தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Monday, June 4, 2012

படிப்பு





எழுதச்சொல்லி
நச்சரிக்கும்
ஆசிரியர்களின்
பிடுங்கல்களிலிருந்து
விடுபட நினைக்கும்
என் மகனின்
நாள்காட்டி முழுக்க
ஞாயிற்றுக்கிழமைகள்

பள்ளி செல்லாமல்
வீதியில் திரியும்
நாய்களின் சுதந்திரம்
தனக்கில்லாதது பற்றி
வருந்துமவனை
உணவு முறையில்
நமக்கும் நாய்க்குமான
வேறுபாடு கூறி
தேற்றுவாள் மனைவி

விளையாட்டு மைதானத்தில்
கழற்றி வைக்கப்பட்ட
மனத்தோடு
பள்ளிக்கு விரட்டப்படும்
அவன் கடிகாரம்
நொண்டியடிக்கும்

உற்சாகத்தோடு
வீடு திரும்பும்
ஒவ்வொரு அந்தியிலும்
அவனுக்குக்
கண்ணீரால் எழுதக்
காத்திருக்கும்
பை நிறைய வீட்டுப்பாடம்

விரலிடுக்குகளில்
எழுதுகோலோடும்
விரிக்கப்பட்ட
குறிப்பேடுகளின் மீது
உலர்ந்த கண்ணீர்க் கோட்டு
கன்னங்களோடும்
உறங்கிப் போனவனை
எழுப்பி
ஊட்ட முயல்கையில்
உள்ளிறங்க மறுக்கும்
சோற்றுருண்டைகளும்.

1 comment:

  1. நிதர்சனமான நல்லதொரு கவிதை.
    வாழ்த்துகள் சார்!.

    ReplyDelete