண்டும். அக்கம் பக்கம் திரும்பிப்பார்க்கக் கூச்சமாக இருந்ததனால் பேசாமல் சட்டைப் பைக்குள் வைத்துக்கொண்டேன். அடுத்த நிலையத்தில் இறங்கி மீண்டும் ஏறும்போது அதேபோல் கொடுக்க பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த சீனாக்காரி அதனைப் பிரித்து அதனுள்ளிருந்த மெல்லிய ஈரமான தாளை எடுத்து கைகளைத் துடைத்துக் கொண்டபோது அது கைதுடைப்பதற்கு என்றெண்ணி நானும் கைகளைத் துடைத்துக் கொண்டேன். முகத்தைத் துடைக்கலாம் என்று நினைத்தேன் பக்கத்திலிருப்பவள் துடைத்தால் தானே. நாம் துடைக்க அதைப்பார்த்து அவள் நகைத்துவிட்டால் அய்யய்யோ வேண்டாம் வேண்டாம் என முடிவை மாற்றிக்கொண்டேன். மீண்டும் அந்தத் தாளை மடித்து பைக்குள் வைத்துக் கொண்டேன். சற்று நேரத்தில் ஒரு தட்டில் பிரட், சாக்லேட், கேக் எல்லாம் கொடுத்தனர். சாப்பிட்ட பிறகு டீ கொடுத்தனர் டீ என்றால் நம் கடையில் சாப்பிடுவோமே அதுபோன்ற டீ அல்ல வெறும் டீ சாயம் மட்டும் தான். சர்க்கரை பாக்கெட்டில் இருந்தது. அதைப்பிரித்துக் கொட்டினேன். பால் எங்கே தேடிய போது கண்ணுக்கே தெரியாத ஒரு சின்ன்..ன குப்பியில் ஏதோ இருந்தது பிரித்தால் வெள்ளை நிறத்தில் ஒரு திரவம் இதுதான் பாலோ ஒரு கப் சாயத்திற்கு இந்த ஒருதுளிதான் பாலா சரி என்று ஊற்றிக்குடித்துப் பார்த்தால் தண்ணி டீ குடிப்பது போலிருந்தது. அதனைத்தொடர்ந்து ஜூசும் கொடுத்தார்கள். பிறகு சிறு சிறு டின்களில் டம்ளர்களைக் கவிழ்த்து தேவைப்பட்டவர்களுக்கு கொடுத்துக் கொண்டிருந்தனர். அடுத்த பயணத்தில்தான் தெரிந்தது அது பியர் என்று. அவ்வப்போது நாம் எவ்வளவு உயரத்தில் பறக்கிறோம், எவ்வளவு வேகம், அடையவேண்டிய தொலைவு, சென்றடையும் நேரம் அனைத்தையும் திரை காண்பித்துக் கொண்டிருந்தது. அந்த நள்ளிரவிலும் தூக்கம் மட்டும் வரவே இல்லை. இறங்க வேண்டிய இடம் வந்ததும் மீண்டும் இடுப்புப் பட்டியை அணிந்து கொள்ள அறிவுறுத்தியதோடு அணிந்திருக்கிறோமா என்று பணிப்பெண்கள் அனைவரையும் சோதித்து அணியாதவர்களுக்கு அணிந்துகொள்ள உதவினார்கள். ஏறும்போது ஏற்பட்ட அதே பயம் இறங்கும் போதும். விமானம் தரையைத் தொட்டபிறகு ஓடக்கூடிய ஓட்டம்தான் பயத்திற்குக் காரணம். விமானம் காட்டிய நேரத்தைவிட இரண்டரை மணி பின்தங்கியிருந்த என் கடிகாரத்தைத் திருத்திக்கொண்டு இறங்கத்தொடங்கினேன்.

6 comments:

  1. நல்லா சொல்லி இருக்கிஙக

    ReplyDelete
  2. நல்ல பயணம்தான்......
    அருமையான பயணக்கட்டுரை..
    மிக்க நன்றி!

    ReplyDelete
  3. விமானத்தில் பயணித்தது போல ஒரு பிரமை படித்து முடித்ததும்.

    ReplyDelete
  4. Dear sir,
    Please Visit My Blog www.cuddalore-news.blogspot.com

    - majakarthi-

    ReplyDelete
  5. அருமையாய் கவனித்து எழுதிய பகிர்வுக்குப் பாரட்டுக்கள்.

    ReplyDelete