தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Monday, August 8, 2016

பூகம்பம் கிளப்பும் புதிய கல்விக்கொள்கை






மத்திய அரசு, புதிய கல்விக் கொள்கை மூலம் பள்ளிக்கல்வி மற்றும் உயர் கல்வியில் பல மாற்றங்கள் கொண்டு வருவதற்கான பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. முன்னாள் அமைச்சரவைச் செயலாளர் டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் தலைமை யிலான புதிய கல்விக் கொள்கை வரையறை செய்வதற்கான கமிட்டியின் அறிக்கை மனித
வளத்துறை இணையதளத்தில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. அந்த அறிக்கையில் இதுவரை நடைமுறையில் இருந்த பல திட்டங்களை மாற்றுவது குறித்தும், புதிய திட்டங்களை உருவாக்குவது குறித்தும் பல்வேறு அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இலவசக் கட்டாயக் கல்வி உரிமை சட்டப்படி, 8ம் வகுப்பு வரையிலான, ‘ஆல்பாஸ்’ திட்டம் மாற்றப்பட்டு, 5ம்வகுப்பு வரை மட்டுமே மாணவர்கள் பெயிலாக்கப்படாமல், தேர்ச்சி பெறச் செய்யப்படுவர் என்று புதிய கல்விக் கொள்கை தெரிவிக்கிறது.

5ம் வகுப்பு வரை மாணவர்கள் போதிய திறனின்றி இருந்தால் அவர்களுக்கு மாலை நேரச் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்றும் முழுமையாகத் தகுதிப்படுத்தியே தேர்ச்சி பெறச் செய்ய வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் தேர்ச்சி பெறாவிட்டால் உடனடியாக மறுதேர்வு நடத்தப்பட வேண்டும்.

2 முறை மறுதேர்வு வாய்ப்புகள் வழங்கப்பட்டும் தேர்ச்சி பெறாத மாணவர்கள் மீண்டும் அதே வகுப்பில் படிக்க வேண்டும். அடுத்த ஆண்டும் தேர்ச்சி பெறாவிட்டால், ரெகுலர் வகுப்பில் இருந்து அவர்களை மாற்றி தொழிற்கல்வி வகுப்புகளுக்கு அனுப்ப வேண்டும் என்றும் புதிய கல்விக்கொள்கை வலியுறுத்துகிறது.

இது குறித்து கல்வியாளர்கள் என்ன சொல்கிறார்கள்...!
             இரத்தின புகழேந்திஆசிரியர்/எழுத்தாளர்ஆல்பாஸ் என்பது படிக்காமலே மாணவனைத் தேர்ச்சி பெற வைப்பது கிடையாது. தேர்ச்சி பெறும் அளவுக்கு அவர்களைத் தகுதியுடையவர்களாக மாற்றுவது என்பதுதான் உள்கருத்து. அதாவது, நூறு மாணவர்கள் 
படித்தார்களென்றால் நூறு பேரையும் தகுதியானவர்களாக மாற்ற வேண்டும். 

ஆனால், அதைத் தவறாகப் புரிந்துகொண்டு படித்தாலும் படிக்காவிட்டாலும் ஒன்பதாம் வகுப்பு வரை பாஸ் போட்டு விடுகிறார்கள். இதனால் மாணவர்களின் கல்வித்தரம் குறைந்து விடுகிறது. தவறு ஆசிரியர்கள் பக்கம் இருக்க, மாணவர்களைப் பின்தள்ளுவது சரியல்ல. ஆசிரியர்கள் மாணவர்களின் உளவியல் அறிந்து பாடம் நடத்தும் வகையில் தகுதிப்படுத்தப்பட வேண்டும். 

‘இடைநிற்றல் அதிகமாக உள்ளது’ என்றும் ‘அதை மாற்றவேண்டும்’ என்றும் பேசிக்கொண்டு அதற்கு எதிராக இப்படி ஒரு நடைமுறையைக் கொண்டு வந்தால் நிலை இன்னும் மோசமடையவே செய்யும். இதனால் அடித்தட்டு, ஏழை மக்களுக்குக் கல்வி கிடைக்காமல் போகும். இந்தப் பிரச்னையில் வெறும் மாணவரை மட்டுமோ, ஆசிரியரை மட்டுமோ, அரசை மட்டுமோ குறை சொல்ல முடியாது. 

அனைவரும் ஒன்றுபட்டு குறைகளைக் களைந்தால் மட்டுமே கல்வித்தரத்தை உயர்த்த முடியும். பின்தங்கும் மாணவனுக்குச் சிறப்பு கவனம் செலுத்தி படிக்க வைக்க வேண்டும். அனைத்து மாணவர்களையும் தகுதியானவர்களாக ஆக்க வேண்டும். அதுதான் ஆல்பாஸ் என்பதின் பொருள்.

‘பாடம்’ நாராயணன்சமூக ஆர்வலர்8ம் வகுப்பு வரை ஆல்பாஸ் என்பதின் அர்த்தமே பின்தங்கிய மாணவர்களையும் தகுதியானவர்களாக மாற்ற வேண்டும் என்பதுதான். ஐந்தாம் வகுப்பில் ஒரு மாணவன் நன்றாகப் படிக்கவில்லை என்றாலும் அவனை ஆறாம் வகுப்புக்கு அனுப்புவதோடு அவனுக்கு அடுத்த ஆண்டிலும் ஐந்தாம் வகுப்புப் பாடத்தையும் ஆறாம் வகுப்புப் பாடத்தையும் தெளிவாகச் சொல்லிக் கொடுத்து தகுதி யானவனாக்க வேண்டும்.

ஆனால், நம் ஆசிரியர்கள் மாணவன் படித்தாலும் படிக்காவிட்டாலும் பாஸ் ஆக்கிவிடுகிறார்கள். அவர்கள் சிரமப்படத் தயாராக இல்லை. அதனால்தான் எட்டாம் வகுப்பில் படிக்கும் மாணவனுக்கு மூன்றாம் வகுப்புக்குரிய மாணவனின் தகுதி கூட இல்லை. சின்ன கணக்கு கூட போடத் தெரியாமல் இருக்கிறார்கள். இதில் மாணவர்களைக் குறை சொல்ல முடியாது. ஆசிரியர்கள் அலட்சியமாக இருக்கிறார்கள்.

நாம் மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்கும் முறையையும் தேர்வு முறையையும் மாற்ற வேண்டும். ஒரு வகுப்பில் 20 மாணவர்கள்தான் இருக்க வேண்டும் என்று கல்வி உரிமைச்சட்டம் சொல்கிறது. ஆனால், உண்மையில் பார்த்தால் ஒரு வகுப்பில் 50 மாணவர்கள் இருக்கிறார்கள். ஆசிரியர்களால் கவனம் செலுத்த முடியவில்லை.

ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் இருந்தால் பின்தங்கிய மாணவர்களிடம் ஆசிரியர்கள் சிறப்புக் கவனம் செலுத்த முடியும். மேலும் ஆசிரியருக்குச் சரியான கற்பிக்கும் திறன் இருக்க வேண்டும். தேர்வுமுறையில் மனப்பாடம் செய்யும் முறையை மாற்ற வேண்டும். இந்த மாற்றங்களையெல்லாம் செய்யாமல் 5ம் வகுப்பு வரை ஆல்பாஸ்... 8ம் வகுப்பு வரை ஆல்பாஸ்... என்று பேசுவது சரியாகாது.

எஸ்.எஸ்.ராஜகோபால் மூத்த கல்வியாளர்

ஒரு மாணவன் தோல்வி அடைகிறான் என்றால் அதில் குறை மாணவனிடம் இல்லை. கல்வி அமைப்பிடம்தான் உள்ளது. ஆசிரியர் இல்லாமல் இருப்பது, ஒரே ஆசிரியர் பல வகுப்புகளுக்குப் பாடம் எடுப்பது, பாடத்திட்டம் சுமையானதாக இருப்பது எனப் பல காரணங்கள் இருக்கலாம். நம் நாட்டுப் பாடத்திட்டம் தொடக்கக் கல்வியில் மிகவும் சுமையானது.

படித்த நடுத்தர வர்க்கத்துக்காக உருவாக்கப்பட்ட பாடத்திட்டம் இது.  மாணவன் படிக்கத் தகுதியற்றவன் என்றால் எப்படிப் பத்தாம் வகுப்புத் தேர்வில் நூறு சதவீத தேர்ச்சியெல்லாம் அடைய முடிகிறது. படிக்கத் தகுதியற்றவன் என்றால் எப்போதோ பள்ளியை விட்டு போயிருப்பான். ஆகவே கல்வி அமைப்பில்தான் மாற்றம் கொண்டுவரவேண்டும் என்பது என் கருத்து.

ரத்தின சபாபதிதலைவர்,பொதுப் பள்ளிக்கான மாநில மேடை 8ம் வகுப்பு வரை ஆல்பாஸ் என்ற நடைமுறை இருப்பதில் தவறு இல்லை. எப்படியும் பத்தாம் வகுப்பு வரை படித்துவிடுவார்கள். அடுத்து அவர்களின் சந்ததியைப் படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகும். நாங்கள் படித்த போதெல்லாம் பத்தாம் வகுப்பில் அரையாண்டுத் தேர்வு நடத்தி அதில் பாஸ் ஆனால்தான் முழு ஆண்டுத் தேர்வுக்கு அனுப்புவார்கள்.

இதற்கு செலக்சன் என்று பெயர். இப்படிச் செய்வதால் நிறைய மாணவர்கள் வடிகட்டப்பட்டு படிப்பில் கவனம் இல்லாமல் போகும் என்பதால்தான் காமராஜர் காலத்தில் பத்தாம் வகுப்பு வரை படித்தவர்களுக்குச் சான்றிதழ் கொடுத்துவிட்டால் அவனுக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும்... மேற்கொண்டு படிக்க எண்ணம் வரும் என்ற அடிப்படையில் 9ம் வகுப்பு வரை ஆல்பாஸ் கொண்டுவந்தார்கள்.

ஆனால், நம் ஆசிரியர்கள் 9ம் வகுப்பு வரை பாஸ் மட்டும் பண்ண வைக்கிறார்களே தவிர, கல்வித் தரத்தை உயர்த்துவதில் கவனம் செலுத்துவதில்லை. ஆனால், 8ம் வகுப்பு வரை ஆல்பாஸ் என்ற திட்டத்தில் தேர்ச்சியடையாத மாணவர்களுக்கு உடனடித் தேர்வு வைத்தும் பாஸாகாவிட்டால் தொழிற்கல்விக்கு அனுப்பலாம் என்கிறார்கள். அப்படிச் செய்தால் அது பழைய குலக்கல்வி முறைக்கு வழி வகுத்துவிடும்.

கல்வி தரமாக அமைவதற்கு ஆசிரியர், பெற்றோர், கல்வி நிறுவனங்கள், அவற்றுக்குண்டான சட்டதிட்டங்கள், சமூகம் எனப் பல கட்டமைப்புகள் ஒழுங்காக இணைந்து செயல்பட வேண்டும். ஆசிரியர்களை மட்டுமே குறை சொல்ல முடியாது. அதே சமயம் மாணவர்களைத் தகுதியானவர்களாக ஆக்குவதில் ஆசிரியர்களுக்கு பெரும்பங்கு உள்ளது என்பதையும் மறுக்க முடியாது.

நன்றி -எம்.நாகமணி
http://kungumam.co.in/CArticalinnerdetail.aspx?id=2482&id1=93&issue=20160716

புதிய கல்விக்கொள்கைக்கான பரிந்துரைகளை எப்படி புரிந்துகொள்வது ?




            புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கான பரிந்துரைகள் அளிக்க முன்னாள் கேபினட் செயலாளர் டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் தலைமையிலான குழுவை நடுவணரசு நியமித்தது. இக்குழு தனது அறிக்கையை  அரசிடம் அண்மையில் அளித்தது. இந்நிலையில் இக்குழு அளித்துள்ள பரிந் துரைகள் குறித்து  பல்வேறு கருத்துகள் கல்வியாளர்கள் இடையே விவாதிக்கப்பட்டு வருகிறது. அவற்றை நாம் எப்படி புரிந்துகொள்வது என விவாதிப்பது அவசியமாகும்.
             தொடக்க கல்வி முதல் உயர் கல்வி வரை கல்வித் தரத்தை உயர்த்த பல்வேறு பரிந்துரைகள் கொண்ட 200 பக்க அறிக்கையை இக்குழு சமர்ப்பித்துள்ளதாகத் தெரிகிறது.
            சரியாக படிக்காத மாணவர் களுக்கு சிறப்பு வகுப்பு மற்றும் வழிகாட்டுதல் வழங்க வேண்டும் என்பது இக்குழுவின் முக்கிய பரிந்துரைகளில் ஒன்றாக விளங் குகிறது. இது தற்போது நடைமுறையில் உள்ளதுதான் என்றாலும் அரசுப் பொதுத்தேர்வு எழுதும் 10,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே சிறப்பு வகுப்புகள் நடத்தும் வழக்கம் பின்பற்றப்படுகிறது. இது அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்படவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
            அடுத்து இக்குழு பரிந்துரைத்துள்ள அம்சம் முக்கியமானதும் விவாதத்திற்கு உரியதுமாகும். கட்டாயத் தேர்ச்சி என்பது நான்காம் வகுப்பு வரை மட்டுமே அளிக்கப்படவேண்டும் ஐந்தாம் வகுப்புமுதல் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மேல்வகுப்பிற்கு அனுப்பிடவேண்டும். இல்லையெனில் உடனடித்தேர்வுகள் வைத்து இரு வாய்ப்புகள்  வழங்க வேண்டும் என்பதுதான் அந்த பரிந்துரை. இது கல்வி உரிமைச்சட்டத்திற்கு முரணான ஒரு பரிந்துரை என்றாலும்  அதன் பின்புலத்தை ஆராய்ந்துபார்க்காமல் ஆசிரியர்கள் நிச்சயம் வரவேற்பார்கள் என்பதுதான் யதார்த்தம். ஒன்றும் தெரியாமல் பத்தாம் வகுப்பு வரை வந்துவிடுகின்றனர் என்பதே ஆசிரியர்களின் முக்கிய குற்றச்சாட்டு ஆகும். மாணவர்களுக்கு கட்டாயத் தேர்ச்சி என்பது அவர்கள் படித்தாலும் படிக்காவிட்டாலும் தேர்ச்சி அளிக்கவேண்டும் என்பதல்ல, அவர்களைக் கட்டாயம் தேர்ச்சி பெறுவதற்கு தகுதியானவர்களாக உருவாக்கிடவேண்டும் என்பதே அதன் உட் பொருள். அனைவருக்கும் கல்வி என்று ஒருபுறம் முழக்கமிட்டுக்கொண்டு மறுபுறம் அதற்கு எதிராக செயல்படுகிறது இன்றைய அரசு. இந்தியா போன்ற வளரும் நாட்டில் அனைவருக்கும் கல்வி கொடுப்பது என்பது சவாலாக உள்ள சூழலில் இக்குழுவின் மேற்கண்ட பரிந்துரை இந்த கனவை நிச்சயம் சிதைக்கும். தேர்வில் தோல்வி அடையும் மாணவர்களில் பலர் கல்வியைத்தொடர்வதில்லை என்பதே நடைமுறை உண்மையாக இருக்கும்போது இதுபோன்ற பரிந்துரையால் பள்ளியை விட்டு வெளியேறும் அல்லது இடைநிற்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகி அனைவருக்கும் கல்வி என்பது எட்டாக்கனியாகும். தேர்வுதான் மாணவர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. எனவே தேர்வு முறையை நீக்கவேண்டும் என்பது பல கல்வியாளர்களின் கோரிக்கையாக இருக்கும்போது இப்படி ஐந்தாம் வகுப்பிலேயே தேர்வைக்காரணம் காட்டி ஒரு மாணவனை மேல்வகுப்புக்குச் செல்லவிடாமல் நிறுத்தி வைப்பது என்பது அவன் கல்வியை மறுப்பதற்கு சமமாகும். கல்வியின் தரம் குறைந்து வருகிறது,  போட்டித்தேர்வுகளிலும், குடிமைப் பணித் தேர்வுகளிலும்,  இந்திய தொழில்நுட்ப நிறுவனம் போன்ற உயர்கல்வி நிறுவன்ங்களிலும்  நம் தமிழக மாணவர்களின் பங்களிப்பு குறைவாகவே உள்ளது என்று கூறி இதனை நியாயப்படுத்துவோரும் உண்டு. போட்டித்தேர்வு என்பதே குவிசிந்தனையாளர்களின் ஊக்கப்படுத்தும் செயல். இதனால் விரிசிந்தனையாளர்கள் தகுதியற்றவர்கள் என்பது போன்றதொரு கருத்து உருவக்கப்பட்டுள்ளது. நம் நாட்டிற்கு தேவை குவி சிந்தனையாளர்கள் அல்ல விரி சிந்தனையாளர்களே. போட்டியின் மூலம் தேர்ந்தெடுக்க கல்வியும் வேலைவாய்ப்பும் விளையாட்டு அல்ல.
            அடுத்ததாகக் கல்விக்கு உரிய கட்ட மைப்பு வசதிகளை ஏற்படுத்தவும் கல்வி நிர்வாகத் தரத்தை உயர்த்திட  தனி நிர்வாக அமைப்பை உரு வாக்கவும் இக்குழு திட்டவட்ட பரிந்துரைகளை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கதும் வரவேற்புக்குரியதுமாகும். அரசு பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளைப் போதிய அளவு ஏற்படுத்த இயலாமல்தான் அரசே கல்வித்துறையில் தனியாரை ஈடுபடுத்தியது. தனியார் கல்வி நிறுவன்ங்களே இன்று அரசுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளன. இந்த நிலை மாறவேண்டுமெனில் அரசு கல்வி நிறுவனங்களின் உள் கட்டமைப்பு பலப்படுத்தப்படவேண்டும்.           
            உயர்கல்வி நிறுவனங்களுக் கான சர்வதேச தரவரிசைப் பட்டியலில் இந்திய கல்வி நிறுவனங்கள் முன்னிலை பெறு வதில்லை. எனவே நம் நாட்டில் உயர்கல்வியின் தரத்தை உயர்த்த, தலைசிறந்த வெளிநாட்டு கல்வி நிறுவனங்களை அனுமதிக்க வேண்டும். உரிய கட்டுப்பா டுகளுடன் இவற்றுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று இக்குழு பரிந்துரை செய்துள்ளது.
            இது மிகவும் மோசமான பரிந்துரையாகும். தரம் என்ற பெயரில் அயல் நாட்டுக் கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி கொடுப்பது என்பது நம் தலையில் நாமே மண்ணை அள்ளிக் கொட்டிக் கொள்வதைப் போன்றதாகும். அயல்நாடுகளில் தரமான கல்வி வழங்கப்படுகிறது எனக்கருதினால் அதுபோன்ற தரமான கல்வி நிறுவனங்களை நம் நாட்டில் நம்முடைய அரசுதான் உருவக்கவேண்டுமே தவிர அயல்நாட்டவரை கல்வி நிறுவனங்களை நடத்த அனுமதிக்கக் கூடாது. அப்படி அனுமதிப்பது  நம் அரசின் கையாலாகாத தனத்தை உலகுக்கு வெளிச்சம்போட்டுக்காட்டும் செயல். இது கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும்.
            மேலும் திறன் மேம்பாடு, தொழிற்பயிற்சி தொடர்பாகவும் மாணவர்களி டையே நன்னெறிகளை போதிப்பது, நம்பிக்கையை ஏற்படுத்துவது குறித்தும் சுப்பிரமணியன் குழு பரிந்துரைகளை அளித்துள்ளது. இந்த பரிந்துரைக்கு முக்கியத்துவம் அளித்து செயல்வடிவம் கொடுப்பது அரசின் கடமை.

            இக்குழுவின் பரிந்துரைகள் குறித்தும் குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்கள் குறித்தும் பல்வேறு விமர்சன்ங்கள் எழுந்துள்ளன. இக்குழுவில் கல்வியாளர்கள் அதிகம் இடம்பெறாமல் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் இடம்பெற்றிருப்பதும் நம் சந்தேகங்களை உறுதிப்படுத்துவதாக உள்ளன. எனவே இக்குழுவின் பரிந்துரையை அப்படியே ஏற்காமல் சிறந்த கல்வியாளர்களின் மேலாய்வுக்கு அனுப்பி அவர்களின் இறுதி அறிக்கையை நடைமுறைப்படுத்தினால் புதியக் கல்விக்கொளகை சிறப்பாக அமையும்.

Friday, June 3, 2016

அன்பாசிரியர் 19: புகழேந்தி - கிராமப்புற மாணவர்கள் கொண்டாடும் ஆசான்! க.சே. ரமணி பிரபா தேவி



பொறியாளராக ஆசைப்பட்டு சந்தர்ப்ப வசத்தால் ஆசிரியர் ஆனேன்; பின்னர் செய்யும் வேலையில் முழு ஈடுபாடு வேண்டும் என்ற எண்ணத்தில் சிறப்பாக செயல்பட ஆரம்பித்தேன்' என்கிறார் ஆசிரியர் புகழேந்தி. ஆசிரியர், எழுத்தாளர், நாட்டுப்புறவியலாளர், இயற்கை ஆர்வலர் என பன்முக பரிமாணங்கள் கொண்டவர். அவரின் ஆசிரியப் பயணம் இந்த அத்தியாய அன்பாசிரியரில்...

''அப்போது கடலூர் மாவட்டத்தின் கார்கூடல் பள்ளியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். அங்கே வசித்த குறிப்பிட்ட சமூகத்தினர், நாடோடிகளாக இருந்தனர். பாத்திரத்துக்கு ஈயம் பூசும் தொழிலை மேற்கொண்ட அவர்கள், ஆறு மாதங்கள் கார்கூடலிலும், அடுத்த ஆறு மாதங்கள் வேறு ஊர்களிலும் வசித்தனர். இதனால் அந்த சமூகத்தினர் யாரும் கல்வி கற்க முடியாமல் இருந்தது.

அறிவழகன் என்ற சிறுவன், கற்கும் வயதில் இருந்தாலும் பள்ளிக்கு வர முடியாமல் இருந்ததைப் பார்த்தேன். அவர்களிடம் சென்று கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறினோம். 'பெற்றவர்கள் ஊரை விட்டுச் சென்றால் நாங்கள் அந்த சிறுவனை பார்த்துக் கொள்கிறோம்' என்று ஊர்க்காரர்கள் உறுதியளித்தனர். மிகுந்த யோசனைக்குப் பின் அவர்கள் சம்மதித்தனர். அவன் சாதிப்பிள்ளை சமூகத்தின் முதல் தலைமுறை மாணவன் ஆனான். எட்டாவது வரை அதே பள்ளியில் படித்தான். இதனால் அந்த சமூகத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டது. முதல்முறையாக சாதிப்பிள்ளை சமூக மக்களின் வரலாற்றை ஆய்வு செய்து புத்தகம் எழுதினேன்.

குழந்தை விஞ்ஞானிகள்

ஒருமுறை தமிழ்நாடு அறிவியல் இயக்ககம் சார்பில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடைபெற்றது. அந்த வருட போட்டிக்கு, 'அனைவருக்கும் சத்தான உணவு' என்ற தலைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. அப்போது நாங்கள் 'நெல் வயலில் மீன் வளர்க்க முடியுமா?' என்ற திட்டத்தை கையில் எடுத்தோம். நம்புங்கள், பழங்காலத்தில் மீன்கள் வயலில் இருந்தன. யூரியாக்கள், உரங்களைப் போட்டுப் போட்டு நாம்தான் மீன்களை அழித்துவிட்டோம்.

இந்த செயல்திட்டத்துக்காக சுமார் மூன்று மாதங்கள் வேலை பார்த்தோம். வட்ட, மாவட்ட, மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டு இறுதியாக தேசிய அளவில் எங்கள் செயல்த்ட்டம் தேர்வானது. ஐந்து மாணவர் கொண்ட குழுவில், குழுத்தலைவி எட்டாம் வகுப்பு மாணவி. இதுவரைக்கும் விருத்தாச்சலத்தை தாண்டி வெளியே சென்றதில்லை. மாநாடு லக்னோவில் நடக்க இருந்தது. ஆசிரியர்களோ, பெற்றோர்களோ செல்ல முடியாத சூழலில், அறிவியல் இயக்க உறுப்பினர்களோடு மாணவி லக்னோ சென்றார். அப்துல் கலாமின் தலைமையில் அவர்கள் அனைவரும் 'குழந்தை விஞ்ஞானி' பட்டத்தை வென்று திரும்பினர்.

அந்த சிறுவர்களில் ஒருவரான குணசீலன் இன்று சென்னைப் பல்கலைக்கழகத்தில் பிஹெச்.டி. படிக்கிறார். விவசாயக் குடும்பத்தை சேர்ந்தவரான அவருக்கு பெரிய பின்புலமில்லை. வேலைக்குப் போகவில்லையா என்று கேட்டதற்கு, 'கார்கூடல் செயல்திட்டம்தான் என்னை ஆராய்ச்சிக்கு வித்திட்டது' என்கிறார். இந்த மனப்பான்மையைத்தான் மாணவர்களிடம் வளர்க்க வேண்டும் என்று நினைக்கிறேன். இவர்கள்தான் நம் நாட்டுக்கு முக்கியத்தேவை.

கார்கூடல் நடுநிலைப்பள்ளியில் வேலை பார்த்தபோது குழந்தைகளுக்கு பொம்மலாட்டம் மூலம் கற்பிப்பது வழக்கம். பொம்மைகளை வைத்து பாடம் படிப்பது, பொம்மைகள் செய்ய கற்றுக்கொள்வது ஆகிய செயல்பாடுகளில் குழந்தைகள் அதிக ஆர்வம் காட்டினர். மாணவர்கள் விரும்பும் ஆசிரியராக இருப்பதைத்தான் என்னுடைய பலமாக நினைக்கிறேன்.



ராஜ்ய புரஸ்கார் விருது

சமூக சேவைகளில் ஈடுபாடு, விளையாட்டில் ஆர்வம், மின்சாரம் தொடர்பான அடிப்படை அறிவு, படிக்கத் தெரியாதவர்கள், முதியோர்களுக்கு கற்றுக்கொடுப்பது, சேமிக்கும் பழக்கம், அடிப்படை சமையல்களை கற்றுக் கொள்வது, சுற்றுச்சூழல் சார்ந்து இயங்குவது, அடிப்படை சுகாதாரம் உள்ளிட்ட விஷயங்களில் சிறந்து விளங்கும் சாரணர் இயக்க மாணவர்களுக்கு ராஜ்ய புரஸ்கார் என்னும் அரசு விருது, ஆளுநரின் கையால் வழங்கப்படும். 2001-ல் நடுநிலைப் பள்ளிகளிலேயே முதல்முறையாக எங்கள் பள்ளி மாணவர் வாங்கினார். ஊரே மகிழ்ந்து வியந்த தருணம் அது.

கணக்கும் இனிக்கும்

இப்போது கடலூர், மன்னம்பாடி அரசுப்பள்ளியில் கணக்கு ஆசிரியராக பணிபுரிகிறேன். பொதுவாக பாடங்கள் எளிமையாக கற்பிக்கப்பட வேண்டும். ஆனால் இப்போது அரசுப் பள்ளிகளிலும், டீச்சிங்கை விட கோச்சிங்தான் முக்கியமாக மாறியிருக்கிறது. மதிப்பெண்ணை மட்டுமே இலக்காகப் பார்க்காமல், அரசு ஆசிரியர்களை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும்'' என்றார்.

அன்பாசிரியர் புகழேந்தி, 'கணக்கும் இனிக்கும்' என்ற பெயரில், 6 முதல் 10-ம் வகுப்புகள் வரையான வகுப்புகளின் மாதிரி வினாத்தாள், கணக்குப் புதிர்கள், கணிதவியல் மேதைகளின் சுருக்க வரலாறு ஆகியவற்றைப் பதிவிடுகிறார். அத்தோடு மன்னம்பாடி பள்ளியின் பெயரில், வலைப்பக்கத்தை நிர்வகிக்கிறார். அதில் பள்ளி மாணவர்களை விவாதங்களில் பங்கெடுக்க வைத்து அவற்றை பதிவு செய்கிறார். மாணவர்களின் செயல்திட்டங்கள், கல்வி இணை செயல்பாடுகள் ஆகியவற்றையும் புகைப்படங்களோடு பதிவு செய்துவருகிறார். காண: மன்னம்பாடி அரசுப்பள்ளி

இலக்கிய முகம்

இதுவரை இவர் எழுதி 8 நூல்கள் வெளி வந்துள்ளன. அன்பாசிரியர் புகழேந்திக்கு இயல்பாகவே இலக்கியத்தில் ஆர்வம் என்பதால், மாணவர்களின் படைப்பாற்றலை ஊக்குவிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

மாணவர்களை கட்டுரை எழுதச் சொல்லியும், கவிதை படிக்கச் சொல்லியும் ஆர்வத்தை ஏற்படுத்துகிறார். இதன் தொடர்ச்சியாக பள்ளி மாணவர்களே மாணவர் மலரைத் தயாரிக்கின்றனர். கார்கூடல் பள்ளியில் தளிர் என்ற பெயரில் மாணவர் மலர் வெளியிடப்பட்டுள்ளது. இப்போது மன்னம்பாடி உயர்நிலைப் பள்ளியில், ஆண்டுதோறும் மாவட்ட கல்வி அலுவலரின் உரையோடு மாணவர் மலர் வெளியிடப்படுகிறது.

மாறி வரும் கல்விச் சூழலுக்கு ஏற்ப, இணையம் மூலம் கற்பிப்பதன் அவசியத்தை வலியுறுத்துகிறார் அன்பாசிரியர் புகழேந்தி. தனியார் அறக்கட்டளை ஒன்றின் மூலம் கணினியைப் பெற்றவர், இப்போது பள்ளியை ஸ்மார்ட் வகுப்பறை ஆக்கும் முயற்சியில் இருக்கிறார்.

ஆசிரியர் புகழேந்தியின் தொடர்பு எண்: 9488848519

*

'அன்பாசிரியர்' தொடரைப் பாராட்டி, சட்டீஸ்கரில் திட்ட இயக்குநராகப் பணிபுரியும் டாக்டர். சி.ஆர். பிரசன்னா ஐ.ஏ.எஸ். அனுப்பியுள்ள வாழ்த்து
வாழ்த்துகள், உங்களின் அன்பாசிரியர் கட்டுரைத் தொடரை நான் தொடர்ந்து படித்து வருகிறேன். அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் சேவைகளை, எழுத்து ஊடகத்தின் வழியாக நீங்கள் வெளிக்கொணரும் விதத்துக்கு எனது பாராட்டுகள். இது ஆசிரியர்களை இன்னும் உற்சாகப்படுத்தி படித்த, ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கும். இந்த தொடர், வெளியில் அதிகமாக அறியப்படாத நம் நாட்டின் உண்மையான நாயகர்களை உலகத்துக்கு அறிமுகப்படுத்துகிறது. அவர்களை எங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறீர்கள். வாழ்த்துக்கள்!
நான் இந்த பெருமைக்குரிய சேவையில் இருப்பதற்கு எனது ஆசிரியர்கள் மட்டுமே காரணம்.

S.Madasamy
ஆசிரியர்புகழேந்தியின்பணிகளையும்
அவரைச்சுற்றிநிற்கும்குழந்தைகளின்
சிரித்தமுகங்களையும்காண்கையில்
நெஞ்சம்நிறைகிறது.

SSiva
எங்க ஊரு பக்கத்திலையும் ஒரு தலைமை ஆசிரியை 6 மாதம் லீவ் போட்டு விட்டு (உடம்பு சரி இல்லை என்று )அமெரிக்க சென்று தன் மகளுடன் இருந்து விட்டு இபோதுதான் வந்தார் .இது 3 வது தடவை


Yuki Selvan
மாற்றம் உங்களல் வந்துள்ளது.கல்விக்கண் திறந்து வெளிச்சப்பாதை காட்டும் நல்லாசிரியர்களுக்கு வாழ்த்துக்கள்

 Ramadoss
சம்பளத்திற்காக வேலை பார்ப்பவர் மத்தியில் அர்ப்பணிப்பு மனப்பான்மை உள்ள ஆசான்களும் உள்ளது பெருமையாக உள்ளது .

CCSRAVINDRAN
அன்பாசிரியர் தொடர் கட்டுரைகள் மனதை நெகிழவைக்கிறது .
புகழை ஏந்தி வலம் வருகிறார் கார்கூடலார்


MMuralidharan.A
கல்வி ஒன்றே கவலைகளை களைந்து கவி மிகு வாழ்கையை தரவல்லது.இந்த புனிதமிக்க கல்விபணியை போதிக்கும் சிறந்த ஆசானான திரு.புகழேந்தி அவர்களை வாழ்த்துவதில் பெருமைபடுகிறேன். ஏனெனில், நானும் இவர் போன்ற சிறந்த ஆசிரியரால் உருவானேன். இவரின் இந்த சேவை தொடரவும் மற்றவர்களும் இந்த அறபணியை செய்து தமிழக இளைஞர்களின் மற்றும் தாய்நாட்டின் எதிர்காலத்தை வளமாகவும் , கல்வி என்ற சோலை மூலம் வசந்தம் வீசவும் உறுதி ஏற்க வேண்டும்.


SSelva
ஆண்கள் டாஸ்மாக்கிற்கு அடிமையாகி, பெண்கள் "100 நாள்" வேலைத் திட்டத்தினால் சோம்பேறிகளாகி, மாணவர்கள் மார்க் ஒன்றே குறியாய் தகவல்களைச் சேகரிக்கும் Hard Disk-களாகப் போய்விட்ட இந்தச் சீரழியும் தமிழகத்திற்கு புகழேந்தி மாதிரி ஆசிரியர்கள் தான் புத்துயிர் தருகிறார்கள். ரொம்ப நன்றி சார்.
நன்றி : தி இந்து தமிழ்


Tuesday, May 24, 2016

கானல்வரி கலை இலக்கிய விழா 2016


 மகரந்தச்சேர்க்கை கவிதை நூலை சிங்கப்பூர் இதழாளர் ஏ.பி.ராமன் வெளியிட தொழிலதிபர் ரமேஷ் சந்த் பெற்றுக்கொள்கிறர். உடன் நூலாசிரியர் கவிஞர் தியாக ரமேஷ்,கவிஞர் கரிகாலன்,கவிஞர் மு.முருகேஷ்,எழுத்தாளர் இமயம்.
 மகரந்தச்சேர்க்கை நூலுடன் இடமிருந்து மு.முருகேஷ்,கரிகாலன்,ஏ.பி.ராமன்,தியாக ரமேஷ்,ரமேஷ் சந்த்,விருத்தகிரி,ரமேஷ்பாபு,புகழேந்தி.
            விழாவில் அம்ரந்திருக்கும் படைப்பாளிகள்
 தெருக்கூத்துக்கலை கருத்தரங்கில் தலைமை உரையாற்றும் முனைவர் ஆறு.இராமநாதன், கட்டுரையாளர்கள் இடமிருந்து தியாக ரமேஷ்,பல்லவிகுமார்,புகழேந்தி,வெற்றிசெல்வி சண்முகம்,எழிலவன்,நவஜோதி,செந்தில்குமார்,இளங்கோவன்
           சிறந்த கூத்துக்கலைஞர் விருது பெறும் கோவி.சடகோபன்
 விருதுபெற்ற கலைஞர்களுடன் கற்க அறக்கட்டளை நிறுவனர் தியாக ரமேஷ்

       விருது பெற்ற கலைஞர்களுடன் கானல்வரி குழுவினர்

      கற்க அறக்கட்டளையுடன் கானல்வரி கலை இலக்கிய இயக்கம் இணைந்து கானல்வரி கலை இலக்கிய விழா விருத்தாசலத்தில் நடைபெற்றது. கவிஞர் தியாக ரமேஷ் எழுதிய மகரந்தச்சேர்க்கை கவிதை நூல் வெளியீட்டு விழா முனைவர் ஜெ.விருத்தகிரி தலைமையில் நடைபெற்றது. கவிஞர் பல்லவி குமார் அனைவரையும் வரவேற்றார். தங்கபாண்டியன்,ரமேஷ்பாபு,ரொசாரியோ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிங்கப்பூர் பத்திரிகையாளர் ஏ.பி.ராமன் நூலை வெளியிட ஜெயின் ஜூவல்லரி உரிமையாளர் ரமேஷ்சந்த் பெற்றுக்கொண்டார். கவிஞர் மு.முருகேஷ் நூலைத் திறனாய்வு செய்தார். எழுத்தாளர் இமயம்,கவிஞர் கரிகாலன்,கவிஞர் கண்மணி குணசேகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
     அதனைத்தொடர்ந்து தெருக்கூத்துக்கலை என்ற தலைப்பில் கருத்தரங்கம் தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழக மொழிப்புலதின் முன்னாள் முதன்மையர் பேராசிரியர் முனைவர் ஆறு.இராமநாதன் தலைமையில் நடைபெற்றது. முனைவர் எழிலவன்,முனைவர் பல்லவிகுமார்,முனைவர் நவஜோதி,முனைவர் மு.இளங்கோவன், முனைவர் செந்தில்குமார், கவி.வெற்றிச்செல்வி,முனைவர் ரத்தின.புகழெந்தி ஆகியோர் வெவேறு தலைப்புகளில் ஆய்வுக்கட்டுரை வழங்கினர்.
     பிற்பகல் கற்க அறக்கட்டளை நிறுவனர் கவிஞர் தியாக ரமேஷ் அவர்களால் நிறுவப்பட்ட கானல்வரி கலை விருது வழங்கும் விழா நடைபெற்றது. அதில் சிறந்த தெருகூத்துக்கலைஞர்களுக்கு விருது வழங்கப்பட்டது. குறவன்குப்பம் கோவி.சடகோபன் அவர்களுக்கு சிறந்த தெருக்கூத்துக்கலைஞர் விருதினையும் பத்தாயிரம் ரூபாய் பொற்கிழியையும் வாழப்பாடி பேரூராட்சி முன்னாள் தலைவர் ப.சி.செல்வம் வழங்கினார். சிறந்த தெருக்கூத்து இளம் கலைஞர் விருதும் ஐயாயிரம் ரூபாய் பொற்கிழியும் களர்குப்பம் சங்கருக்கு தொழிலதிபர் தியாக பாபு வழங்கினார்.

ரத்தின புகழேந்தி அனைவருக்கும் நன்றி கூறினார்.

Thursday, March 17, 2016

பத்தாம் வகுப்பு கணக்கு தேர்வு சில ரகசியங்கள்



   
  கணக்கு என்றாலே கடினமான பாடம் அதில் மதிப்பெண் பெறுவது அதை விட கடினம் என்ற எண்ணம் மாணவர்களிடம் மட்டுமல்ல ஆசிரியர்களிடமும் உள்ளது. ஆனால் உண்மை நிலை அப்படி யில்லை. கணக்கு பாடத்தில் எளிதாக தேர்ச்சி பெறுவது மட்டுமின்றி அதிக மதிப்பெண்ணும் பெறலாம். அதெற்கென சில ரகசியங்கள் உள்ளன. அந்த ரகசியங்களை நீங்களும் தெரிந்து கொண்டால் உங்களுக்கும் கணக்கும் இனிக்கும்.
     மாணவர்கள் பதற்றமில்லாமல் தேர்வு எழுத வேண்டும் என்பதற்காக வினாத்தாள் படிப்பதற்கு என கூடுதலாக 15 நிமிடங்கள் வழங்கப் பட்டுள்ளது. ஆனால் பல மாணவர்கள் அந்த நேரத்தையும் தேர்வு எழுதுவதற்கே பயன்படுத்திக்கொண்டால் கூடுதல் மதிப்பெண் பெறலாம் என நினைக்கின்றனர். அது தவறான நினைப்பு. அப்படி செய்தால் மதிப்பெண்கள் கூடுவதற்கு அல்ல குறைவதற்குத்தான் வாய்ப்பு உள்ளது. வினாக்களில் உள்ள லாஜிக்கை புரிந்து கொள்ள நிதானமாக வினாக்களை ஒரு முறை படிப்பது அவசியம். எனவே அந்த நேரத்தை சரியாக பயன்படுத்தி நிதானமாக வினாத்தாளைப் படித்து கேட்கப்பட்டுள்ள வினாக்களை முதலில் புரிந்துகொள்ளுங்கள்.
கணக்கு வினத்தாள் அ,ஆ,இ,ஈ என நான்கு பகுதிகளைக் கொண்டது.முதலில் ஒரு மதிப்பெண் வினாக்கள் அடுத்து இரு மதிப்பெண் அதற்கடுத்து ஐந்து மதிப்பெண் இறுதியாக பத்து மதிப்பெண் வினாக்கள் என வரிசைப்படுத்தப்பட்டு  அமைக்கப்பட்டுள்ளது.  முதலில் ’அ’ பகுதிக்குதான் விடையளிக்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. ஆனால் பல மாணவர்கள் முதலில் ஒரு மதிப்பெண் வினாக்களுக்கே விடையளிக்கின்றனர். நீங்கள் பத்து மதிப்பெண் வினாக்கள் இடம்பெற்றுள்ள கடைசி பகுதியான ’ஈ’ பகுதியிலிருந்து விடையளிக்கத் தொடங்குவதே அறிவார்ந்த செயல். அதனைத்தொடர்ந்து ஐந்து மதிப்பெண்,அடுத்து இரு மதிப்பெண் கடைசியாகத்தான் ஒரு மதிப்பெண் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதிக மதிப்பெண்களைப் பெறுவதற்கு அதிக உழைப்பும், நேரமும் தேவை உடலும் மனுமும் ஆற்றலுடன் இருக்கும் காலை நேரத்தில் அது எளிது. குறைந்த மதிப்பெண்ணுக்கு குறந்த அளவு உழைப்பும் நேரமும் போதுமானது. உடல் களைத்திருக்கும் நண்பகல் வேளையில் ஒரு மதிப்பெண் வினாக்களை எழுதுவது எளிது.
 கணக்கு என்பது எண்களை அடிப்படையாகக் கொண்ட பாடம் என்பதால் ஒவோரு எண்ணையும் தெளிவாக எழுதுவது அவசியம். பல மாணவர்கள் எண்களைப் பலமாதிரி வடிவங்களில் எழுதுகின்றனர். குறிப்பாக 2, 3, 4, 5, 7 ஆகிய எண்களை ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி எழுதுகின்றனர். (எண் இரண்டினை இடையில் சுழித்து எழுதுவது, மூன்றிலும் ஐந்திலும் அடிப்பகுதியில் சுழித்து  எழுதுவது ஏழின் குறுக்கே சிறு கோடு கிழிப்பது) அப்படி எழுதாமல் அச்சில் உள்ளது போல் பொது வடிவத்தைப் பின்பற்றவேண்டும். இத்தனை ஆண்டுகள் அப்படியே எழுதிப் பழகியிருந்தாலும் அப்பழக்கத்தை மாற்றிவிட முடியும். தேர்வுக்கு இரண்டு நாட்கள் முன்பாக முனைந்து சரியான முறையில் மேற்சொன்ன  எண்களை மட்டுமாவது  எழுதிப்பழகினால் சரியாகிவிடும். ஆசிரியர்களில் பலருக்கு இப்படி எழுதுகிற பழக்கம் இருப்பதால் இது மாணவர்களுக்கும் தொற்றிக்கொள்கிறது. மக்கள் தொகை கணக்கு எடுக்கும்போது ஆசிரியர்களுக்கு இது போன்ற பயிற்சி கொடுத்து மக்கள் தொகைப்பதிவேட்டில் அனைத்து எண்களையும் சரியான வடிவத்தில் எழுதவைத்தனர்.
சரியான வடிவத்தில் எண்களை எழுதாவிடில் விடைத்தாள் திருத்துபவர்களுக்கு விடைகளைக் கண்டறிவதில் குழப்பம் ஏற்படும் அதனால் மதிப்பெண்கள் குறைவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே எண்களை தெளிவாக எழுதுவது அவசியம்.
பிரிவு – ஈ பத்து மதிப்பெண் வினாக்கள்
பத்து மதிப்பெண் வினாக்களான செய்முறை வடிவியல், வரை படம் ஆகியவற்றை முதலில் எழுதவேண்டும். கடைசி நேரத்தில் எழுதுவதால் தேவையற்ற தவறுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே முதலில் 10 மதிப்பெண் வினாக்கள் இரண்டையும் சரியாக எழுதி 20 மதிப்பெண்களை கைகளில் வைத்துக்கொண்டால் மனம் உற்சாகமாகும்.
செய்முறை வடிவியலில் உதவிப்படத்திற்கு மதிப்பெண்கள் உண்டு என்பதால் தேவைப்படும் கருவிகளைப் பயன்படுத்தி அளவுகளின்றி தெளிவாக வரைந்து உதவிப்படம் என்று அவசியம் எழுதவேண்டும். படம் வரையும்போது ஒவ்வொரு புள்ளிக்கும் ஒரு எழுத்தால் பெயரிடுவது அவசியம். அதன்பிறகு மறக்காமல் அளவுகளை உரிய இடங்களில் குறிப்பிடவேண்டும். இவை ஒவ்வொன்றையும் கருத்தில் கொண்டே முழு மதிப்பெண் வழங்கப்படும்.
அதுபோல் வரை படம் வரைவதற்கு முன் பொருத்தமான அளவுத்திட்டத்தினை  எக்ஸ் அச்சுக்கும் ஒய் அச்சுக்கும் தனித்தனியாக வரைபடத்தாளின் மேல் பகுதியின் வலப்புறம் எழுதவேண்டும். புள்ளிகளை தெளிவாகக் குறித்து தேவையான கோட்டினை வரைவதோடு கேட்கப்படும் தீர்வினை வரைந்தும் எழுதியும் காட்டவேண்டும்.
பிரிவு – இ ஐந்து மதிப்பெண்
ஐந்து மதிப்பெண் வினாக்களில் 9 வினாக்கள் எழுதவேண்டும் இதில் ஒன்று கட்டாய வினா. மொத்தமுள்ள 12 பாடங்களில் 1, 2, 5, 8, ஆகிய நான்கு  பாடங்களைப் படித்திருந்தாலே 8 வினாக்களுக்கு விடை அளித்து 40 மதிப்பெண்கள் பெறலாம். அல்லது பாட நூலிலுள்ள எடுத்துக்காட்டு கணக்குகளை செய்து பார்த்தால் 6 வினாக்களுக்கு விடையளித்து 30 மதிப்பெண்கள் எளிதாகப் பெறலாம்.
பிரிவு – ஆ இரு மதிப்பெண்
இப்பிரிவில் 10 வினாக்களுக்கு விடையளித்து 20 மதிப்பெண்கள் பெறவேண்டும். 1, 3, 4, 5, 7, 8 ஆகிய ஆறு பாடங்களை மட்டும் படித்தால் 12 மதிபெண்கள் எளிதாகப் பெற்றுவிடலாம்.
பிரிவு –அ ஒரு மதிப்பெண்.
ஒரு மதிப்பெண் வினாக்களை கடைசியாக எழுதுவதே நல்லது.  ஒரு மதிப்பெண் வினாக்கள் மொத்தம் 15. ஆனால் அதற்காக பத்து அத்தியாங்களிலிருந்து பாடங்களின் பிற்பகுதியிலுள்ள 205 வினாக்களை கட்டாயம் படித்திருக்க வேண்டும். பல மாணவர்களுக்கு இது கடினாமாக உள்ளது. அப்படி உணர்பவர்கள்: 2, 3, 5, 6, 7 ஆகிய ஐந்து பாடங்களின் பிற்பகுதியில் உள்ள 108 வினாக்களை மட்டும் நன்கு படித்துக்கொண்டால் பதினைந்துக்கு பத்து மதிப்பெண்கள் உறுதியாக பெறலாம். மேற்சொன்ன அத்தியாயங்கள் ஒவ்வொன்றிலும் தலா இரு வினாக்கள் கேட்கப்படும் மற்ற அத்தியாயங்களில் தலா ஒரு வினா மட்டுமே கேட்கப்படும்.
இவை அனைத்தும் மதிப்பெண்களைப் பெறுவதற்கான ரகசியம் மட்டுமே. கணக்கியலில் மதிப்பெண் மட்டும் போதாது. கணக்கை வாழ்க்கையில் பயன்படுத்தவேண்டும். அதற்கு ஒவ்வொரு பாடத்தின் தொடக்கத்திலும் உள்ள கணித அடிப்படைக் கருத்துகளை நன்கு படித்து புரிந்து கொள்ளவேண்டும். இதுவரை படிக்காதவர்கள் இப்போதாவது படியுங்கள். தேர்விலும் வாழ்விலும் வெற்றி நிச்சயம். வாழ்த்துகள்.