நிவேதிதா பதிப்பகமும் அகிலா பதிப்பகமும் இணைந்து சிதம்பரத்தில் நடத்தும் புத்தகக் கண்காட்சி நளை தொடங்குகிறது. கண்காட்ட்சியின் ஒரு பகுதியாக 15 நூல்கள் வெளியிடும் நிகழ்வு 1.5.2014 வியாழன் மாலை 4.00 மணிக்கு நடைபெற உள்ளது. அதில் ஓலைச்சுவடியிலிருந்து நான் தொகுத்த ரதி மன்மதன் கதைப்பாடல்கள் நூலும் வெளியிடப்பட உள்ளது. ஊருணிவாசகர் வட்டத்தின் முதல் வெளியீடு.
நூலுக்கு எழுதிய என்னுரை இங்கே பதிவிடப்படுகிறது.
என்னுரை
மருங்கூரில் மாசி மாதங்களில் மன்மதன் கோயிலில் திருவிழா நடைபெறும்போது மன்மதன் கதைப்பாடலைப் பாடும் வழக்கம் உண்டு. அதைப்பாடுபவர்களிடம் இந்தப் பாடல்களை எப்படிக் கற்றுக்கொண்டீர்கள் என்று கேட்டதற்கு ஓலைச்சுவடியிலிருந்து படித்தது என்பார்கள். அந்த ஓலைச்சுவடி கிடைத்தால் அச்சில் கொண்டுவரவேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. அந்த ஓலைச்சுவடி கார்குடல், நருமணம் போன்ற ஊர்களில் இருப்பதாக அறிந்து அங்கு சென்றேன். ஆனாலும் ஓலைச்சுவடி கிடைத்தபாடில்லை. கொடுமனூரில் ஒரு ஓலைச்சுவடி உள்ளது என அறிந்து அங்கு சென்று கேட்டபோது திரு. செயராமன் அவர்களிடம் உள்ளதாகத் தெரிவித்தனர். ஓலைச்சுவடியைக் கண்ணில் காட்டிய செயராமன் படியெடுக்கத் தரமுடியாது என மறுத்துவிட்டார். இது இப்படியே இருந்தால் காலத்தால் அழிந்துபோக்கும் யாருக்கும் பயன்படாது. எனவே அச்சில் வந்தால் எல்லோருக்கும் பயன்படும் எனறு கூறியபிறகும், அதெல்லாம் சரிதான். ஆனாலும் சாமி குற்றமாகிவிடும் எனவே தரமுடியாது என திட்டவட்டமாக மறுத்துவிட்டார். வேறு வழியின்றி சோகமாக வீடுதிரும்பினேன். பலமுறை முயன்றும் அவரிடமிருந்து ஓலைச்சுவடியைப் பெற முடியவில்லை. சில ஆண்டுகள் கழித்து அவரிடமிருந்து ஓலைச்சுவடியைப் பெற்றுக்கொள்ளும்படி தகவல் வந்தது. மகிழ்ச்சியோடு சென்று வாங்கிவந்து எழுதத்தொடங்கினேன். பள்ளி சென்று வந்த நேரம் போக காலை மாலை என இரு வேளைகளிலுமாக எழுதத்தொடங்கி மூன்று மாதங்கள் ஆனது முடிப்பதற்கு. இரண்டு சுவடிகள் கிடைத்தன. அதில் ஒன்றுதான் இப்போது உங்கள் கைகளில் தவழ்கிறது. இரு சுவடிகளில் இந்த சுவடி பதிப்பிக்க ஏற்றதாக இருந்தது. கதை முழுதாகவும் தொடர்ச்சியாகவும் அமைத்திருந்தது இந்த சுவடியில்தான். இன்னொரு சுவடியில் பத்துநாள் கதைகளும் நாள் வாரியாக பிரிக்கப்பட்டிருந்தாலும் தொடர்ச்சியாக இல்லை என்பதால் இச்சுவடியைப் பதிப்பிப்பது என்று முடிவு செய்தேன். இச்சுவடியில் ரகர றகர வேறுபாடுகள் சரிசெய்யப்பட்டுள்ளன. சில எழுத்துப்பிழைகள், ஒற்றுப்பிழைகள் சரிசெய்யப்பட்டுள்ளன. எழுத்துகள் தெளிவின்றி அமைந்திருந்த இடங்கள் …………….. என்று கோடிடப்பட்டுள்ளன. இயன்ற வரை பேச்சுவழக்குச் சொற்கள் சுவடியில் உள்ளபடியே அச்சிலும் கொடுக்கப்பட்டுள்ளன. அடிகளுக்கு எண்கள் பதிப்பாசிரியரால் வழங்கப் பட்டவை. சுவடி எழுதப்பட்ட காலத்தை சரியாக அறிய இயலவில்லை. சுவடியில் மெய்யெழுத்துகள் புள்ளிகொண்டு அமைந்துள்ளன. எனவே இது காலத்தால் பின்தங்கிய சுவடியாக இருக்கும். இதிலுள்ள செம்புலிங்க பூசி என்பாரின் பெயரைக்கொண்டுதான் இச்சுவடி நூறு ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டிருக்கலாம் எனக் கருதமுடிகிறது.
மன்மதன் கதைப்பாடல்கள் இதற்கு முன்பு அச்சில் வதிருக்கலாம். அனாலும் இந்தச் சுவடி இப்போதுதான் முதன்முதலாக வெளி வருகிறது. இச்சுவடிக்கென்று பல தனித்தன்மைகள் உள்ளன. விருத்தாசலம் வட்டார பண்பாடுகளும் ஊர்ப் பெயர்களும் இச்சுவடியில் மட்டுமே காணப்படுவனவாகும். அந்த வகையில் இச்சுவடி இவ்வட்டாரத் தனித்தன்மையோடு வெளிவருகிறது. இப்பகுதி மக்களின் பண்பாட்டு ஆவணம் ஒன்று அழிவிலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளது என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும். இப்போது இந்தச் சுவடியை நமக்கு அளித்த செயராமன் உயிரோடு இல்லை. இந்தச் சுவடியும் அவர்களின் வாரிசுகளிடம் இல்லை. எங்கோ தொலைத்துவிட்டனர். அதிலுள்ள பாடல்கள் இதோ உயிருடன் உங்கள் கைகளில்.