தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Saturday, January 2, 2016

பயிற்சியா……? அலறும் ஆசிரியர்கள்.


                    
          
            பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு அவ்வப்போது பணியிடைப்பயிற்சிகள் வழங்கப்படுவது உண்டு. அது தேவைதான். புதிய கற்பித்தல் உத்திகளை நடைமுறைப்படுத்தவும், வகுப்பறைச் சூழலில் ஆசிரியர் மாணவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை விவாதித்து அவற்றுக்கான தீர்வுகளைக் கண்டறிவதாகவும்  ஆசிரியர்களுக்குள் கலந்துரையாடி துறை சார்ந்த வளர்ச்சிக்கு வித்திடுவதாகவும் அமையும் எனில் கட்டாயம் பணி இடைப்பயிற்சிகள் தேவைதான். ஆனால் சமீப காலமாகக் கல்விதுறையில் நடைபெறும் பயிற்சிகள் மேலே கூறியவாறு நடைபெற வில்லை. அதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.
 இந்த பயிற்சிகளை ஆசிரியர்களுக்கு வழங்குவதற்கு கல்வித்துறையில் மூன்று அமைப்புகள் உள்ளன. அனைவருக்கும் கல்வித்திட்டம்(SSA) ,அனைவருக்கும் இடைநிலைக்கல்வித்திட்டம் (RMSA), மாவட்ட ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்(DIET) ஆகிய திட்டங்களின் மூலம் ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
ஓர் ஆண்டுக்கு ஓர் ஆசிரியர் (SSA) மூலம் 20 நாட்கள் பயிற்சி பெறவேண்டும். குறுவட்ட வள மையம் எனப்படும் (CRC)இல் 10 நாட்களும் வட்டார வள மையம் எனப்படும்(BRC)இல் 10 நாட்களும் இந்த பயிற்சிகள் வழங்கப்படும். (RMSA) மூலம் பாடம் தொடர்பான பயிற்சி 10 நாட்களும் மதிப்பீட்டு முறை சார்ந்த பயிற்சி 3 நாட்களும் நிர்வாகம் சார்ந்த பயிற்சி 3 நாட்களும் TAN EXEL எனப்படும் பயிற்சி 5 நாட்களும் (அரசு பள்ளி மாணவர்களை மாநில மாவட்ட அளவில் முதலிடம் பெற வைப்பதற்கான சிறப்புப் பயிற்சி) ஆகிய பயிற்சிகள் நடைபெறும். (DIET) மூலம் சுகாதாரப் பயிற்சி, வாழ்வியல்திறன் பயிற்சி பாடங்களில் உள்ள கடினப்பகுதிகளைக் கண்டறிந்து அவற்றை எளிமைப்படுத்தும் பயிற்சி என பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
இவை தவிர ஆண்டுக்கு ஒரு முறை வாக்காளர் கணக்கெடுப்புக்கான பயிற்சி மற்றும் பணிகள், 5 ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் பணி மற்றும் பயிற்சி (உள்ளாட்சி,சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்கள் தனித்தனியே), 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகைக் கணக்கிடுவதற்கான பயிற்சி மற்றும் பணி பொருளாதாரக் கணக்கெடுப்புப் பயிற்சி. என பல்வேறு பயிற்சிகள் ஒவ்வோர் ஆண்டும் நடைபெறுகின்றன. பயிற்சிகள் ஒரு அளவோடு இருந்தால் அது ஊக்கமளிப்பதாக அமையும். அளவுக்கு அதிகமாக பயிற்சிகள் வழங்கப்படுவதால் அவை ஆசிரியர்களுக்கு அலுப்பூட்டுவதாக உள்ளன என்றால் கல்வித்துறை சாராத பயிற்சிகள் கூடுதல் சுமையாக அமைகின்றன.
            பயிற்சி வழங்குவதற்கான கருத்தாளர்கள் பற்றாக்குறை கல்வித்துறையில் உள்ளது. சிறந்த ஆசிரியர்கள் பலர் கருத்தாளர்களாக முன் வருவதில்லை. (SSA) திட்டத்தில் பயிற்சிகள் வழங்குவதற்கு (BRT) எனப்படும் வட்டார வளமைய ஆசிரியர்கள் உள்ளனர். அவர்களுக்கு பள்ளியில் பாடம் நடத்திய அனுபவம் இல்லை நேரடி நியமனம் மூலம் நியமிக்கப்பட்டவர்கள் என்பதால் பள்ளியில் ஆசிரியர்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகள் பற்றி அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இது இப்படி என்றால் (RMSA) திட்டத்தில் அதற்கும் வழி இல்லை. அலுவலர்களுக்கு நெருக்கமான ஆசிரியர்களே இங்கு கருத்தாளர்கள். கருத்தாளர்களுக்கு பயிற்சி வழங்குவதற்கு சில நேரங்களில் கல்லூரி பேராசிரியர்களைப் பயன் படுத்துகின்றனர். பள்ளிக் கல்விக்கும் பேராசிரியர்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லாமையால் பயிற்சியின் நோக்கம் பல வேளைகளில் நிறைவேறாமலே போய்விடுகிறது. மொத்தத்தில் பயிற்சிகள் என்பது அதற்காக ஒதுக்கப்பட்ட தொகையை செலவு செய்வதற்கான ஒரு சடங்காக ஆகிவிடுகிறது. ஓர் ஆசிரியர் ஓர் ஆண்டில் 20 முதல் 40 நாட்கள் வரை பயிற்சிக்காக செல்லவேண்டிய நிலை உள்ளது. ஒரு பள்ளியில் 10 ஆசிரியர்கள் இருந்தால் 5 ஆசிரியர்கள் பயிற்சிக்கு சென்று விடுவார்கள் மீதமுள்ள 5 ஆசிரிய்ர்கள்தான் மாணவர்களுக்குப் பாடம் கற்பிக்க வேண்டும். இது அவர்களுக்கு கூடுதல் சுமையாகவே உள்ளது. அந்த கற்பித்தல் நாட்களை பயிற்சிக்கு சென்ற ஆசிரியர் எவ்வாறு ஈடு செய்வார் என்பதை யாரும் எண்ணிப்பார்ப்பதில்லை. இவை ஒரு புறமிருக்க இன்னும் பல்வேறு பணிகளையும் ஆசிரியர்கள் செய்யவேண்டியுள்ளது. 
            மாணவர்களுக்கு சீருடைகள், பாடநூல்கள், காலணிகள், பை போன்ற நலத்திட்டப் பொருள்களை அலுவலகத்திலிருந்து பெற்று வந்து வழங்குவது, அதற்கான பதிவேடுகளைப் பராமரிப்பது,மூவகைச்சான்றுகள் (சாதி,வருமானம்,இருப்பிடம்) பெறுவதற்கான விண்ணப்பங்களை நிரப்பி உரிய அலுவலகத்தில் சேர்த்து சான்றுகளைப் பெற்று வழங்குவது, மிதிவண்டி, மடிக்கணினி ஆகியவற்றுக்கான தேவைப்பட்டியல் தயாரிப்பது, அவற்றைப் பெற்று மாணவர்களுக்கு வழங்குவது, வழங்கிய விவரங்களை இணியத்தில் பதிவிடுவது. பெண்கல்வி ஊக்கத்தொகை, சாதி வாரியான உதவித்தொகை, power finance, தேசிய திறனறித்தேர்வு, ஊரகப்பகுதி மாணவர்களுக்கான திறனறித்தேர்வு போன்ற உதவித்தொகைகள் பெறுவதற்காக மாணவர்களுக்கு வங்கிக்கணக்கு தொடங்கிட வங்கிக்கு சென்று விண்ணப்பப் படிவங்கள் பெற்றுவந்து அவற்றுக்குத்தேவையான ஆவணங்களை மாணவர்களிடம் பெற்று விண்ணப்பத்தை நிரப்பி வங்கியில் கொடுத்து கணக்கு தொடங்கி அந்த எண்களையும் மற்ற விவரங்களையும் இணையத்தில் பதிவேற்றுவதோடு குறுந்தகடாகவும் அச்சிட்ட நகலாகவும் உரிய அலுவலகங்களுக்கு வழங்குவது, பஸ் பாஸ் பெறுவதற்கு போக்குவரத்துக் கழக அலுவலகம் சென்று அதற்கான நடைமுறைகளை மேற்கொள்வது என அந்த பட்டியல் நீளும். இவை தவிர தற்செயல் விடுப்பு, ஈட்டிய விடுப்பு, வரையறுக்கப்பட்ட விடுப்பு, மருத்துவ விடுப்பு, அரைச்சம்பள விடுப்பு, ஊதியமில்லா விடுப்பு, மகப்பேறு விடுப்பு என பல்வேறு விடுப்புகளை எடுக்க நேரும். இவையேல்லாம் போக மீதமுள்ள நாட்களில்தான் கற்பிக்க முடியும்.
            இவையெல்லாம் முழுமையான கற்பித்தலுக்கு இடையூறாகவே உள்ளன. இவற்றை சரி செய்யவேண்டுமெனில்
ஆசிரியர்களை கற்பித்தல் பணி சாரத பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது.
ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சி நாட்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும்.
நலத்திட்டங்களை வழங்கிட தனி அலுவலர்களை நியமிக்க வேண்டும்
துறை சார்ந்த வல்லுநர்களை பயிற்சிக்கான கருத்தாளர்களாக நியமிக்க வேண்டும்.

ஒவ்வொரு பயிற்சியும் உயர் அலுவலர்களின் மேற்பார்வையில் நடைபெற வேண்டும்.  

2015 கல்வித்துறையில் நடந்தது என்ன?



ஒவ்வோர் ஆண்டு நிறைவடையும்போதும் அந்த ஆண்டில் நடைபெற்ற பணிகளை மதிப்பிடுவது என்பது அடுத்து வரும் ஆண்டுகளில் செய்யவேண்டிய பணிகளுக்கு அடித்தளமாக அமையும். அந்த வகையில் தமிழக அரசு கல்வித்துறையில் 2015 ஆம் ஆண்டில் நிறைவேற்றிய ஆக்க்ப்பூர்வமான பணிகளையும் நிறைவேற்றத் தவறியவற்றையும் பார்க்கலாம்.
கல்வித்துறைக்கென எப்போதுமில்லாத அளவில் அதிக அளவாக நடப்பு ஐந்தாண்டு திட்டத்தில் 85422 கோடி ஒதுக்கியுள்ளது.
மாணவர்களுக்கு நலத்திட்டங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. 1080 கோடி ரூபாய் நலத்திட்டங்களுக்காக மட்டுமே (2015 ஆம் ஆண்டில் மட்டும்) ஒதுக்கப்பட்டுள்ளது. பாடநூலும் சீருடையும் மட்டும் வழங்கிய நிலையில் 14 வகையான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவது கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு மிகவும் பயன்படக்கூடியவை.
கல்வித்துறையில் 52000 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
13 விழுக்காடாக இருந்த மாணவர் இடைநிற்றல் விகிதம் 1.5 விழுக்காடாக்க்குறைக்கப்பட்டுள்ளது.
பல பள்ளிகளுக்கு புதிய கட்டடங்கள் உள் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மாணவர்களின் சிந்திக்கும் ஆற்றலை மேம்படுத்தும் விதமாக சதுரங்க விளையாட்டுப்போட்டிகள் நடத்தப்படுவது மாணவர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது.
தேர்வு முறையில் காலத்திற்கேற்ற மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. விடைத்தாள்களில் விரும்பத்தகுந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இப்படி ஆக்கப்பூர்வ பணிகள் நடைபெற்றாலும் சில பின்னடைவுகளும் உள்ளன.
கல்வித்துறையில் காலியாக உள்ள 71ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவித்து இதுவரை 52 ஆயிரம் பணியிடங்களே நிரப்பப்பட்டுள்ளன. மீதி 19 ஆயிரம் பணியிடங்கள் இன்னும் காலியாக உள்ளன.
ஆய்வக உதவியாளர் பணிக்கு கடந்த மே மாதம் தேர்வு நடத்தப்பட்டு இதுவரை பணியிடங்கள் நிரப்ப இயலாமல் போயிற்று. தெளிவான முடிவெடுக்காமையால் நீத்தித்துறையின் தீர்ப்புக்குக் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மாணவர்களின் அறிவாற்றலை வளர்க்கும் நோக்கில் அவர்களுக்கு வழங்கப்படும் மடிக்கணினிகளில் கன்னிமாரா நூலகத்தில் மின் மயமாக்கப்பட்ட அரிய நூல்களை பதிவேற்றம் செய்து தரப்படும் என அறிவித்தனர் அதுவும் இது வரை நடைமுறைக்கு வரவில்லை. பல கிராமப்புற மாணவர்கள் மடிக்கணினியைப் படம் பார்க்கவே பயன்படுத்துகின்றனர்.
பல பள்ளிகளில் பகுதி நேர விளையாட்டு, ஓவியம், கணினி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வாரத்தில் 3 அரை நாட்கள் மட்டும் பணி செய்தால் போதும் என அறிவித்தனர் . இது மிக மோசமான முன்னுதாரணமாக உள்ளது.
ஆண்டு தோறும் பள்ளிகள் தரம் உயர்த்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு இது வரை பளிகள் தரம் உயர்த்தப்பட்ட அறிவிப்பு வெளியிடப்படவில்லை.
இதுவரை தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு கட்டட வசதி முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.
சாரண சாரணியர் இயக்கத்தில் மாணவர்கள் பயிற்சி பெறுவதற்கு அவர்களே முகம் கட்டணத் தொகை செலுத்த வேண்டிய நிலை உள்ளது. இதனை அரசே ஏற்கலாம். கடந்த  3 ஆண்டுகளாக ஆளுநர் விருது பெறுவதற்கு தயாராக உள்ள மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்படவில்லை.
மாணவர்களின் கழிவறைகளைகளை பராமரிப்பதற்காக 160 கோடி ஒதுக்கப்படும் என முதல்வர் அறிவித்தார் அந்த திட்டமும் நடை முறைக்கு வரவில்லை.
நன்றி: குங்குமச்சிமிழ் கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டி


Friday, December 18, 2015

ஆ.மாதவனுக்கு சாகித்ய அக்காதமி விருது


                           
எழுத்தாளர் ஆ.மாதவன் அவர்களுக்கு 2014 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அக்காதமி விருது அவர் எழுதிய இலக்கியச்சுவடுகள் என்ற நூலுக்கு வழங்கப்பட உள்ளது. அவருக்கு வாழ்த்துகள்.

அவரின் வாழ்க்கைச்சுருக்கம் இங்கே பதிவிடப்படுகிறது.

ஆ.மாதவன் 1934ல் திருவனந்தபுரத்தில் பிறந்தார். அவரது தந்தைபெயர் ஆவுடைநாயகம். தாயார் செல்லம்மாள். இருவருமே குமரிமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். ஆ.மாதவனின் தாயின் ஊர் கொட்டாரம். தந்தையின் ஊர் நாகர்கோயில். பிளவுபடாத திருவிதாங்கூர் இருந்த காலத்திலேயே அவர்கள் திருவனந்தபுரத்துக்குக் குடியேறிவிட்டனர். அவரது தந்தை திருவனந்தபுரம் சாலை அங்காடியில் சிறுவணிகராக இருந்தார். பள்ளிப்படிப்பை முடித்த ஆ.மாதவன் மேலே படிக்கவில்லை. திராவிட இயக்க ஆதரவாளராக எழுத ஆரம்பித்தார். அவரது முதல் கதை 1955ல் ’சிறுகதை’ இதழில் வெளியாகியது. பின்னர் மலையாளம் வழியாக நவீன இலக்கிய அறிமுகம் பெற்று தீவிர இலக்கியதளத்தில் செயல்படலானார். அவரது முதல் சிறுகதைத் தொகுதி மோகபல்லவி. கடைத்தெருக்கதைகள் இவருக்குப் புகழைத்தேடித்தந்த தொகுதி.

ஆ.மாதவன் திருவனந்தபுரம் சாலைத் தெருவில் செல்வி ஸ்டோர் என்ற நிறுவனத்தை நடத்திவருகிறார். சாலைத் தெருவை பின்னணியாகக் கொண்டே அவரது பெரும்பாலான கதைகள் அமைந்துள்ளன. அவர் விமர்சகர்களால் கடைத்தெருவின் கதைசொல்லி என்று அழைக்கப்படுகிறார். தமிழிலக்கியத்தில் ஒரு கடைத்தெரு இலக்கியப்பதிவு பெறுவது ஆ.மாதவன் கதைகள் வழியாகவே.

1974ல் ஆ.மாதவனின் முதல் நாவலான ’புனலும் மணலும்’ வெளிவந்தது.கரமனையாற்றில் மணல் அள்ளும் ஒரு குடும்பத்தின் கதை அது. அந்நாவல் அதன் யதார்த்தத்துக்காகப் பெரிதும் கவனிக்கப்பட்டது. 1982ல் வெளிவந்த கிருஷ்ணப்பருந்து தான் ஆ.மாதவனின் மிகச்சிறந்த நாவல் என்று விமர்சகர்களால் சொல்லப்படுகிறது. 1990ல் அவரது மூன்றாம்நாவலான ’தூவானம்’ வெளிவந்தது.

மாதவன் மொழிபெயர்ப்பாளரும்கூட. 1974ல் அவர் காரூர் நீலகண்டபிள்ளை எழுதிய சம்மானம் என குறுநாவலை தமிழாக்கம் செய்தார். 2002ல் சாகித்ய அக்காதமி வெளியீடாக மலையாள எழுத்தாளர் பி கெ பாலகிருஷ்ணனின் இனி ஞான் உறங்ஙட்டே என்ற நாவலை இனி நான் உறங்கட்டும் என்ற பேரில் மொழியாக்கம் செய்தார். மாதவனின் மனைவி பெயர் சாந்தா. இவர்களுக்கு 1966ல் மணமானது; கலைச்செல்வி, மலர்ச்செல்வி என்ற இரு மகள்களும் கோவிந்தராஜன் என்ற மகனும் உள்ளனர். 2002ல் மனைவியும் 2004ல் மகனும் மறைந்துவிட்டனர். மாதவன் மகளுடன் வசிக்கிறார்.

மாதவன் 2010 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் இலக்கிய விருதை பெற்றார். இது இலக்கிய முன்னோடிகளுக்கு இளையோரால் வழங்கப்படும் விருது

சிறுகதைத் தொகுப்பு
மோகபல்லவி 1974
கடைத்தெருக்கதைகள் 1974
காமினிமூலம் 1975
மாதவன் கதைகள் 1984
ஆனைச்சந்தம் 1990
அரேபியக்குதிரை 1995
ஆ.மாதவன் கதைகள், முழுத்தொகுப்பு 2002, தமிழினி பதிப்பகம்
நாவல்கள்
புனலும் மணலும் (1974)
கிருஷ்ணப்பருந்து (1982)
தூவானம் (1990)
மொழியாக்கம்
யட்சி [மூலம் மலையாற்றூர் ராமகிருஷ்ணன், யக்‌ஷி]

இனி நான் உறங்கட்டும் [மூலம் இனி ஞான் உறங்ஙட்டே, பி.கெ.பாலகிருஷ்ணன்]

விருதுகள், நூல்கள்
கடைத்தெருவின் கலைஞன், [ஜெயமோகன் எழுதிய நூல்]

விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் தமிழ்ப் படைப்பாளிகளுக்கு வழங்கும் விஷ்ணுபுரம் விருது 2010 ஆம் வருடத்திற்கு ஆ.மாதவன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. தமிழக அரசின் இயல் துறைக்கான 2007ஆம் ஆண்டு கலைமாமணி விருது ஆ.மாதவனுக்கு வழங்கப்பட்டது
2014 ஆம் ஆண்டுக்கான  சாகித்ய அக்காதமி விருது  இவரது இலக்கியச் சுவடுகள் நூலுக்கு வழங்கப்பட்டுள்ளது

 நன்றி: விக்கிப்பீடியா