தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Friday, September 16, 2016

கல்வித்துறையில் ஒரு புரட்சிகரத்திட்டம்!



    

     பள்ளிக்கல்வி வாழ்க்கைக்கு சிறிதும் பயன்படுவதில்லை என்கிற குறைபாடு நம்மிடம் நீண்ட நாட்களாக உள்ளது. அதன் விளைவாகத்தோன்றியதுதான் ஏட்டுச்சுரைக்காய் கூட்டுக்கு உதவாது என்ற பழமொழி. பாட நூலில் உள்ள கருத்துகளை குருட்டு மனப்பாடம் செய்து தேர்வில் வாந்தி எடுப்பது என்ற மரபான முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கவே அனைவரும் நினைக்கிறோம். ஆனால் அது நடைமுறையில் சாத்தியப்படாத ஒன்றாகவே உள்ளது.
படிக்கின்ற பாடத்தை நடைமுறை வாழ்வில் பயன்படுத்தினால் , கல்வி என்பது அர்த்தமுள்ளதாகும். அதற்காக பல தன்னார்வக்குழுக்கள் நீண்ட நாட்களாகச் செயல்பட்டு வருகின்றன. தேசிய அறிவியல் இயக்கம் மாணவர்களிடையே புதைந்து கிடக்கும் ஆற்றல்களை வெளிப்படுத்திட வாய்ப்பளிக்கும் வகையில் ஆண்டுதோறும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நட்த்தி மாணவர்களிடையே புதியனவற்றைக் கண்டுபிடிக்கும் ஆர்வத்தைத் தூண்டி வருகிறது. அப்படி புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்த்தியவர்களுக்கு குழந்தை விஞ்ஞானி என்று விருது வழங்கி அவர்களைச் சிறப்பிக்கிறது.
இது அரசு செய்யவேண்டிய பணி என்பதை இப்போதுதான் உணர்ந்திருக்கிறார்கள் நம் ஆட்சியாளர்கள். குழந்தைகளுக்கு அறிவியல், கணக்கு, ஆங்கிலம் ஆகிய பாடங்களில் ஆர்வத்தை ஏற்படுத்தும் விதமாக ஒரு இயக்கத்தைத் தொடங்கியிருக்கிறது நம் நடுவணரசு. ராஷ்ட்ரிய அவிஷ்கார் அபியான் என்னும் செயல் திட்டம்தான் அது அதனை சுருக்கமாக (RAA) எனக்குறிப்பிடுகின்றனர். இதனைத் தமிழில் தேசிய கண்டுபிடிப்பு இயக்கம் என்று குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கலாம். இந்த செயல் திட்டம் கடந்த ஆண்டு நடைமுறைக்கு வந்தது. இத்திட்டத்தை குடியரசு முனாள் தலைவர் மறைந்த அப்துல்கலாம் அவர்கள் தொடக்கி வைத்தார். தற்போது ஒரு மாவட்டத்திற்கு பத்து பள்ளிகளில் இத்திட்டம் நடைமுறைப் படுத்தப் பட்டுள்ளது  இன்னும் ஐந்து ஆண்டுகளில் படிப்படியாக அனைத்து பள்ளிகளிலும் இது நடைமுறைக்கு வரும் என்று திட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் முக்கிய நோக்கம் பள்ளி மாணவர்கள் கணக்கையும் அறிவியலையும் கறபதை மகிழ்வானதாகவும் அர்த்தமுள்ளதாகவும் ஆக்குதலாகும். மேலும் பள்ளிசார்ந்த அறிவை பள்ளிக்கு வெளியே உள்ள வாழ்வோடு இணைப்பதும் ஆகும்.
உதாரணமாக கணக்குப்பாடத்தில் வடிவியல் படிக்கின்றனர். இந்த வடிவியல் அன்றாட வாழ்க்கையில் எங்கே எப்படி பயன்படுகிறது என்பதை மாணவர்களுக்கு நேரடியாக உணர்த்துவதாகும். பாலங்கள் காட்டடங்கள் கட்டும்போது அவை உறுதியாகவும் அழகாகவும் அமைய எப்படி வடிவியல் பயன்படுகிறது என்பதை நேரடியாக கட்டுமானப்பணிகள் நடைபெறும் இட்த்திற்கே சென்று தெரிந்துகொள்ளுதல் அல்லது பொறியியல் வல்லுநர்களைக்கொண்டு விளக்கம் அளித்தல் போன்ற செயல்பாடுகள் வாயிலாக மாணவர்களுக்கு புரியவைப்பது. இப்படிச்செய்வதன் மூலம் கற்றல் என்பது அன்றாட வாழ்வோடு தொடர்புடைய ஒன்று என்பதை உணரும் மாணவர்கள் எதிர்கால நலன் கருதி ஆர்வமாகக் கற்கும் நிலை ஏற்படுவதோடு கற்றலில் ஆர்வமும் ஏற்படும். கல்வி சுமையானதாக இல்லாமல் எளிமையாகும்.
இத்திட்டத்தில் ஆங்கிலத்திற்கு ELCOM - என்ற பெயரிலும் (ENGLISH LANGUAGE COMMUNICATION), அறிவியலுக்கு STEM – என்ற பெயரிலும் (SCIENCE TECHNOLOGY ENGINEERING MATHEMATICS) கணக்கிற்கு (ARIAL) என்ற பெயரிலும் (ARITHMATIC ALGIBRA) செயல் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த் திட்டங்களை செயல்படுத்திட உயர்கல்வி நிறுவன்ங்களோடு பள்ளிகள் இணைக்கப்பட்டுள்ளன. கல்லூரிகள் ,IIT போன்ற உயர்கல்வி நிறுவன்ங்கள், மத்திய பல்கலைக்கழகங்கள் போன்ற நிறுவன்ங்களுக்கு மாணவர்களை அழைத்துச்சென்று அங்குள்ள வசதிகளை பள்ளி மாணவர்களுக்கு அளிப்பது. அங்குள்ள பேராசிரியர்களை பள்ளிக்கு அழைத்து ஆசிரியர் மாணவர்களின் சந்தேகங்களை போக்குவது என இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் அறிவியல் ஆய்வகங்களை முழுமையாகப் பயன்படுத்துவது. ஆய்வகத்தில் அனைத்து வசதிகளையும் உருவாக்குவது. கணக்கு ஆய்வகங்களைப் பள்ளிகளில் ஏற்படுத்துவது. ஒவ்வொரு பாட்த்தையும் இயன்ற வரை செயல்வழியாக செய்துபார்த்து புரிந்துகொள்வது, கணித மன்றங்கள், அறிவியல் மன்றங்கள் போன்ற மன்றச்செயல்பாடுகளில் மாணவர்களை மிழிமையாக ஈடுபடுத்துவது போன்ற பல குறிப்பிட்த்தக்க குறிக்கோள்களை இத்திட்டம் கொண்டுள்ளது. 6 வயது முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகளே இத்திட்டத்திற்கான இலக்காக நடுவணரசு அறிவித்துள்ளது.
இத்திட்ட்தை நடைமுறைப்படுத்த தேசிய அளவில் பள்ளிக்கல்வித்துறை செயலர் உயர்கல்வித்துறை செயலர் இணைந்த குழுவும் மாநில அளவில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தலைமையிலான குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கான நிதி அனைவருக்கும் கல்வி இயக்கத்திலிருந்தும் தேசிய இடைநிலைக்கல்வித்திட்ட்த்திலிருந்தும் வழங்கபடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவியல் , கணக்கு ஆகிய பாடங்களில் புதுமைச்செயல்பாடுகளை நிகழ்த்துவதற்காக 33 கோடியும்,ஆசிரியர்களுக்கான பயிற்சிக்காக 98 கோடியும், கற்றல் கற்பித்தல் உபகரணங்களுக்காக 6.5 கோடியும் மேலும் RMSA மூலம் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்க 125 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் குழந்தைகள் அறிவியல் மாநாடு, ஆசிரியர்கள் அறிவியல் மாநாடு, கணித மேளா போன்ற வற்றை கல்வித்துறையே முன்னின்று நடத்துவது போன்ற முக்கிய அம்சங்களும் இத்திட்ட்த்தில் உள்ளன.
ஆசிரியர்கள் அதிலும் குறிப்பாக அறிவியல், கணக்குப் பாட ஆசிரியர்களின் முக்கியமான பணி அனைத்துவிதமான கற்றல் கருவிகளை இயன்றவரை தலைமை ஆசிரியர் உதவியோடு முழுமையாகப் பயன்படுத்தி மாணவர்களின் ஆர்வத்தை கணக்கிலும் அறிவியலிலும் ஈர்ப்பதாகும்.
ஆசிரியர்கள் மாதம் ஒரு செயல்திட்ட்த்தை அறிவியலிலும் கணக்கிலும் மாணவர்களைக் கொண்டு செயல்படுத்துவது. அதன் வாயிலாக மேற்கண்ட பாடங்களில் மிகவும் ஆர்வமாகவும் துடிப்பாகவும் செயல்படும் மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களை உயர்ந்த நிலைக்குக் கொண்டுவருவது இதன் நோக்கமாகும்.
மாணவர்களை கேள்விக்கு பதில் எழுதுபவர்களாக இல்லாமல் கேள்விகளைக் கேட்பவர்களாக மாற்றிடவேண்டும். இதனை கடமைக்கு செய்யாமல் அற்பணிப்பு உணர்வோடு செய்தால் கல்வித்துறையில் மாபெரும் புரட்சி ஏற்படும் என்பது உறுதி.

  

Tuesday, September 6, 2016

#என்வகுப்பறை - நீங்களாக இருந்தால் என்ன செய்வீர்கள்?






     எனக்கு வகுப்பறையில் ஏற்பட்ட ஒரு அனுபவத்தை பல ஆசிரிய நண்பர்களிடம் கூறி இந்த சூழலில் நீங்களாக இருந்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டுள்ளேன். அவர்கள் கூறிய பதில் எனக்கு வியப்பளிக்கவில்லை. ஆனால் நான் கூறிய பதில் அவர்களுக்கு வியப்பாக இருந்தது.
     கார்குடல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பில் பாடம் நடத்திக்கொண்டிருக்கும்போது கடைசி பெஞ்ச்சில் அமர்ந்திருந்த ஒரு மாணவன் பாடத்தை கவனிக்காமல் குறிப்பேட்டில் ஏதோ செய்துகொண்டிருந்ததைப் பார்த்த எனக்குக் கடுமையான கோபம் வந்துவிட்டது. கோபத்தை அடக்கிக்கொண்டு என்னதான் செய்கிறான் என்று அவன் அருகில் சென்று பார்த்தேன். ஒரு அழகான படத்தை
வரைந்துகொண்டிருந்தான்.
எனக்கு கோபம் குறைந்து அவனின் ஓவியத்திறமை வியப்பளித்தது. அவன் ஓவியம் வரைவதில் கெட்டிக்காரன் என்று அன்றுதான் தெரிந்துகொண்டேன். இந்த சூழலில் மற்ற ஆசிரியர்களில் பெரும்பாலானோர் கூறிய பதில் இதுதான், ”நான் பாடம் நடத்துறத கவனிக்காம படம் வரைஞ்சுகிட்டிருக்கிறாயே உனக்கு எவ்வளவு தைரியம் இருக்கணும் “  என்று
கோபமாக அவன் கையிலிருந்த படத்தைக் கிழித்தெரிந்து அவனை வகுப்புக்கு வெளியில் நிறுத்துவோம். என்பதே பல நண்பர்களின் பதில். ஆனால் எனக்கு ஏனோ அப்படித் தோன்றவில்லை. அவன் வரைந்த ஓவியத்தை அனைத்து மாணவர்களிடமும் காண்பித்து பாராட்டினேன். அதன்பிறகு அவனுக்கு நான் கூறியது இதுதான்,” நீ மிக அழகாக படம் வரைகிறாய் வருங்காலத்தில் மிகச்சிறந்த ஓவியனாக வருவாய். அதற்கு நீ ஓவியக்கல்லூரியில் சேர வேண்டும். அப்படி சேர வேண்டுமென்றால் +2 தேர்ச்சி பெற வேண்டும். எனவே உன் ஓவியத்திறமையை ஓய்வு நேரத்தில் வளர்த்துக்கொள். வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்தும்போது பாடத்தை கவனித்தால்தான் எளிதாகத் தேர்ச்சி பெறலாம். நீ +2 முடித்த பிறகு என்னிடம் வா உன்னை ஓவியக்கல்லூரியில் சேர்த்துவிடுகிறேன் என்று அவனுக்கு அறிவுரை கூறினேன். அதன் பிறகு அப்பள்ளியில் ஓவியத்திறமை உள்ள மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்காக சனி ஞாயிறு ஆகிய இரு நாட்கள் ஓவியர் கோவிந்தன், ஓவியர் காசி ஆகியோரைப் பள்ளிக்கு வரவழைத்து ஒரு ஓவியப்பயிலரங்கை நிகழ்த்தினோம். நன்றாக படம் வரையும் மாணவர்களின் ஒவியங்களை பள்ளி மாணவர் மலரில் இடம்பெறச்செய்தோம். இதனை அத்தோடு மறந்துபோனேன் நான். ஆனால் நான்கு ஆண்டுகள் கழித்து அந்த மாணவர் சபரி என்னைத்தேடி வீட்டுக்கு வந்தார், ”சார் ஒவியக்கல்லூரியில் சேர்த்து விடுவதாக்க் கூறினீர்களே, இப்போது நான் +2 தேர்ச்சி பெற்றுவிட்டேன்”. என்று கூற என்னால் நம்பமுடியவில்லை. ஏதோ ஒரு நாள் வகுப்பில் கூறிய ஒரு தகவலை நான்கு ஆண்டுகள் வரை மறக்காமல் வைத்திருந்து இப்படி கேட்டதும் எனக்கும் அந்த மாணவரை ஓவியக்கல்லூரியில் சேர்த்து விடவேண்டும் என்ற ஆசை தொற்றிக்கொண்டது. செய்தித்தாளில் விளம்பரம் வந்ததும் விண்ணப்பிக்கலாம் என்று கூறினேன். அதேபோல் சென்னை கவின்கலைக் கல்லூரியில் விண்ணப்பித்தோம் இவன் திறமைக்கு அங்கு இடம் கிடைத்தது. இன்று நுண்கலையில் இளங்கலைப்பட்டம் பெற்ற ஓவியப் பட்டதாரி சபரிநாதனைப் பார்க்கும்போதெல்லாம் மகிழ்வாக இருந்தாலும் அவர் முதுகலைப் பட்டம் முடிக்கவில்லையே என்ற ஆதங்கம் அவ்வப்போது ஏற்படும்.


     எனவே ஆசிரியர்கள் வகுப்பில் கூறும் ஒவ்வொரு சொல்லும் அந்த பிஞ்சு நெஞ்சுகளில் ஆழப்பதியும் என்பதை ஆசிரியர்களாகிய நாம் எப்போதும் மனத்தில் கொண்டு நடந்துகொள்ளவேண்டும் என்பதை அந்த மாணவர் எனக்கு உணர்த்திய பாடம் இது. மேலும் படிப்பது மட்டுமே திறமை என்ரு எண்ணி அவர்களின் மற்ற திறமைகளை  கண்டுகொள்ளாமலிருந்து விடக்கூடாது என்பதும் மாணவர் சபரி எனக்கு உணர்த்தியது.








நன்றி : தி இந்து


#என்வகுப்பறை - நீங்களாக இருந்தால் என்ன செய்வீர்கள்?: எனக்கு வகுப்பறையில் ஏற்பட்ட ஓர் அனுபவத்தை ஆசிரிய நண்பர்கள் பலரிடம் கூறி, 'இந்தச் சூழலில் நீங்களாக இருந்தால் என்ன செய்வீர்கள்?' என்று கேட்டுள்ளேன்.

Thursday, September 1, 2016

உடற்கல்வி ஆசிரியர்கள் நியமனத்தில் அரசின் நிலை என்ன?



     ஒலிம்பிக் போட்டியின் பதக்கப்பட்டியலை நாள்தோறும் ஆவலாய்ப் பார்ப்பேன். நம் இந்தியா எந்த இடத்தில் இருக்கிறது என்று. அது பட்டியலிலேயே இல்லை என்பது நமக்கு வருத்தமாக இருக்கலாம். நம்மை விட மக்கள் தொகையிலும் பரப்பளவிலும் குட்டி நாடான ஜப்பான் இன்றைய நிலவரப்படி (11.8.2016) 18 பதக்கங்களைப்பெற்று மூன்றாமிடத்தில் உள்ளது. மக்கள் தொகையில் உலகின் இரண்டாவது பெரிய நாடான நம்மால் ஏன் மற்ற நாடுகளோடு விளையாட்டில் ஈடு கொடுக்க இயலவில்லை என்பது கவலைக்குறிய ஒரு கேள்வியாகும். இந்த ஒலிம்பிக் போட்டியில் மட்டுமல்ல நடந்து முடிந்த ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டியிலும் இந்தியாவின் நிலை மிகவும் கவலைக்கிடமானதுதான். 
     நம் நாட்டில் விளையாட்டுக்கு முக்கியத்துவம் இல்லையா? அல்லது நாம் இன்னும் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டுமா? என்று சிந்தித்தால் நம் நாட்டுப்பள்ளிகள் விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்காமையும் ஒரு காரணம் என்பதை மறுப்பதற்கு இல்லை.
     நம் பள்ளிகளில் விளையாட்டு என்பது உடற்கல்வி என்ற பெயரில் வாரத்திற்கு இரண்டு பாடவேளை அனுமதிக்கப்பட்டுள்ளது. அந்த பாடவேளையை உடற்கல்வி ஆசிரியர் மேற்பார்வையிடவேண்டும். ஆனால் பல பள்ளிகளில் இது நடைமுறைப்படுத்தப்படுவது இல்லை. அதற்குப் பல காரணங்கள் உள்ளன. பத்து பனிரெண்டாம் வகுப்புகளுக்கு உடற்கல்வி என்பது கால அட்டவணையில் மட்டும்தான் இருக்கும். நடைமுறையில் இருக்காது. அதற்கு காரணம் அவர்கள் அரசுப் பொதுத்தேர்வு எழுகிறவர்கள் எனவே விளையாட்டில் நேரத்தை வீணடிக்கக் கூடாது என்பது எழுதப்படாத சட்டம். சில பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் இருப்பார் ஆனால் விளையாட்டு மைதானம் இருக்காது. சில பள்ளிகளில் விளையாட்டு மைதானம் இருக்கும் உடற்கல்வி ஆசிரியர் இருக்க மாட்டார். இப்படி பல காரணங்களால் நம் நாட்டுப் பள்ளிகளில் உடற்கல்வி என்பதே ஒரு வேண்டாத பாடவேளையாக ஆசிரியர்களாலும் தலைமை ஆசிரியர்களாலும் பார்க்கப்படுகிறது. ஆனால் உண்மையிலேயே பள்ளிகளில் மாணவர்களால் அதிகம் விரும்பப்படும் பாடவேளை உடற்கல்விப் பாடவேளைதான். விளையாடுவதற்கு முன்பு இருக்கும் மாணவரின் மனநிலையைவிட விளையாண்ட பிறகு இருக்கும் மன நிலை கற்பதற்கு மிகவும் உகந்ததாக உள்ளதை ஒரு ஆசிரியராக நன்கு கவனித்து உணர்ந்துள்ளேன். விளையாட்டு ஒருபோதும் கல்விப்பணியை பாதிக்காது என்பதை நம் ஆசிரியர்களே ஏற்பதில்லை. மாணவர்களுக்கு இருக்கும் விளையாட்டு ஆர்வத்தை பள்ளிப்பருவத்திலிருந்தே கண்டுணர்ந்து முறையாகப் பயிற்சி அளித்தால் அரோக்கியமான இளைஞர்கள் உருவாவார்கள். அது நம் நாட்டு மனிதவளத்திற்குக் கூடுதல் பலமாக அமையும்.
     அப்படி ஒரு நிலை ஏற்படவேண்டுமெனில் தேர்வு முடிவுகளை ஆய்வு செய்து உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பது போல் விளையாட்டுப்போட்டிகளில் ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் எத்தனை பேர் வெற்றி பெற்றனர் என்பதை ஆய்வு செய்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜப்பான் நாட்டு பள்ளிகளில் கல்விக்கு அளிக்கும் அதே முக்கியத்துவம் விளையாட்டிற்கும்  அளிக்கப்படுகிறது என்பது உலகறிந்த உண்மை. ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டியிலும் அவர்கள் பெறும் பதக்கங்களே அதற்குச் சான்றாகும்.
     நம் நாட்டுக்கல்வித்துறை இதனை முழுமையாக செயல்படுத்த வேண்டுமெனில் பாட ஆசிரியர்களை நியமிப்பதில் காண்பிக்கும் அக்கரையை உடற்கல்வி ஆசிரியர் நியமனத்திலும் காண்பிக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள உயர்நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளிகளின் எண்ணிக்கை 5820. ஆனால் தற்போது பணியில் உள்ள உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கை 5200 மட்டுமே. 620 உடற்கல்வி ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளன. இது உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கான கணக்குதான். தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் தனியாக உடற்கல்வி ஆசிரியர் நியமிக்கப்படுவதில்லை. அது போல் புதிதாக தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப்பள்ளிகளிலும் உடற்கல்வி ஆசிரியர் பணியிடம் அனுமதிக்கப்படவில்லை.
     தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை சுமார் 5700000 (ஐம்பத்து ஏழு லட்சம்) மாணவ மாணவியர் படிக்கின்றனர். 40 மாணவர்களுக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியர் என்ற விகித்த்தில் தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை உடற்கல்வி ஆசிரியர் பணிகளைத் தோற்றுவித்து நியமித்தால் 142500 உடற்கல்வி ஆசிரியர்கள் தமிழகத்திற்குத்தேவை தற்போதுள்ள 5820 பணியிடங்கள் போக மீதமுள்ள 136680 ஆசிரியர்கள் நியமிக்கப்படவேண்டும். இது இன்னும் 50 ஆண்டுகள் ஆனாலும் நம் அரசியல் அமைப்பு முறையும் நிதி ஆதாரமும் இதற்கு இடமளிக்காது. ஆனால் திட்டமிட்டு செயல்படுத்தினால் நிச்சயம் நம் இளைஞர்களை விளையாட்டுத்துறையில் சாதனை படைக்கவைக்க முடியும். பள்ளிப்பருவத்திலேயே விளையாட்டு ஆர்வம் மிக்க மாணவர்களைக்கண்டறிந்து அவர்களுக்கு சிறப்புப் பயிற்சிகள் அளித்தால் நிச்சயம் ஒலிம்பிக் போன்ற போட்டிகளில் நாமும் சில பதக்கங்களைப்பெறலாம். தொடக்கப்பள்ளியிலிருந்தே அதற்கான பயிற்சிகளைத்தொடங்குவது அவசியம். அதற்கு ஏதுவாக தொடக்கப்பள்ளிகளிலும் உடற்கல்வி ஆசிரியர்கள் நியமிக்கப்படவேண்டும். உடற்கல்வி ஆசிரியர்கள் நியமனத்தில் பதிவு மூப்பு அடிப்படையைப்பின்பற்ற வேண்டும் என்று வேலையில்லா உடற்கல்வி ஆசிரியர் சங்கம் நீதிமன்றத்தில் பெற்றுள்ள தடை ஆணையை ரத்து செய்திட அரசு ஆவன செய்து காலிப்பணியிடங்களை உடனடியாக நியமிக்க நடவடிக்கை எடுப்பதும் அவசியம்.
     ஆளுமையை வளர்க்கும் மூன்று காரணிகளில் முதன்மையானதும் முக்கியமானதும் உடல்தான். அதனால்தான் உடம்பை வளர்த்தேன் உயி வளர்த்தேனே என்றனர் நம் முன்னோர். 

     எல்லா தடைகளையும் தாண்டி உடற்கல்வி ஆசிரியர் இல்லாத பள்ளிகள் நம் நாட்டில் இல்லை என்ற நிலையை எய்தினால் நம் நாடும் மற்ற நாடுகளோடு விளையாட்டுத்துறையிலும் போட்டியிடலாம். அந்த நிலையை ஏற்படுத்துவது நம் ஆட்சியாளர்களின் கைகளில்தான் உள்ளது. செயல்படுவார்களா?
நன்றி: குங்குமச்சிமிழ் கல்வி வேலை வாய்ப்பு வழிகாட்டி